அடியொழுக்குகள் ( ஆழ் நீரோட்டம்) 1984 எம்.டி. வாசுதேவநாயரின்
கதை திரைக்கதையில் ஐ.வி.சசி இயக்கத்தில் காஸினோ சினிமாஸ் பேனரில் வெளியான பெருமைமிகு படைப்பு.
மிக அருமையான திரைக்கதைக்கு இலக்கணம் இப்படம், இப்படத்தை மிகவும் சிலாகித்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் தன் பிரதான சீடர் இயக்குனர் அமீர்ஜானை வைத்து கதை திரைக்கதையில் எந்த ஒரு சிறிய மாற்றமும் செய்யாமல் முறையாக உரிமை வாங்கி வண்ணக்கனவுகள் (1987 )என்ற பெயரில் தமிழிலும் தெலுங்கிலும் எடுத்தார், தமிழில் இது 100 நாட்கள் ஓடியது.
மலையாளத்தில் இக்கதை நிகழும் கதைக்களமான கொச்சியை மாற்றாமல் தமிழிலும் அதே லொக்கேஷன்களை உபயோகித்திருந்தார், வசனங்களை தமிழில் வைரமுத்து எழுதினார்,
மலையாளத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவு வின்சென்ட் மாஸ்டரின் மகனான ஜெயனன் வின்சென்ட்,மிகவும் புதுமையானதும் இன்றும் பேசப்படும் ஒளிப்பதிவும் கூட. தமிழில் சி.எஸ். ரவிபாபு,
மலையாளத்தில் பின்னணி இசை ஷ்யாம் அவர்கள், தமிழில் வி.எஸ். நரசிம்மன் .தமிழ் மலையாளம் இரு வடிவங்களிலும் பாடல்களே கிடையாது.
படத்தின் கதை ,கொச்சி துறைமுகத்தில் படகோட்டி வரும் மம்முட்டி ஒரு அனாதை, துறைமுகக் கொச்சியில் ஒரு சொல்லாடல் உண்டு, கப்பல்காரன்ட மகன், கொச்சையாகச் சொன்னால் விருந்தாளிக்குப் பிறந்தவன், மம்முட்டியின் பிறப்பு அப்படிப் பட்டது, அவரது வளர்ப்புத்தம்பி ரகுமான்.
இவரிடம் தஞ்சம் புகும் சீமா, தன் அக்கா கணவன் தன் அக்காவை பிராத்தலில் தள்ளியிருக்க தானும் அப்படி சீரழிந்து விடுவோமோ என அஞ்சி காயலில் விழுந்து தற்கொலைக்கு முயன்று மம்முட்டியால் காப்பாற்றப் பட்டு அவர் வீட்டில் அடைக்கலம் தரப்பட்டிருக்கிறார்.
தன் வீட்டை அடமானம் வைத்து மஸ்கட் செல்ல விசா வேண்டி 15000 ரூபாய் தந்து ஏமாந்து போன மோகன்லாலும் இப்போது மம்முட்டியிடம் தஞ்சம் அடைகிறார்.
இனி இவர்களுக்குள் நிகழும் தூய நட்பு, பாசப்போராட்டம் , தியாகம் தான் மீதிக் கதை,படம் பார்க்கையில் இந்த பாவங்களின் ( எளியார்) ஒன்று கூடல் பிதாமகன் படத்தின் பாவங்களை நினைவூட்டி என்னை கலங்கடித்தது. ஷயாம் அவர்களின் பின்னணி இசை இப்படத்தில் மற்றொரு கதாபாத்திரம்.
மம்முட்டியின் நடிப்பில் இப்படம் மணிமகுடம் . கார்த்திக்கும் தமிழில் மிக நன்றாக நடித்திருந்தார்,
மோகன்லால் கதாபாத்திரத்தில் இங்கே முரளி, வின்சென்ட் செய்த பிம்ப் அக்கா கணவன் வேடத்தில் இங்கே நாசர் , சீமா கதாபாத்திரத்தில் இங்கே ஜெயஸ்ரீ என அங்கும் இங்கும் அட்டகாசமான காஸ்டிங் கொண்ட படம்.
அடியொழுக்குகள் படம் திரைப்படக் காதலர்கள் அனைவரும் காணவேண்டிய படைப்பு. போர்ட் கொச்சியை மையமாக்கி நகரும் கதைகளில் இப்படம் மிகவும் முக்கியமானது, அதன் இருண்மையை உள்ளது உள்ளபடி காட்டியதில் ஜெயனன் வின்சென்டின் பணி மகத்தானது
எம்.டி.வாசுதேவ நாயர் மற்றும் இயக்குனர் ஐ.வி சசி இணைந்து நிகழ்த்திய மேஜிக் இப்படம், இப்படத்தின் பாதிப்பில் இருந்து ஒருவர் மீண்டு வர நாள் பிடிக்கும்.
https://youtu.be/2AXGOrwvprQ