இயக்குனர் பரதனின் சாட்ட மிகவும் தரமான படைப்பு ,மிகவும் underrated படைப்பு,
காலஞ்சென்ற இயக்குனர் பரதன் அவர்களின் படைப்புகள் மிகவும் நுணுக்கமானவை,கேரளத்தின் கிராமப்புற ஏழை எளியாரின் வாழ்வியலை நுட்பமாகச் சித்தரிப்பவை. மலையாள சினிமாவில் அவரது படங்கள் தனித்தன்மை பொருந்தியவை,
பரதன் அவர்களின் படங்களை காண விழைபவர் அவரின் ஒப்பற்ற கல்ட் க்ளாஸிக்கான சாட்ட (1981) படத்தில் இருந்து துவங்குதல் நன்று. இது மிகவும் அண்டர்ரேட்டட் படமும் வீர்யமான படைப்பும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன்.
இப்படத்தின் மூலக்கதை மலையாள எழுத்தாளர் பி.ஆர்.நாதன் அவர்களுடையது, அவரின் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சாட்ட நாவலை உரிமை வாங்கி திரைக்கதை எழுதச் செய்து ஜான்ஸன் மாஷ் இசை அமைக்க பரதன் அவர்கள் இயக்கினார்.
கல்ட் க்ளாஸிக் என்ற சொல்லுக்கு மிகவும் தகுதி வாய்ந்த படம், படத்தின் ஒளிப்பதிவு விபின்தாஸ் அவர்கள்,நேச்சுரல் லைட்டிங்கில் இவர் படங்கள் கோலோச்சும், படத்தின் துவக்கமான இரவுக் காட்சியே அதற்கு ஒரு சான்று,
மாட்டுக் கொம்பில் பிணைக்கப்பட்ட தீப்பந்தத்தின் ஒளியில் மாடு வியாபாரியான அச்சன்குஞ்சும் அவரது உதவியாளன் பாலன்.கே நாயரும் மறுநாள் விடியலில் பொள்ளாச்சி சந்தையில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு போகும் காட்சி, அத்தனை அற்புதமான துவக்கம்.
வடக்கஞ்சேரி ஜில்லாவில் ஒரு குக்கிராமத்தின் நான்கு மாட்டு வியாபாரிகளான பிறைச்சேட்டன் (அச்சன்குஞ்சு), வேலு (பாலன் கே நாயர்), வைரவன் என்ற கொசரன் (நெடுமுடி வேணு), மாணிக்கம் (அரவிந்தாக்ஷ மேனன்) ஆகியோரின் கதை
மாடு முதலாளி பிறைச்சேட்டனின் அழகிய மனைவி தமயந்தியாக சுபா, அவரின் உதவியாளன் எப்படியேனும் பெரும் பணம் ஈட்டத் துடிக்கும் வேலு, அவனின் அப்பாவி மனைவி சந்திரமதியாக கே.பி.ஏஸி லலிதா , அவளின் வரதட்சணைப் பணத்தை இன்னும் தர முடியாத ஏழை அண்ணன் மாணிக்கம்,
சிலேடை மொழியில் பல தகிடுதத்தம் செய்து பேரம் பேசி படிய வைத்து பெரும் பணம் கைமாற்றி விடும் மாட்டுத் தரகன் கொசரன், அவனிடம் கஞ்சாபீடி வாங்கிக் குடித்து தன் மகளையே கூட்டித் தரும் மாமியார்க் கொடுமையின் முழு உதாரணமான வேலுவின் தாய். அண்ணி மீது உயிரையே வைத்திருக்கும் வேலுவின் தங்கை குமுதம் என
அற்புதமான காஸ்டிங் உண்டு.
ஆங்கிலப் படங்களைப் போல நறுக்குத் தெறிக்க எடிட்டிங் செய்யப் பட்டதால் படத்தின் நீளம் 1-45 மணி நேரம் மட்டுமே.எடிட்டிங் NP சுரேஷ்
இந்நான்கு மாட்டு வியாபாரிகளுக்குள்ளான நட்பு, விரோதம், குரோதம் , வஞ்சம் , பழி தீர்த்தல், பணத்தாசை, பெண்ணாசை இவற்றை எல்லாம் ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்திய படைப்பு இது.
இதற்கும் பரதன் அவர்களின் ஏனைய படங்களைப் போலவே ஏ சர்டிபிகேட் தான் கிடைத்தது, நம் திரையரங்குகளில் மாட்டு வியாபாரியின் இன்ப வெறி என பெயர் மாற்றப்பட்டு வெளியாகியிருந்தாலும் ஆச்சர்யமில்லை.
படத்தில் பாடல்களே இல்லை, ஜான்ஸன் மாஷின் பின்னணி இசை இப்படைப்புடன் மிகுந்த தொலைநோக்குடன் ஒட்டிப் பயணித்து கல்ட் அந்தஸ்தை பெற்றுத் தந்த காரணி.
இப்படத்துக்கான போஸ்டர் , ஒர்க்கிங் ஸ்டில் கூட நம்மிடத்தில் இல்லை.பி.ஆர்.நாதனின் இந்நாவல் இன்றும் கொண்டாடப்பட்டு விற்பனை ஆகிறது,
இப்படம் யூட்யூபில் நல்ல தரத்தில் காணக் கிடைக்கிறது,சப்டைட்டில் இல்லை, திரைப்பட ஆர்வலர்கள் , மாணவர்கள் அவசியம் காண வேண்டிய படம்.
https://youtu.be/wZAD6pndaOg
#pr_நாதன்,#பரதன்,#சாட்ட,#அச்சன்குஞ்சு,#பாலன்_கே_நாயர்,#நெடுமுடிவேணு,#சுபாஷினி,#ஜான்ஸன்_மாஷ்,#விபின்தாஸ்,#கல்ட்,#க்ளாஸிக்,#பிலோமினா