மதனோல்சவம் மலையாள திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியானது,கொடைக்கானல் இதன் கதைக்களம்,கமல்ஹாசன் சாக்லேட் பாய் கதாநாயகன் இமேஜை உடைத்து திருமணமான இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து நிரூபித்த படம் இது,இப்படம் நடிக்கையில் அவருக்கு வயது 24.
படத்தில் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசையில் ஆறு இனிய பாடல்கள் உண்டு, படத்தின் அருமையான ஒளிப்பதிவு J.வில்லியம்ஸ்,இவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ் கணவர்,படத்தில் முக்கியமான டாக்டர் கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் ஜெயன் நடித்தார்.
படத்தின் துவக்கமே rich girls சூழ நாயகி எலிசி அறிமுகம் ஆகிறார், கமல்ஹாசன் கல்லூரி மாணவர், பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை,இவர் மோட்டார் கார் ரேஸ் வீரரும் கூட, தாயில்லாதவர்,அப்பா திக்குரிசிக்கு இரண்டாம் மனைவி உண்டு, ரேஸ் ட்ராக்கில் இவரிடம் ஆட்டோ க்ராஃப் வாங்க வந்த எலிசியை (ஜரீனா வஹாப்) இவருக்கு மிகவும் பிடிக்க, அவர் டெலிஃபோன் ஆபரேட்டராக இருக்கும் அட்லாண்டிக் ஹோட்டலுக்கு தினமும் சென்று பார்த்து காதலிக்கிறார்,
எலிசி ஆங்கிலோ இந்தியப் பெண், அவர் தந்தை டிகுரூஸ் (சங்கராடி) ஒரு கார் மெக்கானிக் ஷெட் வைத்து கார்களை பழுது பார்க்கிறார்,மிகவும் பிடிவாதமும் கோபமும் கொண்டவர், மகள் எலிசியை தினமும் வீட்டிற்கு பைக்கில் கொண்டு விடும் கமலை இவருக்கு பிடிக்கவில்லை, கமல் இவர் வீடு ஏறி பெண் கேட்க அவர் உன் அப்பா வந்து படியேறி பெண் கேட்டால் என் முடிவை அவரிடம் சொல்கிறேன் என பிடிவாதம் பிடிக்கிறார்.
கமல் தன் அப்பாவிடம் சம்மதம் வாங்க எலிசியை வீட்டிற்கு அழைத்துப் போகிறார், அப்பாவோ பணக்கார செருக்கில் எலிசியை அவமானப்படுத்த ,இவர் வீட்டை விட்டு காதலியுடன் உடுத்திய துணியுடன் வெளியேறுகிறார்.
காதலி எலிசியின் அப்பா சங்கராடியும் இந்த காதலை,பணக்கார இளைஞனை வளைத்துப் போட்டார்கள் என ஊரார் தூற்றுவார்கள் என்ற அற்ப காரணத்துக்காக ஏற்பதில்லை, இதனால் காதலி எலிசியும் வீட்டை துறக்கிறாள்.
கமல்ஹாசனுக்கு கொடைக்கானலில் அம்மா விட்டுப் போன ஒரு அவுட் ஹவுஸ் வீடும், அம்மா வாங்கித் தந்த ஒரு யமஹா 350 மோட்டார் சைக்கிளும் உள்ளது, அங்கே காதலியுடன் ஆனந்தமாக குடியேறுகிறார்,அவள் திருமணத்துக்கு பின்னே இல்லறம் என்று உறுதியாக இருந்ததால் மறுநாளே எலிசியை பதிவுத் திருமணமும் செய்து கொள்கிறார்.இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் காதலியுடன் சர்ச் சென்று ஃபாதரிடம் கூட ஆசி பெற வருவதில்லை.
காதலி கேட்டதற்கிணங்க புகுந்த வீட்டிற்குள் மணப்பெண்ணை மணமகன் கையில் ஏந்தி சுமந்து வீட்டை மூன்று முறை வலம் வந்து அடியெடுத்து வைக்க கேட்கிறாள், அதை மட்டும் மறுக்காமல் செய்கிறார்.
இன்பமாக இல்லறம் கழிகிறது,அடிக்கடி தங்கள் டேப் ரிக்கார்டர் சகிதம் அருகே உள்ள சுற்றுலா தலங்களுக்கு பிக்னிக் செல்கின்றனர், கணவன் சொன்னதற்கிணங்க வேலையை விட்டு விடுகிறாள் எலிசி,கமல் படித்து முடித்து விடுகிறார், ஆனால் எளிதில் வேலை கிடைப்பதில்லை, இருக்கும் கையிருப்பை கரைத்து ஜீவிக்கின்றனர்,
நகை பைக் என சகலத்தையும் விற்று சிக்கனமாக உய்கின்றனர், ஆனாலும் இருவரும் வறுமை நிலைக்கு பயப்படுவதில்லை, பெற்றோருடம் சென்று நிற்பதில்லை,
அரும்பாடுபட்டு கமல் ஒரு கண்ணியமான வேலையில் பெரிய பொறுப்பில் சேர்ந்து விடுகிறார். மணமாகி ஒரு ஆண்டு கழிந்த நிலையில் இருவருக்கும் குழந்தை பெற்றால் பெற்றோர் கோபம் தீரும் என தோன்ற, மருத்துவரைப் பார்க்கின்றனர்,
அங்கே மருத்துவர் (நடிகர் ஜெயன் ) பல ஆய்வுகளைச் செய்து விட்டு இவரிடம் தனிமையில் தயங்கியபடி இவர் மனைவி எலிசிக்கு ரத்த புற்றுநோய் இருப்பதைச் சொல்கிறார்,
இது முற்றிய நிலை ஆதலால் அதிக பட்சம் மூன்று மாதம் மட்டுமே வாழ்வார் என்கிறார், இதை மனைவியிடம் கூறாமல் இன்னும் அதிகமாக அன்பு செலுத்தி கவனித்து வருகிறார் கமல்,
வேலைக்குச் செல்லாமல் வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர் வேலையும் போய்விடுகிறது, தனக்கு ரத்த புற்று நோய் இருப்பது எலிசிக்கும் நலிவடையும் உடல் மூலம் தெரிந்து விடுகிறது,
எலிசியைப் பார்க்க அவள் அம்மா வந்து போக ஆரம்பிக்கிறார், இந்நிலையில் இனி தான் அதிக கவனிப்பு தேவைப்படும் என்று மருத்துவர் ஜெயன் பரிந்துரைக்க, எலிசியை மருத்துவமனையில சேர்த்து அவள் உருக்குலைந்து போவதை உடன் இருந்து பார்க்கிறார் கமல், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எலிசி குணமாக வேண்டி கர்த்தரிடம் சென்று ஜெபித்தும் வருகிறார்.
இவர்கள் எதிர்பார்த்த அந்த கோர தினம் வந்து விடுகிறது, அல்புத ரோகத்துடன் நிறைய போராடித் தோற்ற நிலையில் எலிசி கணவனைத் கட்டிலில் தன் அருகே படுக்கச் சொல்லி அழைத்து ஆரத்தழுவியபடி உயிர் துறக்கிறாள். கமல் எல்லா சொந்தங்கள் மிச்சம் இருந்தும் தனியனாகிறார், விதவனாகிறார்.
இப்படம் அதே 1978 ஆம் ஆண்டில் தமிழ் (பருவ மழை )தெலுங்கு (அமர ப்ரேமா )என ரீமேக் ஆனது,1982 ஆம் ஆண்டு இந்தியில் ரீமேக் Dil Ka Sathi Dil என்று ரீமேக் ஆகியுள்ளது, படத்தின் தெலுங்குப் பதிப்பில் மட்டும் மீண்டும் கமல் மற்றும் ஜரீனா வஹாப் நடித்தனர்.
படத்தில் வைக்க வாய்ப்பிருந்தும் ரசாபாசமான விரசமான காட்சிகள் எதுவுமே இல்லை, படத்தின் இயக்கம் N. Sankaran Nair
ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் ஓவியர் ஜெ வரைந்தது போல கணவன் மனைவி ரொமான்ஸ் ஓவியங்களை காட்டியிருந்தார்கள், புளி சாதத்துக்குள் முட்டை வைத்து பிரியாணி ஆக்கியது போன்ற சேட்டை அது.
படத்தில் ஆறு பாடல்களையும் கவிஞர் ஓஎன்வி குருப் எழுதினார்.
தாசேட்டா பாடும் மாடப்ப்ராவே வா
சூப்பர்ஹிட் பாடல்
https://youtu.be/MAv_7RCwSs8
ஜானகியம்மா பாடிய சந்த்யே பாடலும் ரேர்ஜெம் பாடல்.
https://youtu.be/bzG-EILZr_k
ஜானகியம்மா பாடிய ஈ மலர் கன்யகள் பாடல்
https://youtu.be/_wPlQtaL210
தாசேட்டா பாடிய நீ மாயும் நிலாவோ பாடல்
https://youtu.be/bzG-EILZr_k
தாசேட்டா பாடிய சாகரமே சாந்தமாக நீ பாடல்
https://youtu.be/kH2EADthDYs
தாசேட்டா மற்றும் சபீதா சௌத்திரி பாடிய மேலே பூமல என்ற அழகிய பாடல்
https://youtu.be/MAQIwzuEUDk
பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை கொடைக்கானல் அழகை அப்படி அள்ளி வந்தவை,
#கமல்ஹாசன்,#மதனோல்சவம்,#Kamalhaasan,#ஜரீனா_வஹாப்,#கொடைக்கானல்,#சலீல்_சௌத்ரி,#ஜே_வில்லியம்ஸ்,#ஓஎன்வி_குருப்,#தாசேட்டா,#ஜானகியம்மா