ஆதாமிண்ட வாரியெல்லு |1983 | (ஆதாமின் விலா எலும்பு ) | Adam's Rib
இத்திரைப்படத்தில் பெயரெடுத்த சிவில் கான்ட்ராக்டர் மாமச்சன் (பரத்கோபி) ஊர் மேய்ந்து விட்டு நடுநிசிக்கு வீடு வந்து அலங்கார மேஜை முன்னர் அமர்ந்து அரிதாரம் கலைக்கும் மனைவி அலீஸ்ஸை (ஸ்ரீவித்யா) கண்டிக்கும் காட்சி இது,
மாமச்சன் : நாளைக் காலையில் வந்திருந்தால் போதுமே?
மிகவும் எல்லை மீறுகிறாய், ஊரார் கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டனர், நான் வெளியே இறங்கி மானத்தோடு நடக்க வேண்டும்,
அலீஸ்: ஓ, இப்போது மாமச்சன் முதலாளி பெரிய மானஸ்தன் ஆகிவிட்டீர்கள் இல்லையா?
மாமச்சன் : அலீஸ்ஸே, பிள்ளைகள் பெரியவர்களாகின்றனர் அதையாவது நினைவில் கொள்.
அலீஸ்: பிள்ளைகளா? அவர்கள் உங்கள் பிள்ளைகள் தான் என்று உறுதியாக அறிவீர்களா?
மாமச்சன் : வார்த்தையை அடக்கிப் பேசு
அலீஸ்: புதிய கான்ட்ராக்ட் கிடைக்கவேண்டியும், பில் பாஸ் ஆக்க வேண்டியும் என்னை மலம்புழா , பீச்சி ,கோவளம் என்று பல இடங்களுக்கு அழைத்துப் போனீர்களே, ராமகிருஷ்ணன், விகே நாயர் ,கொச்சு வர்க்கி, தாணுப் பிள்ளை,வைரமூர்த்தி இதில் யாருடையதாகவும் இருக்கலாமே பிள்ளைகள்,
பேசக்கூடாது, எதுவும் பேசக்கூடாது,போடா!!!
மாமச்சனுக்கு பாவமன்னிப்பே கிடையாது அவர் உறைந்து போய் நிற்கிறார்.
இயக்குனர் K.G.ஜார்ஜ் இக்காட்சியில் எத்தனை வீர்யமுள்ள வசனங்கள் வைத்திருக்கிறார் பாருங்கள் , இந்த இருபது வருட flashback ற்கு எந்த காட்சிவடிவமும் இல்லை, வெறும் எட்டு வரி வசனஙகள்
அலீஸ் கணவனிடம் இருந்து எதிர்கொண்ட உளவியல் வன்முறையை நமக்கு கடத்தி விடுகிறது ,
இயக்குனர் K.G.ஜார்ஜ் அவர்களின் இரகள் திரைப்படத்திலும் ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரப் பெயர் அலீஸ் தான்.
ஆதாமின் விலா எலும்பில் இருந்து இறைவன் பெண்ணைப் படைத்தான் என்று கூறி இச்சமூகம் பெண்ணை சுரண்டித்தின்று கொண்டே தான் இருக்கிறது அதில் யாரும் விதிவிலக்கல்ல,
இப்படத்தில் வரும் அலீஸ் (ஸ்ரீவித்யா) , வாசந்தி (சுஹாசினி) , அம்மணி (சூர்யா) மூன்று பெண்கள் கதாபாத்திரங்களும் பெண்கள் மீதான ஆடவரின் சுரண்டலை, உளவியல் மற்றும் உடலியல் வன்முறைகளைச்
சித்தரிக்கிறது,
அலீஸ் தன் கணவனால் வஞ்சிக்கப்பட்டவள் இப்போது கணவனை வஞ்சித்து வருகிறாள், பகலில் குடிக்கிறாள், மாதர் சங்கம் செல்கிறேன் என்று ஆர்கிடெக்ட் மம்மூட்டி அலுவலகத்தில் சென்று தினமும் அவரை சம்போகித்து வருகிறாள்.
அலீஸ் வீட்டு வேலைக்காரி அம்மணி முதலாளி மாமச்சனுக்கு நடுநிசியில் முந்தி விரிக்கிறாள், "ஓத்தாருக்கு ஒருநாள் இன்பம் பொறுத்தார்க்குப் பத்து மாதம் தொல்லை" என்ற சொலவடை மெய்யாகி ,அவள் கர்ப்பமாகிறாள் அப்போது மாமச்சன் தன் ஜீப் டிரைவர் / அடியாளை அழைத்து அவன் மேற்பார்வை பார்க்கும் அணைக்கட்டு கட்டுமான தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைக்கிறார், பிள்ளைப்பேறின் போது அவன் இவளை அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு போகிறான், குழந்தை அப்பன் பெயர் தெரியாமல் பிறந்ததால், அம்மணி அதை அனாதை இல்லத்தில் விடுகிறாள், இவளை இரவில் இரு ஆடவர் துரத்த, காப்பாற்றிய போலீசார் அம்மணியை அபலைகள் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்., அங்கு லேசாக மனநிலை பிழர்ந்த அம்மணி ஒருநாள் அபலைக் கூட்டத்துடன் தப்புகிறாள்.
வாசந்தி திருவனந்தபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் எழுத்தர், தாய்மாமன் மகனை மணந்தவள், மாமனார் இறந்து போன பிறகு மாமியார் கொடுமை சகிக்கவில்லை,மகனுக்கு தாதி, சமையல்காரி, வேலைக்காரி, சம்பாதிக்கும் எந்திரம், பாலியல் இச்சை தீர்க்கும் எந்திரம் என பல பல பணிகள்,
கணவன் பல வேலைகள் மாறியவன், கடைசியாக சேர்ந்த தினப்பத்திரிக்கை பணியையும் பிடிக்காமல் விட்டு வந்தவன், தினமும் பகலில் அப்படி தூங்குகிறான், உணவு உண்ண அழைக்கும் நேரத்தில் குடித்துவிட்டு வர மாதக்கடைசியிலும் இருபத்தைந்து ரூபாய் கேட்கிறான்,
நடுநிசியில் வாசந்தியை எழுப்பி கட்டாய உறவு கொள்கிறான், இவர்கள் நால்வர் வயிறு போற்ற வேலைக்குச் செல்லும் வாசந்தியை சந்தேகித்து அடிக்கிறான்,
இவளுக்கு முதலில் மறதி நோய் பீடிக்கிறது,வேலைக்கு விடுப்பெடுக்கிறாள், magical realism போல சுவற்றில் சட்டமிட்ட படத்தில் இருந்து இறங்கி வந்த வாசந்தியின் மாமனார் இவளுக்குள் புகுந்து மாமியாரை புருஷனை கண்டிக்கிறார், புத்தி சொல்கிறார்.
கணவன் வேணு நாகவல்லிக்கு எதைப்பற்றியும் கவலையில்லை, மனைவியை அடித்து உதைக்கிறார், இறுதியில் வாசந்தி மனம் பிழர்ந்த நிலையில் அரசு மனநோய் மருத்துவமனையில் கணவனால் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறாள்.
அலீஸ்ஸின் பதின்ம வயது மகள் விரும்பியவனுடன் பள்ளியில் இருந்து ஒளித்தோடிப் போகிறாள், பெரிய இடத்து தொடர்புகள் பலவும் கொண்ட மாமச்சன் தன் எம் எல் ஏ நண்பர் திலகன் உதவியால் அன்று இரவே ஒரு லாட்ஜில் அறை எடுத்த மகளை புஷ்பம் போல மீட்டுக் கொண்டு வருகிறார்.
அலீஸ் கணவனை பிரியக் கேட்கிறாள், ஆனால் மாமச்சன் மனைவிக்கு விவாகரத்து தருவதில்லை, பள்ளி பாதிரியாரை அலீஸ் வீட்டிற்கு மத்தியஸ்தம் செய்யக் கூட்டி வருகிறார்,பாதிரியார் மணமுறிவு மதத்தின் படியும் பள்ளியின் திருமண சட்டத்தின் படியும் எதிரானது என்கிறார்,
அலீஸின் அண்ணன் அண்ணி அம்மா அப்பா யாரும் இவளை பிறந்த வீட்டில் வாழ விடுவதில்லை, வேறு போக்கிடமின்றி அவனுடன் வீடு வருகிறாள் அலீஸ், தன் காதலன் மம்மூட்டியிடம் தஞ்சம் கேட்டு அவராலும் புறக்கணிக்கப்படுகிறாள்.
இரவு எப்போதும் உண்ணும் தூக்கமாத்திரைகளை டாக்டர் சீட்டு கொண்டு பல கடைகள் ஏறி அதிக அளவு வாங்கியவள், அதை விழுங்கி வீட்டில் உலாத்துகிறாள், காதலனுக்கு போன் செய்ய ரிசீவர் எடுத்து பிடிமானம் இன்றி விட்டுவிடுகிறாள், வாசலுக்கு வந்து அப்படியே சரிந்து விடுகிறாள், அவளின் இரு வளர்ப்பு நாய்களும் குரைத்து மனிதர்களை அழைத்தபடி இருக்கின்றன.
இந்த மூன்று பெண்களும் வாழ்நாள் முழுதும் பல்வேறு வகையான ஆணாதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள், அவர்கள் எவ்வாறு அதிலிருந்து விடுபட முயற்சித்து தோற்கிறார்கள் என்பது தான் இப்படம் சொல்லும் பாடம் , இது போல பொட்டில் அடித்தது போல இங்கே தமிழில் படம் செய்ய முடியாது.
ஆதாமிண்டே வாரியெல்லு அனைவரும் பாருங்கள், the great Indian kitchen ,பிரியாணி படங்கள் மலையாளத்தில் வருவதற்கு பாதை அமைத்துத் தந்த படம் என்றால் மிகை இல்லை.இப்படத்தின் ஒளிப்பதிவு ராமசந்திரபாபு, இசை M.B.சீனிவாசன் , இப்படத்தின் மூலக்கதை கள்ளிக்காடு ராமசந்திரன், இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான கேரள அரசு விருதும் , சிறந்த திரைக்கதைக்கு இயக்குனர் K.G. ஜோர்ஜுக்கு கேரள அரசு விருதும் கிடைத்தது,சிறந்த பாடலுக்கான கேரள அரசு விருது கவிஞர் onv குருப் அவர்களுக்கும் கிடைத்தது.
கண்ணீராற்றில் முங்கி என்ற ஒரு அருமையான பாடல் படத்தில் இடம் பெறுகிறது, கவிஞர் onv குருப் இயற்றி, பாடகி செல்மா ஜோர்ஜ் பாடியது.
https://youtu.be/RV7ovNWii-g
#KG_ஜார்ஜ், #KG_ஜோர்ஜ்,#ஸ்ரீவித்யா,#பரத்கோபி,#அலைஸ்,#மாமச்சன்,#சிவில்_கான்ட்ராக்டர்