தவமாய் தவமிருந்து படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி, இந்த தீபாவளிக்கு முதல் நாள் காட்சி, காலை தொடங்கி இரவு வரை நீளும் காட்சி, சிவகங்கை நகரமே பண்டிகைக் கொண்டாட்டத்தில் களைகட்டி இருக்கும்,
காலையில், அச்சக உரிமையாளர் முத்தையா தன் கைக்காசு மொத்தம் போட்டு தன் உதவியாளர் அழகரை விட்டு ,ரீம் கணக்கில் பேப்பரும், கிலோ கணக்கில் மையும் வாங்கியவர் , அன்று முழுவதும் அரசியல்வாதி சிவகங்கை விஜயம் என்று மூவாயிரம் போஸ்டர்கள் அடித்திருப்பார் , இடையில் வந்த ரசிகர் மன்ற போஸ்டர்களை ஆர்டர் எடுக்காமல் விட்டிருப்பார்.
எட்டு மணிக்கு போஸ்டர் தயார்ணே ஆளனுப்புங்க என்று கட்சி ஆபீஸ்கு இவர் போன் செய்தால்,அங்கே தலைவர் வருவது கேன்சல் ஆகி விட்டதே, சொல்லலையா? என்பார் எதிர் முனையில்,இவருக்கு முகம் இருண்டிருக்கும்.
இவர் , கைக்காசு மொத்தம் இதில் போட்டேண்ணே,தலைவர் வருகையில் date slip அடித்துத் தருகிறேன்ணே, இப்போது போஸ்டரை எடுத்துக்கங்க என்று வேண்டுவார், கட்சி ஆபீசிலோ, தலைவர் வருவது முடிவானதும் date slip அடிக்கலாம்பா, போஸ்டர் அங்கேயே இருக்கட்டும் என்று கறாராக போனை வைத்து விடுவார்கள்.
கல்லாவில் இருக்கும் சொற்ப காசை வழித்து உதவியாளர் அழகருக்குத் தருவார் முத்தையா, எனக்கெதுக்குண்ணே? இம்புட்டு காசு, புள்ளைகளுக்கு வேட்டு வாங்கி குடுங்கண்ணே,என் பொண்டாட்டிக்கு ஒரு மொழம் மல்லிப்பூ வாங்கிக் கொடுத்து சமாளிச்சுருவேன் , இந்த தீபாவளி இவ்ளோதான்னு நெனச்சுக்கறேன், என்று முதலாளிக்கே சம்பளம் தந்து விட்டு இறங்கி நடப்பார் செவித்திறன் குறைந்த அழகர்,
சம்பளம் கிடைக்காத ஏமாற்றம் முகத்தில் இருக்கும் அதை அப்படி முகத்தில் தேக்கியிருப்பார்,அச்சக வேலையில் அவ்வப்போது ஏதாவது நகைச்சுவையாக பேசுபவர் இவர்,
அப்படி ஆயிரக்கணக்கில் அரசியல்வாதி போஸ்டர்கள் அடித்து காய வைக்கையில் அடுத்த வாரம் நம்மூரு கழுதைக்கெல்லாம் கொண்டாட்டம் தாண்ணே என்பார்,
முத்தையா சொல்வார் காதிருந்தா உன்னை கைலையே புடிக்க முடியாதுடா அழகரு.
வாழ்க்கை பற்றிய எந்த புகாரும் இன்றி தன் பண்டிகை கொண்டாட்ட தேவையை ஒற்றை முழம் மல்லிப்பூவில் அடக்கியிருப்பார் அழகர், கழுத்தில் பெயருக்கு முரணாக பெரிய சிலுவை அணிந்திருப்பார், இந்த அச்சக காட்சி படத்தில் அழகிய சிறுகதையைப் படிப்பது போலவே வெளிப்பட்டிருக்கும்.
அழகர் இறங்கிய பின் பக்கத்து போட்டோ ஸ்டுடியோவில் சென்று ஆயிரம் ரூபாய் கைமாத்து கேட்பார் முத்தையா, அங்கே கிடைக்காமல் திரும்பி வந்து நாற்காலியில் சோர்ந்து சாய்வார், அப்போது மூகாம்பிகா டெக்ஸ்டைல்ஸில் இருந்து முதலாளி பேசுவார்,
அஸிஸ்டண்ட் அழகர் அங்க இருக்கானா? இரண்டாயிரம் போஸ்டர்கள் இருக்கு , விடியலுக்குள்ள ஒட்டணும், போஸ்டருக்கு ஐம்பது பைசா மேனிக்கு போஸ்டரும் ஆயிரம் ரூபா பணமும் தர்ரேன் என்பார் துணிக்கடை முதலாளி,
அது முத்தையாவுக்கு கடவுளின் குரல் போலவே கேட்கும், தெருவில் இறங்கிய அழகரைக் கூட்டிக் கொண்டு இரவு முழுக்க போஸ்டர் ஒட்டிவிட்டு, நடைபாதைக் கடையில் மகன்களுக்கு துணி வாங்கிக் கொண்டு செல்வார் முத்தையா, 70, 80 களில் லைசன்ஸ் ராஜ் யுகத்தில் அப்படித்தான் சிறு முகவர் அப்பாக்களின் நிலையும், வியாபார நிறுவனங்களில் வேலை செய்த அப்பாக்கள் நிலையும் இருந்தது.
இந்தப் படம் வெளியாகையில் தான் எனக்கு மகள் பிறந்தாள், குறிப்பாக இந்தக் காட்சி புதிய தந்தையான எனக்கு நிறைய கற்றுத் தந்தது, எனக்கு எப்படியாவது நிறைய சம்பாதிக்க வேண்டும், ஆனால் நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் , என்ற உந்துதலையும் வாழ்க்கை மீதான பயத்தையும் தந்தது,
2006 துபாய் போய்விட்டேன்,13 வருடங்கள் பல போராட்டங்கள்,பல முன்னேற்றங்கள் அங்கே கண்டேன், இன்று மீண்டும் இந்தக் காட்சியைப் பார்க்கையிலும் மிகுந்த உத்வேகத்தைத் தருகிறது, பார்க்கும் யாருக்கும் தரும்.
எனக்கு நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகர் இளவரசு மிகவும் பிடித்தவர்கள், எந்த கதாபாத்திரத்தையும் மெய்யாக்கும் திறன் படைத்தவர்கள், M.S.பிரபு அவர்களின் ஒளிப்பதிவு , இவரின் முந்தைய படமான மகாநதி போலவே தவமாய் தவமிருந்து படமும் உணர்ச்சிபூர்வமான காவியமாக ஒளிப்பதிவு செய்து தந்திருப்பார், இயக்குனர் சேரனுக்கு இது போல மீண்டும் ஒரு எல்லாம் கூடிவந்த படம்
விரைவில் அமைய வேண்டும்.
தவமாய் தவமிருந்து டிஜிட்டல் படம், அதில் தமிழின் முதல் டிஜிட்டல் படமான மும்பை எக்ஸ்ப்ரஸ் கொண்டிருந்த கலர் க்ரேடிங் குறைகள் எதுவுமின்றி இத்தனை தரமாக வந்தது எப்படி? அதுவும் காட்சிக்கு காட்சி அப்படி ஒரு தாக்கம் விளைவித்தது எப்படி? என அதிசயிக்கிறேன்,
இன்றும் கடைசியில் அண்ணன் ராமநாதன் மனம் திருந்தி அப்பாவின் சைக்கிள் துடைக்க மண்டியிட்டு அமரும் காட்சியில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது, அந்த உணர்வை இன்றும் பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் படம் தருகிறது,
#தவமாய்_தவமிருந்து,#சேரன்,#ராஜ்கிரண்,#இளவரசு,#முத்தையா,#அழகர்,#தீபாவளி,#தவமாய்_தவமிருந்து,#சேரன்,#MS_பிரபு,#ராஜ்கிரண்,#சரண்யா,#இளவரசு,#பத்மப்பிரியா,#செந்தில்குமார்,#மீனாள்,#பி_லெனின்,#சபேஷ்_முரளி,