இடவழியிலே ஒரு பூச்ச மிண்டா பூச்ச (சந்திலே ஒரு பூனை பேசாப்பூனை )|1979
எழுத்தாளர் M.T. வாசுதேவநாயரின் கதை திரைக்கதையில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான அற்புதமான படைப்பு இது.
இப்படத்தின் திரி துரோகம் , அன்பு மனைவியின் துரோகத்திற்கு பின் அவளை கணவன் அடியோடு புறக்கணித்தால் அது எத்தனை கொடூரமாக தண்டனையாக இருக்கும் என்று படம் நன்கு உரைக்கிறது.
நாம் unfaithful (2002)ஹாலிவுட் படம் பார்த்திருப்போம் ,அதில் Richard gere மனைவி diane lane ன் துரோகத்தை துப்பறிவாளன் மூலம் அறிந்தவர் அவளின் புதிய காதலனை நேரில் சென்று பார்ப்பார், அவன் இவருக்கு தன் வீட்டைச் சுற்றிக்காட்டுகையில் விக்கித்து உணர்ச்சி வசப்பட்டு இவர் மனைவிக்கு இவர் பரிசளித்த snow globe அங்கிருப்பது கண்டு தாங்கமுடியாமல் அதைக்கொண்டு அவன் தலையில் அடித்துக் கொலை செய்துவிடுவார், இப்படத்தின் மூலப்படைப்பான ஃபரெஞ்சு வடிவம் unfaithful wife 1969 படத்திலும் அச்சு அசலான இதே கதை தான்,
இந்த "இடவழியிலே ஒரு பூச்சா மிண்டா பூச்சா" கதையில் எழுத்தாளர் M.T. வாசுதேவநாயர் மனைவியின் துரோகத்துக்கு வைத்த treatment மிகவும் அபாரமானது, தனக்கு துரோகம் செய்யும் மனைவி ரோஹினி (ஸ்ரீவித்யா ) காதலன் வீட்டின் கதவு திறந்து வெளியே வரும்வரை காரில் காத்திருந்த கணவர் ராஜு(மது ),
ரோஹினி Iam ready , வீட்டுக்குப் போகலாமா? என்று கேட்டு அவளைக் காரில் ஏற்றிக் கொள்கிறார்.
பின்னர் காதலியை வழியனுப்பி விட்டு தன்னிடம் மாட்டிக்கொண்டு விக்கித்து நிற்கும் பாக்யநாதனிடம் (M.G. சோமன்) நேரே சென்று thank you என்கிறார்.
குற்ற உணர்வு கொண்டு அழுதபடி வரும் மனைவியை நாம் தனியாக சென்று சற்று பேசுவோம் என்று கடற்கரைக்கு கூட்டிப் போகிறார், நம் மகளை போர்டிங் பள்ளியில் சேர்க்கப் போகிறேன், என் IAS பணி ஐ சாக்காக வைத்து ஊர் ஊராக தான் போய்க்கொண்டே இருப்பேன், உனக்கு என்னால் எந்த தடையுமில்லை, உனக்கு இந்த கல்லூரி பேராசிரியை வேலை உண்டு போதிய வருமானம் உண்டு என்றாலும் மாதம் ஒண்ணாம் தேதி உனக்கு ஜீவனாம்சம் அனுப்பி விடுவேன், உன்னை நாங்கள் இனி தொந்தரவு செய்ய மாட்டோம், என்னை என் மகளை நீ பார்க்கக் கூடாது ,இது தான் நமக்கான ஒப்பந்தம், எத்தனை அழ வேண்டுமோ அழுதுவிடு, அதன் பிறகு அதைப் பார்க்க நான் உன்னருகில் இருக்க மாட்டேன் என்கிறார் கணவர் மது, கால் பிடித்து கலங்கி கதறும் ஸ்ரீவித்யாவை get up என்று அதட்டி வீட்டிற்கு கூட்டிப் போனவர்,தன் வீட்டை அவளுக்கு விட்டு தன் மற்றும் மகள் துணிமணிகளை பெட்டியில் அடுக்கி காரில் கட்டி தன் விசுவாசமுள்ள சமையல்காரர் சங்கராடியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலம் விடுகிறார்.போகையில் மகள் நடந்தது ஏதும் அறியாமல் டாட்டா காட்டிக் கொண்டே இருக்கிறாள்.
இந்தப் படத்தில் ஸ்ரீவித்யா செய்த இந்த படிதாண்டும் பத்தினி கதாபாத்திரம் நம் தமிழ் ரசிகர்கள் அறியாத ஒன்று, கணவன் தந்த விடுதலைக்குப் பின் காதலன் IFS துறை ஊழியனான M.G. சோமனிடமே திரும்பிச் செல்கிறார் , அவர் இவரை சற்றும் மதிப்பதில்லை, அலுத்துவிட்டது போல காட்டிக் கொள்கிறார்,பன்றிக்கு முன் முத்துக்களை சிதற விட்ட நிலை இவருக்கு, தோளில் கை வைத்து அடுத்த ஸ்ரீவித்யாவை கையை தட்டி விடுகிறார், ஸ்காட்ச் ஊற்றி பருகியபடி சொல்கிறார் கிழக்கு கோவிலகம் தரவாட்டு வீட்டின் ஒரே பெண் நீ, அதே போல ஒரு கொழுத்த தரவாட்டின் வாரிசுகளுக்கு புத்தகப் பை சுமக்கும் பணிக்காரச் சிறுவன் நான், தினமும் புத்தகப் பை சுமந்துவிட்டு பாடம் கவனிக்கும் என்னையும் உயிராக மதித்து ஆசிரியர் ஒருவர் என்னை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார், கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பில் படித்தேன்,தங்கபதக்கம் வாங்கினேன், IFS எழுதி தேர்வாகி வேலையில் சேர்ந்தேன், எனக்கு நேர்வழியில் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷம் போன்ற உன்னை குறுக்குவழியில் சென்று அடைய முயற்சித்தேன், உன் கவிதைகளை புகழ்ந்தேன் ,அழகை வர்ணித்தேன், நீ புஷ்பம் போல விழுந்தாய், அடைந்தேன், நீயும் இன்று என் பின்னால் இப்படி அலைகிறாய், கோவிலகத்தின் சிறுவர்க்கு புத்தக மூட்டை சுமந்தவனின் சேவை உனக்கு என்றும் கிடைக்கும்,நீ சுகிக்க வேண்டி அழைக்கையில் வந்து சேவை செய்கிறேன் என்கிறார், ஸ்ரீவித்யா அவரை ஆத்திரத்தில் அறைகிறார்.
இப்படத்தில் IAS அதிகாரி மதுவுக்கு நிறைய நளினமான ஆங்கில வசனங்கள் இருந்தன, ஸ்ரீவித்யா இந்த MA பட்டதாரி பெரிய பணக்கார தரவாட்டுப் பெண் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்தார், இப்படத்தில் இவர் கவிதாயினி, மாத்ருபூமிக்கு கவிதைகள் எழுதி அனுப்புகிறார், அக்கவிதைகள் ஜானகியம்மா குரலில் அழகாக பாடல்களாக உருமாறுகின்றன, ஸ்ரீவித்யாவின் வளர்ந்த மகளாக அம்பிகா நடித்துள்ளார், இவரின் திருமணத்தின் ஏற்பாடுகளின் போது தான் படமே துவங்குகிறது, தன்னை ஒருமுறைப் பார்க்க போர்டிங் பள்ளிக்கு வந்த அம்மாவை இவர் முகம் கொடுத்தே பேசுவதில்லை, அவர் தந்த பாக்கெட் மனியை கூட வாங்குவதில்லை, பெரும் அவமானத்துடனே திரும்புகிறார் இவர் , திருமணத்தன்று முன்னாள் கணவர் வீட்டுக்கு போன் செய்து திருமணத்துக்கு வந்தே தீருவேன் , ஓரமாகவாகவேனும் நிற்கிறேன் என கெஞ்சியவரை கணவர் மதுவும் வேலைக்காரர் சங்கராடியும் விடுவதில்லை, கையெடுத்துக் கெஞ்சுகின்றனர்,
நீ இத்தனை வருடங்களுக்குப் பிறகு நேரில் வந்தால் இத்தனை நாள் நான் கட்டமைத்து வைத்த single parent பிம்பம் சிதைந்து விடும், புதிய பொய்கள் சொல்ல என்னால் ஆகாது என இவர் தங்கியிருந்த hotel அறைக்கு நேராக சென்று கணவர் மது கறாராக தீர்க்கமாக சொல்கிறார்,
அப்படியே அடங்கிப் போகிறார் ஸ்ரீவித்யா, தினம் உபயோகிக்கும் தூக்க மாத்திரை டப்பாவில் இருந்த அத்தனை மாத்திரைகளையும் வாயில் கவிழ்த்து நீர் அருந்தி படுக்கையில் சரிந்தவர், ஸ்விட்ச் பாக்ஸை குறுகுறுவென பார்த்தவர் எழுந்து போய் D என்று எழுதிய ஸ்விட்சை தட்டிவிட்டு வந்து படுக்கையில் சரிகிறார், வெளியே கதவின் மேல் சிகப்பு பின்னணியில் do not disturb என்ற பலகை ஒளிர்கிறது.
படம் முழுக்க திருவனந்தபுரத்தில் நடக்கிறது, படத்தின் ஒளிப்பதிவு மெல்லி இரானி, படத்தின் இசை M.B.சீனிவாசன் அவர்கள், படத்தில் கவிஞர் யூசூஃப் அலி கேசேரி இயற்றிய மூன்று அற்புதமான பாடல்கள் உள்ளன.
நடிகை ஸ்ரீவித்யா நடித்த சுமார் 800 திரைப்படங்களில் அவர் நடிப்பின் முழு வீச்சை அறியத் தந்த சுமார் 700 திரைப்படைப்புகளை தமிழ் ரசிகர்கள் நாம் பார்த்திராதது எத்தனை துர்அதிர்ஷ்டமானது.
படத்தில் மகளிர் கல்லூரி ஆங்கிலப் பேராசியையான இவரை சக தோழிகள் மிண்டாப் பூச்ச என்கின்றனர், அதாவது பேசாத பூனை, சாதுவான பூனை ,இப்படித்தான் இந்தப் படத்தின் தலைப்பு ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா என்ற பொருட்பட வைத்துள்ளனர் என நினைக்கிறேன், படத்தில் சிந்தனையில் இருக்கும் இவரிடம் வந்த மாணவிகள் குசும்பாக மேடம் nymphomaniac என்றால் என்ன என்று கேட்க, அவர்களின் குஸ்ருதி அறிந்த இவர் சுதாரித்துக் கொண்டு போய் டிக்ஷ்னரியை எடுத்துப் பார் என்று பதிலுரைக்கிறார்.
இப்படத்திற்கு பிரபலமான தோற்றம் மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட சிறந்த படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது
1979 ஆம் ஆண்டில் இயக்குனர் ஹரிஹரன், பிரியதர்சினி பிலிம்ஸிற்கு கிடைத்தது.
சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதும் ஃபில்ம்ஃபேர் விருதுகளும்
1979 ஆம் ஆண்டில் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்தது.
சிறந்த இசை அமைப்பாளருக்கான கேரள மாநில திரைப்பட விருது
1979 ஆம் ஆண்டில் எம். பி. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு கிடைத்தது
விவாஹநாளில் பூவணிப்பந்தல் என்ற அழகிய பாடல் ஜானகியம்மா பாடியது
https://youtu.be/OduyDaEjpn8
விஷ்வமஹாஷேத்ர சந்நிதியில் என்ற அழகிய பாடலும் ஜானகியம்மா பாடியது
https://youtu.be/ptakagiq0LU
கல்யாணி அம்ருத தரங்கினி என்ற அற்புதமான ஆலாபனைப் பாடல் P.ஜெயச்சந்திரன் பாடியது.
https://youtu.be/L-jSTMIkDnw
படம் சப்டைட்டில் இன்றி யூட்யூபில் பார்க்கக் கிடைக்கிறது.
https://youtu.be/YGOH5DTXL_o
#MT_வாசுதேவநாயர்,#ஸ்ரீவித்யா,#மது,#MG_சோமன்,#சங்கராடி,#அம்பிகா,#ஹரிஹரன்,