காட்டுக்குதிரா (1990 )மலையாள திரைப்படத்தில் நடிகர் திலகன் கொச்சுவாவன் என்ற முக்கியமான கதாபாத்திரம் செய்திருந்தார்,
இவர் ஈழவர் சமூகம், இவரது தந்தை பெயர் கொச்சுராமன் (v.k.ஸ்ரீராமன்) அவர் அவ்வூரின் கோவிலகம் வீட்டின் தென்னை மரங்களில் தென்னை மரமேறி கள் இறக்கும் வேலை செய்கிறார்.
கோவிலம் என்பது நம்பூதிரி வீட்டைக் குறிக்கும், சாதிபடிநிலையில் உயர்ந்த சாதியினர், இவர்கள் முன் மற்ற சாதியினர் யாராக இருந்தாலும் ஜெயலலிதா முன் நம் அமைச்சர்கள் நின்றது போல கூன் போட்டு வளைந்து தான் நிற்கவேண்டும், அவர்களைக் கண்டவுடன் ஒளிந்து நின்று தான் பதில் சொல்ல வேண்டும், நம்பூதிரி வீட்டில் சத்ய ஊண் பரிமாறி இவர்கள் சாப்பிடுகையில் கீழே மணல் தரையில் விரித்த வாழையிலையில் தான் அமரவேண்டும், நம்பூதிரி அருகே வந்தாலும் இவர்கள் ஐந்தடி பின்னால் போக வேண்டும், தொட்டுக்கூடாயிமா, தீண்டக்கூடாயிமா போன்ற அராஜகங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் இக்கதை துவங்குகிறது.
கொச்சு வாவன் எட்டு வயது சிறுவன், அவர் தந்தையை நம்பூதிரி வீட்டின் மூத்த மகளான மனோரமா தம்புராட்டி அவரின் தேக்கு போன்ற வாளிப்பான தேகத்திற்காக விரும்புகிறாள்,
நம்பூதிரி இல்லத்துப் பெண்கள் அப்போது நம்பூதிரி அல்லாத யாரையும் பார்ப்பதே தண்டனைக்குரிய குற்றம், ஆனால் மனோரமா தம்புராட்டி வீட்டு குளத்தில் நீராடுகையில் பக்கத்து தென்னை மரத்தில் கள் இறக்கும் கொச்சு ராமனுக்கு சமிஞ்யைகள் தந்து ஆசை காட்டுகிறாள்,
கள் இறக்குபவர்கள் ராவில் (காலை ) மற்றும் அந்தியில் (இரவு ) இறக்குவர், கொச்சு ராமன் அந்திக்கு கோவிலகத்தின் தென்னை மரம் ஏற எத்தனித்தவரை மனோரமா தம்புராட்டி கைபிடித்து அழைத்துப் போய் தன் பள்ளியறை செல்கிறாள்,
அங்கு ஆலிங்கனம் துவங்கியது தான் தாமதம், தம்புராட்டியின் எஜமான விசுவாசம் கொண்ட பணிப்பெண் சென்று வலிய தம்புரானிடம் (மார்தாண்ட வர்மா )கோள் சொல்லி பள்ளி அறைக்குள் அழைத்து வந்து விடுகிறாள்.
வலிய தம்புரான் பள்ளி வாள் ஏந்தி பரிவாரங்களுடன் வந்தவர் மகள் மனோரமாவை பிறப்புறுப்பில் ஓங்கி மிதித்து தள்ளுகிறார், கொச்சு ராமனை தலை,மீண்டும்,கைகள், கால்கள் என தனித்தனியே வெட்டி தென்னை மரத்தின் கீழே போட்டு தென்னை ஓலைகளால் மூடி வைக்கிறார்.
விடியலில் ஊரே ஓடிவந்து வேடிக்கைப் பார்க்கிறது,யாரும் கொச்சுராமன் குடும்பத்துக்காக எதுவும் பேசுவதில்லை.சிறுவன் கொச்சு வாவன் தந்தை கொச்சு ராமன் துண்டாடப்பட்ட தலையை வெறித்துப் பார்ப்பதில் இருந்து இப்படத்தின் titles துவங்குகிறது.
நிகழ்காலத்தில் கொச்சுவாவனை ஐம்பது வயதுக்காரனாக பார்க்கிறோம், கம்யூனிச புரட்சிக்கு பின் கேரளத்தில் சகலமும் மாறிவிட்டிருக்கிறது, இன்று கொச்சுவாவன் ஊரின் பெரிய பணக்காரர், பார்ப்பதையெல்லாம் தன் பணபலத்தால் வாங்கிவிட்டிருக்கிறார், பணம் கிடைக்கும் என்றால் எந்த தொழிலும் இறங்கி செய்பவர், ஊரார் இவரைப் பார்த்து நடுங்குகின்றனர்.
தன் தந்தையின் சாவுக்கு பழிவாங்க அந்த வாழ்ந்து கெட்ட கோவிலகம் வீட்டை விலைக்கு வாங்குகிறார், அந்த நொடித்துப்போன குடும்பத்தில் மிஞ்சியிருப்பது தந்தையிடம் மிதி வாங்கி முடக்குவாதம் வந்து விழுந்த மனோரமா தம்புராட்டி, அவர் கணக்குப்பிள்ளையான ராமன் நாயர்(பாபு நம்பூதிரி), கொச்சு தம்புராட்டியான அஞ்சு , இவர்கள் கோவிலகம் வீட்டை கொச்சு வாவனுக்கு பெருங்கடன்களை அடைக்க வேண்டி விற்று விட்டாலும் இவர்கள் வீட்டை காலிசெய்து செல்ல போக்கிடம் இல்லை, அதனால் கோவிலகத்தின் ஒரு அறையில் தங்கிக் கொள்கின்றனர்.
கொச்சுவாவன் பெரிய பணக்காரன் என்றாலும் சட்டை அணியமாட்டார், செருப்பு அணிய மாட்டார், வீட்டில் உணவு மேசையில் அமர்ந்து உண்ண மாட்டார், படுக்கையில் படுக்க மாட்டார், தரையில் தான் படுப்பார், இவரது பிரதான தொழில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, ஏழை முதல் பணக்காரன் வரை தன் சாராயக்கடையில் வந்து குடிக்க அப்படி மெனக்கெடுகிறார்.
நல்ல சம்பளம் தந்து பாலகிருஷ்ண மேனன் (இன்னசண்ட் )என்ற உயர்சாதி கணக்கப்பிள்ளையை உடன் வைத்து அலைகிறார், அவருக்கு டை கட்டி விட்டு அழகுபார்க்கிறார், அவர் டையை புழுக்கத்துக்காக தளர்த்தியிருக்கையில் அப்படி ஏசுகிறார்,தவிர எதிராளியை ஏச முடியாத கட்டத்தில் அவர் காதுகளில் கேட்க முடியாத வசைகளால் ஏசுகிறார்.
கள்ளுக்கடைகளுக்கு திடீர் விஜயம் செய்து கள்ளின் தரம், மீன் கறியின் தரம் உப்பு, புளி, எரிவு சோதிக்கிறார்.
கோவிலகம் வீட்டை முதலில் சாராயக்கடையாக்க எண்ணுகிறார், கோவிலகம் வீட்டின் குளத்தில் எஞ்சிய கள்ளைக் கொண்டு வந்து கொட்டி பாழடிக்க நினைக்கிறார், இஷ்டம் போல குப்பையாக்க எண்ணுகிறார்.
கொச்சுவாவன் மகன் மோகனும் (வினீத் ) கோவிலகத்தின் இளைய தம்புராட்டியும் (அஞ்சு ) காதலிக்கின்றனர், ஆனால் கொச்சு வாவன் அதை விரும்புவதில்லை, அவருக்கு தன் பிரதிகாரத்திற்கு தடையாக இருக்கும் யாருமே சிறு புல் தான்.
கோவிலகத்தின் அந்த கடைசி மனிதர்கள் இவரது செயல்கள் கண்டு துடி துடிக்க காண்கையில் குரூர மகிழ்ச்சி கொள்கிறார், கோவிலகம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி, அங்கேயே ஒரு குளம் வெட்டி அந்தக் குளத்தில் இருந்து ஒரு கை நீர் அள்ளிப் பருகிய பின்னரே தன் பழிவாங்குதலை முடிப்பேன் என்றிருக்கிறார் கொச்சுவாவன்.
இதில் யார் இடைபட்டாலும் இறந்தாலும் அவரை ஒன்றும் செய்வதில்லை, சிறு வயதில் மனதில் இறங்கிய இடி அவரை இப்படி கல்லாக்கிவிட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் கதையை எழுதியது மூத்த நாடக ஆசிரியர்S. L. Puram, இவரின் புகழ்பெற்ற காட்டுக்குதிரா என்ற மலையாள மேடை நாடகத்தை தழுவிய இத்திரைப்படத்தின் இயக்கம் p.g.விஸ்வாம்பரன் , இசை ஜான்ஸன் மாஸ்டர்.
நடிகர் திலகன் நடித்த வேடத்தில் மேடை நாடகத்தில் நடித்தது நடிகர் ராஜன்.பி.தேவ் , இந்த character sketch ஐ அவர் மகாபிரபு திரைப்படத்தின் அரசியல்வாதி ஷண்முகவேல் கதாபாத்திரம் செய்கையில் பயன்படுத்தியிருந்தார்.
படத்தில் எப்போதும் யானையை அடக்கும் அங்குசங்களை கையில் ஏந்தி திரிபவர் கோவிலகத்தின் கணக்கப்பிள்ளை பாபு நம்பூதிரி, பத்து யானைகள் வளர்த்த கோவிலகம் நொடிந்து ஒற்றை யானை மட்டுமே இருந்த நிலையில் , கோவிலக வீட்டில் எதைப் பிடுங்கினால் லாபம் என அலையும் தரவாட்டு உறவினர், யானைக்கு சீப்பு சீப்பாக வாழைப்பழங்கள் , கட்டுகட்டாக கரும்பு, மண்டை மண்டையாக வெல்லக்கட்டிகள் திடீர் பாசத்தில் கொண்டு வந்து தர,பட்டினியில் இருந்த யானை அதைத் தின்றதும் மயங்கிச் சரிந்து இறக்கிறது, யானையின் தந்தத்தை வெட்டி எடுத்துக் கொண்ட உறவினர்கள் ஸ்தலம் விடுகையில் இவரிடம் அங்குசங்களைத் தருகின்றனர், அடுத்த முறை நீ யானை வாங்குகையில் இது உனக்கு உதவும் என அக்கறையில் தந்ததாக அவர் தன்னை நக்கலாக கேட்கும் திலகனிடம் விவரிக்கிறார்.சரியான அவல நகைச்சுவைக் காட்சி.
படத்தில் கணக்கப்பிள்ளை இன்னசண்ட் ஒரு காட்சியில் கள் குடிக்கும் காட்சியில் அப்படி ரசித்து குடித்திருக்கிறார், தொட்டுக் கொள்ள மத்தி மீன் பொலிச்சது, அப்படி ஒரு காட்சி பார்ப்பவருக்கு கள் குடிக்க ஆசை வரும்.
இப்படம் யூட்யூபில் சப்டைட்டில் இல்லாமல் கிடைக்கிறது, கண்டிப்பாக பாருங்கள்,நடிகர் திலகன் ரசிகர்கள் தவற விடக்கூடாத திரைப்படம்.
#காட்டுக்குதிரா,
#திலகன்,#பாபு_நம்பூதிரி,#கொச்சு_வாவன்,#கோவிலகம்.