ஆர்க்கறியாம் |மலையாளம் |2021(யாரறிவார்)
சென்றவருடம் மார்ச் 2020 கொரோனா முதலாம் அலை முழு தேச ஊரடங்கு காலத்தில் அந்த அவஸ்தையான சூழலை உபயோகித்து உருவான அழகிய noir thriller திரைப்படம்.
நடிகர் பிஜூ மேனன் 70 வயது ஓய்வு பெற்ற கணக்கு வாத்தியார் இட்டி என்ற கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்,
இந்த வயசன்- விதவன் , ரப்பர் கிருஷி, முன்னாள் பன்றி பண்ணையாளர், கோட்டயம் நஸ்ரானி கதாபாத்திரத்தில் அபாரமான transformation நடத்தியிருக்கிறார் இவர்,
லீலாவுக்குப் பின்னர் மீண்டும் அவர் பெயர் சொல்லும் படம் .
இவரது மகள் ஷெர்லியாக பார்வதி,பிஜுமேனன் உடம்பு ஷீனித்திருந்தால் இவரோ இந்த இளம் அம்மா கதாபாத்திரத்திற்காக மிக அழகாக தடிகூடியிருக்கிறார், இவரது இரண்டாவது கணவன் ராயாக ஷரஃப்புதீன் அம்சமாக பொருந்திப் போகிறார்.
ஷெர்லியின் முன்னாள் காதல் கணவன் ஊதாரியான அகஸ்டின் இவளுக்கு வயிற்றில் பிள்ளை தந்து விட்டு காணமல் போனவன் இரு வருடங்கள் கழித்து உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறான், அந்த பேரதிர்ச்சியில் இருந்தவளுக்கு மிகப்பொருத்தமான நண்பன் போல இரண்டாம் கணவன் ராய் அமைந்திருக்கிறான், ராய் ஏற்கனவே மணமாகி மணமுறிவும் பெற்றவன்.
அவன் வசிக்கும் மும்பைக்கு திருமணத்துக்குப் பின் தந்தையைப் பிரிந்து சென்று வசிக்கிறாள் ஷெர்லி, தன் மகளை நாகர்கோவில் கான்வென்டில் சேர்த்திருக்கிறாள்.
மும்பையில் நண்பன் வைஷாக்குடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் ராய் கொரோனாவில் தொழில் நசிந்திருக்கிறான், இவன் மூளையை நம்பிய நண்பன் வைஷாக்கின் கையிருப்பான சுமார் இரண்டு கோடிகளை வழித்து வாங்கி தொழிலில் முடக்கிய ராயின்
பெரும் விலை கொண்ட ஓரு shipment மும்பை துறைமுகத்தில் மாட்டிக் கொண்டுள்ளது, எத்தனை லஞ்சம் தந்தாலும் அதை வெளிக்கொண்டு வர முடியவில்லை.
நொந்து நொடிந்து போயிருக்கிறான் வைஷாக், நண்பனின் புலம்பல்களையும் ஏச்சு பேச்சுக்களையும் தினம் கேட்கத் துவங்குகிறான் ராய், ஷெர்லி வேலைக்குச் செல்லும் நிறுவனத்திலும் எந்த வேலையும் நடப்பதில்லை, சரி நீண்ட விடுப்புக்கான நேரம் இது என்று இருவரும் முடிவு செய்கின்றனர்.
இந்த முழு தேச ஊரடங்கு துவங்கும் முன் பெரிய விடுமுறையில் கார் ஓட்டிக்கொண்டு மும்பையில் இருந்து கோட்டயம் வருகின்றனர், சரியாக தேசம் தழுவிய ஊரடங்கு மறுநாள் துவங்கப்படுகிறது, மகள் இருக்கும் நாகர் கோவிலுக்குச் சென்று அவளை கோட்டயம் அழைத்து வர முடியாத படிக்கு மாநில எல்லைகள் மூடப்படுகின்றன.
கோட்டயம் , பாலையில் இட்டி வசிக்கும் 3 ஏக்கர் பரம்புடன் கூடிய வீட்டிற்கு கட்டுமான சந்தையில் நல்ல விலை இருக்கிறது, நிலத்திற்கு ஐந்து கோடி வரை மனதில் நினைத்திருக்கிறார் இட்டி,
மகள் மருமகன் கிசு கிசுவென பேசுவது முகம் மாற்றம் கண்டு ராயின் தொழில் நசிந்ததை அறிகிறார், மகள் கடனின்றி யாரின் ஏச்சு பேச்சின்றி என்றும் வாழ வேண்டும் என்று இச்சிக்கலுக்கு பெரும் பணம் தந்து உதவ எண்ணுகிறார்,
பரம்பையும் வீட்டையும் விற்று விட்டு கடனடைத்து எஞ்சும் பணத்தில் அடுக்கு மாடி 3BHK அடுக்ககம் வாங்கிக் கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்.
இட்டி வெளியில் பார்க்க முரட்டுத்தனமாக இருந்தாலும் ,தீவிர தெய்வ விசுவாசி, தினமும் அந்தியில் நெடுநேரம் பாவமன்னிப்பு கேட்கிறார்,தான் நெடுங்காலம் சுமக்கிற சிலுவையை இறக்கி வைக்க தோள்கள் தேடுகிறார், அது ராய் தான் என்று தீர்மானித்தவர்,
அவனிடம் தனிமையில் வந்து தான் செய்த ஒரு மகா பாவத்தைச் சொல்கிறார், இந்த பாவத்தில் இருந்து காப்பாற்ற உன்னிடம் தான் உதவி கேட்க முடியும், இது ஷெர்லிக்கு தெரியவே கூடாது , தள்ளாமையால் என் ஒருவனால் இதை தனியே செய்ய முடியாது,
எனக்கு உதவ வேண்டும் என்கிறார், அதை கண்டிப்புடன் சொல்கிறார், மருமகனிடம் கேட்கும் தோரணையின்றி மகனிடம் ஆணையிடுவது போலவே கேட்கிறார்,
ராய் பெரிய தெய்வ விசுவாசி அல்ல , ஆனால் தைரியசாலியும் அல்ல, தன் தள்ளாமை கொண்ட மாமனாருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய முடியும், காரணம் மனைவி ஷெர்லி மீதான காதல் , ஆனால் இவர் கேட்ட உதவி யாரும் செய்ய முடியாத உதவி, மகா பாவத்துக்கு உடந்தையாக இருப்பது,
ராய்க்கு மும்பையில் வளர்ந்தவனாதலால் உடல் உழைப்பே இருந்ததில்லை,சுகமாக மூளையை வைத்து ஜீவித்து இருந்தவன் , மென்மையான உள்ளங்கைகளைக் கொண்டவன், அவன் இதற்கு சரிப்பட்டு வந்தானா? எத்தனை எத்தனை கேள்விகள், மெல்ல நகருகிற இப்படத்தில் இதற்கு அற்புதமாக விடை சொல்லியிருக்கின்றனர்,
த்ருஷ்யம் போன்ற ஒரு மையக் கரு, ஜோஜி போன்றே ரப்பர் பரம்பு ,நஸ்ரானி சமூக சூழல் என்றாலும் முற்றிலும் புதிய கோணத்தில் இயக்கியிருக்கிறார் சனு ஜான் வர்கீஸ்,இவர் ஒளிப்பதிவாளரும் கூட, இத்திரைப்படத்தை ஆஷிக் அபு தயாரித்திருக்கிறார்.
அமேஸான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது
எழுதியவர் கீதப்ப்ரியன்
உரையாட geethappriyanbloggeratgmail.com