இயக்குனர் மீரா நாயரின் முதல் படைப்பான சலாம் பாம்பே! (1988) திரைப்படத்தின் Lobby Cards , போஸ்டர்கள் இவை,மீரா நாயர் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் இது. நிஜ சாலையோரச் சிறார்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை மிக இயல்பாக நடிக்க வைத்ததால் இப்படம் உலக அரங்கில் கவனம் பெற்றது,இது வரை உலகத் திரைப்பட விழாக்களில் பனிரெண்டு உயரிய விருதுகளை வென்றுள்ளது.
இர்ஃபான்கான் ஜுராஸிக் பார்க் படத்தில் விஞ்ஞானியாக நடித்த பின்னர் அகில உலக அளவில் உச்சானிக் கொம்பிற்குப் போய் விட்டார்.
அவரின் அறிமுகப் படமான மீரா நாயரின் சலாம் பாம்பேவை ஒருவர் மறக்க முடியாது, மீரா நாயர் கை மோதிரக் கை, அவர் அறிமுகம் செய்த நடிகர்கள் அடைந்த உலகப் புகழ் அளவிட முடியாதது.பல தோல்விகள் கண்ட டென்ஸல் வாஷிங்டன்னிற்கு இவரின் மிஸிஸிபி மஸாலா நல்ல ப்ரேக் த்ரூவைத் தந்தது.
சலாம் பாம்பே படத்தில் சிறுவன் கிருஷ்ணா என்ற சாய்பு தன் அண்ணனின் பைக்கை கோபத்தில் எரித்து விடுகிறான், வீட்டில் அம்மா திட்டி அதன் இழப்பீட்டுக்கு சம்பாதிக்க அனுப்ப , சர்கஸில் சில மாதங்கள் வேலை செய்கிறான், ஒருநாள் அவர்கள் சம்பளம் தர இயலாமல் இவனுக்கு கல்தா கொடுத்து காலி செய்து போய்விட,இவன் மும்பையின் தாராவிக்கு வருகிறான்.அங்கே அனாதைத் தெருப் பொருக்கிகளின் சிநேகம்.இருந்தும் அவன் குழந்தைத்தனம் மாறாதவன், நெஞ்சில் ஈரம் உள்ளவன்.பீஜபூர் போவதையே சதா ஜெபிக்கிறான்.
கொடிய தாராவியில் அம்மா பாசம் அடிக்கடி அவனை ஆட்கொள்ளும், ஒவ்வொரு முறை சாய்புவின் சேமிப்பு ஐநூறைத் தொடுகையிலும் ஏதாவது மலைமுழுங்கிகள் அதை கபளீகரம் செய்திடுவர்.
அவன் அப்படி ஒரு தருணத்தில் அம்மாவுக்கு கடிதம் எழுதுவான், கல்லையும் கரைக்கும் காட்சி இது, இர்ஃபான் கான் கராரான எழுத்துக்காரன்.மிகுந்த சொற்சிக்கனக்காரன் போல பாவனை.
ஒரு வரிக்கு பத்து காசு வாங்கிக் கொண்டு சாய்புவின் அம்மா சுந்தரிக்கு கடிதம் எழுத அமருவான். சாய்பு அம்மாவிடம் நான் உறங்குகையில் உன் அருகாமைக்கு ஏங்குகிறேன் என எழுதச் சொல்வான்.
அதற்கு இவன் ஐம்பது காசு அதிகம் ஆகும் என்பான், சாய்பு பரவாயில்லை என்பான், இர்ஃபான் விலாசம் கேட்கையில் பெங்களூரின் அருகே உள்ள பீஜபூர் என்பான்.
பின்கோடு எதுவும் அறிந்திருக்க மாட்டான், அவன் போனதும் இர்ஃபான் மிகுந்த கல்நெஞ்சத்துடன் கடிதத்தை ஸ்டாம்புக்கு பிடித்த கேடு என்று கசக்கி எறிவான்.
மிக அருமையான அறிமுகக் கதாபாத்திரம், அதன் பின் அவர் அடைந்த உயரம் கணக்கில்லை, நடிப்பென்றால் எல்லா கதாபாத்திரமும் செய்ய வேண்டும், படம் வெளியாகி 29 வருடங்கள் ஆகிறது,நம்மாலோ அவராலோ இக்கதா பாத்திரத்தை என்றும் மறக்கவே முடியாது,
சாய்புவாக இத்தனை அற்புதமாக நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் ஷஃபீக் ஸையத்துக்கு இரண்டாம் இன்னிங்ஸ் அமையவேயில்லை, பெங்களூருவில் இன்று ஆட்டோ ஓட்டுகிறார்.
https://en.m.wikipedia.org/wiki/Shafiq_Syed
அவரின் பேட்டி இங்கே
https://youtu.be/g_0CpMYjUYQ