இரகள் 1985 ஆம் ஆண்டு K.G. ஜோர்ஜ் அவர்கள் இயக்கத்தில் வெளியான அற்புதமான த்ரில்லர் திரைப்படம், படத்தில் பாடல்களே இல்லை,
படத்தின் பின்னணி இசை M.B.சீனிவாசன் அவர்கள், ஒளிப்பதிவு வேணு (குணா) , எத்தனை பரீட்சார்த்தமான இசை, எத்தனை பரீட்சார்த்தமான ஒளிப்பதிவைக் கொண்டுள்ள திரைப்படம் இது,
35 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இது கொண்டுள்ள subtleness ,Dark elements , complexity subject, filmmaking ற்காக சினிமா ஆர்வலர்களால் புகழப்படுகிறது, சமீபத்தில் வெளியான Joji இதன் முன் சிறு பப்பா என்றே மதிப்பிட முடிகிறது,
இத்தனை Dark ஆக இத்தனை cult crime திரைப்படத்தை இத்தனை original ஆக வன்முறையின் உளவியலை குறுக்கு வெட்டு தோற்றமாக படைத்திருக்கிறார் இயக்குனர்.
இரண்டரை மணி நேரம் பறக்கிறது, இது வரை அடுத்தடுத்து மூன்று முறை இப்படம் பார்த்தும் வியப்பு அடங்கவில்லை,உலக சினிமா காதலர்கள் திரைப்பட ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத அற்புத படைப்பு.
இயக்குனரின் முந்தைய படைப்பான யவனிகாவை விட Dark , யவனிகாவை விட intense ,யவனிகாவை விட gripping ஆக இயக்கியுள்ளார் இயக்குனர் K.G.ஜோர்ஜ் அவர்கள்,
மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை கொண்டிருக்கும் படம், அதிலும் படத்தின் பிரதான கதாபாத்திரமான பேபியாக தோன்றிய கணேஷ் குமார் அறிமுகம் என்றால் நம்புவது கடினம், இந்திய சினிமாவில் மஸாக்கிஸ்ட் சைக்கோவை இத்தனை தத்ரூபமாக இவர் போல யாரும் பிரதிபலித்ததில்லை.
கோட்டயம் ரப்பர் தோட்டத் தொழிலில் கோலோச்சும் மாத்து என்கிற மாத்யூஸ் குடும்பத்தில் நடக்கும் கதை இது.
மாத்யூஸாக நடிகர் திலகன் ,தந்தை போப்பி தனக்குத் தந்த 20 ஏக்கர் ரப்பர் பரம்பை 2000 ஏக்கராக விஸ்தரிக்கும் பேராசை கொண்டவர்,
ரப்பர் கிருஷியுடன் , கள்ளச்சாராயம் காய்ச்சி சந்தைப்படுத்தியவர்,
வண்டிப்பெரியார் மலை முகடுகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் கஞ்சா பயிரிடும் வியக்தி.கடவுள் நம்பிக்கையற்றவர், பணம் ஒன்றையே பிரதானம் என நினைப்பவர்.
இவரது மனைவி பசுவைப் போன்றவர், கணவரின் அக்கிரமங்களுக்கு முன் செய்வதறியாது தோற்றவர், சதா ஜெபமாலை கொண்டு பிரார்த்தனை செய்து தன் கணவன்,
பிள்ளைகளுக்காக ஜெபிப்பவர், இறைவனிடம் அவர்களுக்காக மன்னிப்பு கேட்பவர்,
இவரது சகோதரர் பரத்கோபி அவ்வூரின் அருட்தந்தையும் கூட ,இந்த குடும்பம் இப்படி பேராசையால் செய்யக்கூடாததைச் செய்து சீரழிந்து வருவதைக் கண்டு இதயத்தில் இருந்து குருதி வடிப்பவர், இந்த அருட்தந்தை கதாபாத்திரம் நடிகர் பரத்கோபிக்கு அத்தனை பொருத்தமாக இருந்தது,
ரப்பர் முதலாளி மாத்யூஸின் உதவியாளர் அனியம்பிள்ளையாக இன்னசண்ட், மிகச்சூட்டிகையான ஒரு கணக்கப்பிள்ளை, வாய்க் கணக்கில் , மனக்கணக்கில் சூரர், முதலாளிக்கு கடும் விசுவாசமான நாயைப் போன்ற கதாபாத்திரம்.
ரப்பர் தோட்டத்தில் இருக்கும் விதவிதமான யூனியன்களையும் அதன் லீடர்களையும் எப்படி மகுடி ஊதி மயக்கி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற வித்தை தெரிந்து முதலாளிக்கு ஆலோசனை சொல்பவர்.
ரப்பர் முதலாளி மாத்யூஸிற்கு தந்தை போப்பி 90 வயதில் படுத்த படுக்கையாகியிருக்கிறார், அவருக்கு வாழவும் ஆசை சாகவும் ஆசை,
வீட்டார் காட்டாத அன்பையும் சிருஷையையும் விசுவாசமான வேலைக்காரன் உன்னுன்னி தருகிறான்,
இவரைக் குளிப்பாட்டி,காலைக்கடன் செய்வித்து, உணவூட்டி, கதைகள் பேசி இவர் கட்டில் காலருகே பாய்விரித்து படுத்திருக்கும் உன்னுன்னி தான் இவரின் ஊன்றுகோல்.
ரப்பர் முதலாளி மாத்யூஸிற்கு மூன்று மகன்கள் , மூத்த மகன் கோஷி (p.c .ஜோர்ஜ்) தந்தையைப் போலவே கஞ்சா தோட்டங்களை பயிரிட்டு விளைவித்து அதை பெரும்பணமாக்குபவர்,
போலீசையே புல்லென கருதி காலால் அடிப்பவர், யாராக இருந்தாலும் அடித்து விட்டே பேசும் மூர்க்க முரடர் கதாபாத்திரம் , அத்தனை இயல்பாய் செய்துள்ளார்.
இவர் மனைவி கணவனுக்கு அடங்கிப்போய் அவனுக்கு ஒத்து ஊதி தன் பதின்ம வயது மகனை வளர்க்கும் கதாபாத்திரம்.
இளைய மகன் சன்னி கதாபாத்திரத்தில் சுகுமாரன் அற்புதமாக செய்தார், இவர் படத்தின் தயாரிப்பாளரும் கூட, அண்ணன் கோஷி போல மனசாட்சியை கொன்று பெரும் பணம் ஈட்டி ஜீவிக்க மனம் வராததால் , குடியில் மூழ்கியிருக்கும் கதாபாத்திரம், ஆனால் அவ்வீட்டில் நியாயமாக சிந்திக்கும் ஒரே ஒரு உள்ளம் இவர்,
தவறு செய்பவரை திருத்த நம்மால் ஆகாது என்று ஒரு எல்லை வரை பொறுத்து ,எரிமலையாக வெடிக்கும் கதாபாத்திரத்தை அற்புதமாக செய்துள்ளார் ,
மலையாளத்தின் சிறந்த நடிகர் இவர்.தந்தையிடம் அண்ணனிடம் எனக்கு சேரவேண்டியதை தந்தால் நகரத்தில் எங்காவது சென்று நிம்மதியாக வாழ்வோம் என்றாலும் அவர்கள் இப்போது அதைப்பற்றி சிந்திக்காதே என்று இவரை அடக்கி வைத்துள்ளனர்.
இவர் மனைவி ரோஸ்லின் ( கண்ணூர் ஸ்ரீலதா) பொய்யர்களின் கூடாரத்தில் விடியல் முதல் நடுநிசி வரை குடித்தபடி இருக்கும் கணவனை சகித்தபடி வாழ்பவர்,
கணவனின் கூடலுக்கும் , குழந்தைக்கும் ஏங்கும் பெண்,ஆனால் கிடைத்ததோ பெரிய வீட்டு மருமகள் என்ற பட்டம், சம்பளம் இல்லா வேலைக்காரி பிழைப்பு, அதை நுட்பமாக வெளிப்படுத்தியது ரோஸ்லின் கதாபாத்திரம்.
மாத்யூவின் மூன்றாம் வாரிசு ஆனி , இவள் ஒரு nymphomaniac,ஆமாம் ஆணாகப் பிறக்க வேண்டியவள், பெண்ணாக பிறந்துவிட்டாள், பெண்ணியம் எதுவும் பேசாமல் அதை யதார்த்த உலகில் இஷ்டம் போல சுதந்திரமாக அனுபவிக்கும் பெண், இக்கதாபாத்திரத்தில் நம் ஸ்ரீவித்யா அற்புதமாக நடித்துள்ளார்,
இவரது கணவர் ஆண்ட்ரூஸாக நெடுமுடி வேணு, true Christian, நேர்மையான கலால் துறை அதிகாரி, இவருக்கு குடிப்பழக்கம் கூட இல்லை, ஆனால் மனைவி சதா வீட்டில் மறைத்து வைத்து குடிப்பவர்,
இவரது படுக்கை அறைக்குள் இஷ்டப்படும் ஆடவரை வரவழைத்து சுகிக்கும் குணம் கொண்டவர், இவர் எத்தனை முயன்றும் மன்னித்தும் மனைவி ஆனி திருந்துவதாக இல்லை.ஒரே மகள், தந்தையின் சொற்படி கேட்பவள், அவளுக்காக வாழ்க்கையை தள்ளிக் கொண்டு செல்லும் கதாபாத்திரம்.
மாத்யூவின் நான்காம் வாரிசாக பேபி (K.B.கணேஷ்குமார்) அக்கா ஆனியை விட பத்து வயது இளையவன், உண்மையான அன்பிற்கு ஏங்குபவன், அது கிடைக்காததால் மனம் கல்லானவன்,
கை விரல்களை ஊசியில் குத்தி குருதி வர அதில் ஓவியம் வரைபவன், வலியை ரசிப்பவன், சக மாணவர்களை அப்படி துன்புறுத்துபவன், சதா எலக்ட்ரிக் வயர் கொண்டு சுருக்கு தயாரித்து பையில் வைத்து அலைபவன், எதிராளி சிக்கினால் தலையில் லாவகமாக தலையில் நுழைத்து சுருக்கிட்டு கொல்லத் துடிப்பவன்,
இவன் எதிராளியுடன் பேசுகையில் பொய்கள் பேசி வாழும் அவர்களுக்கு சுருக்கிடுவது போல நினைத்துப்பார்த்து தலையை உதறிக்கொள்ளும் குணாதிசயம் கொண்டவன்,
தன் அக்கா ஆனி கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு மாதா மாதம் இங்கு பிறந்தவீட்டிற்கு பல நாட்கள் வந்து தங்கி தின்று ஊதிப்பெருத்து, குடித்து களித்து,கட்டுமஸ்தான வேலைக்காரன் உன்னுன்னியுடன் (மோகன் ஜோஸ்) நடுநிசியில் புழக்கடையில் உள்ள அவுட் ஹவுஸில் சென்று அவனைப் புணர்ந்து வருவதைப் பார்த்தவன், அவளை வீட்டாரிடம் காட்டித் தருவதில்லை,
அவள் நித்தம் தேடிச் சென்று சுகிக்கும் வேலைக்காரன் உன்னுன்னி நடுநிசியில் பூனைபோல எழுந்து புழக்கடை அவுட்ஹவுஸில் கதவு திறந்து நுழைகையில் பின்னால் இருந்து தலையில் வயரால் சுருக்கிடுகிறான், பின்னர் அக்கா ஆனி காமுகனை எழுப்பித் தோற்று,அவன் இறந்ததை அறிந்து , திருடனுக்கு தேள் கொட்டியது போல் வீட்டுக்குள் திரும்பி வந்து படுக்கையில் விழுந்து மனம் குமைவது கண்டு ரசிக்கிறான் பேபி.
இவனுக்கு இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை தந்து பொறியியல் கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்த மாத்யூவிற்கு அவன் செய்கைகளால் ஏமாற்றமே மிஞ்சுகிறது, எங்கு பார்த்தாலும் வம்பு, எப்போதும் சண்டைகள்,ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து துன்புருத்தல் என்றிருப்பவன்,
தன்னை எதிர்த்துப் பேசி இணங்க மறுத்த ஓரு மாணவனை கழுத்தில் சுருக்கிட்டு குற்றுயிராக்கி குழாய் நீரை முகத்தில் திறந்து விட்டு தன் ஊருக்கு தப்பி வருவதில் இருந்து தான் கதையே துவங்குகிறது.
பெற்றோர் உற்றார் bore அடித்த பேபிக்கு அவ்வூரில் இரண்டே இரண்டு பேர் பிடித்தமானவர்கள்,ஏழை நண்பன் ராகவன் (அசோகன் )
மற்றும் ஏழைக்காதலி நிர்மலா, இவனுக்கு பொய்யர்களை , துரோகிகளை பிடிப்பதில்லை, தன் அண்ணி ரோஸ்லின் தன்னைப் பார்க்கும் பார்வையின் அர்த்தம் நன்கு அறிந்திருக்கிறான், சந்தர்ப்பம் கிடைத்தாலும் அண்ணன் சன்னிக்கு துரோகம் செய்வதில்லை.
ராதா இந்த ஏழைப்பெண் கதாபாத்திரம் மிக அற்புதமாகச் செய்தார், தந்தையில்லாதவள்,அம்மா கஷ்டப்பட்டு பொன்னுருக்கி நகை செய்து தன்னை ஒருவனுக்கு மணமுடிப்பாள் எனத்தெரிந்தும், பணத்திலும் அந்தஸ்திலும் எட்டாத உயரத்தில் இருக்கும் பேபியை விரும்பி அவனுக்கு தோன்றும் போதெல்லாம் காப்பி தோட்டத்தில் முந்தி விரித்து dominant காமுகனுக்கு உடன்படும் submissive கதாபாத்திரம்,
(இதே போல உறவை சித்தரிக்கும் கதாபாத்திரங்களை நான் secretary 2002 திரைப்படத்தில் கண்டதுண்டு, அதில் குரூரி dominant boss ஆக James Spader ம், அவனது submissive காரியதரிசியாக
Maggie Gyllenhaal நடித்திருப்பார்கள், இப்படம் இரகள் அதற்கு பலகாலம் முன்பே இத்தனை நுட்பமாக இந்த உறவைப் பேசியிருக்கிறது என வியந்தேன்.
இந்த நிர்மலா கதாபாத்திரம் இல்லற சுகத்தை திருமணத்துக்கு முன்னே,திருட்டு மாங்காய் ருசி போல அடையத் துடிக்கிறது,விபரீத உறவு பல விபரீதங்களைத் தோற்றுவிக்கும் எனத் தெரிந்தும் அந்த உறவில் திளைத்திருக்கிறது,
சமூக விலக்கம் காரணமாக இந்த உறவு கைகூடாது எனத் தெரிந்தவுடன் எளிதாக முரட்டு இன்பம் தந்த காமுகனை வெட்டிவிட்டு,அம்மா திருமணம் பேசி வைத்த பாலன் (வேணு நாகவல்லி) என்ற பெட்டிக்கடைக் காரனை வரித்துக் கொள்ளும் கதாபாத்திரம்,
பாலன் மர்மமாக கொலையுண்டு இறந்து விடுகிறான், அதே அம்மா சொன்னாள் என்று மீண்டும் ராகவன் என்ற ரப்பர் தோட்டத்தொழிலாளியை மணமுடிக்கத் தயாராகும் ஒரு conniving பெண் கதாபாத்திரம், இப்படத்தில் ராதா நிர்மலா கதாபாத்திரத்தை அத்தனை இயல்பாகச் செய்தார்,
ஆனியின் கணவன் ஆண்ட்ரூஸ் ஆனியின் nymphomaniac போக்கு பற்றி அறிய வருகையில் அவளைக் கொண்டு வந்து மாமனார் வீட்டில் விட்டுச் செல்ல வந்தவர், மாமனார் மேத்யூவிடம் அவளின் நித்யகல்யாண சம்போகத்தை அழுதபடி முறையிடுகிறார், மேத்யூஸோ அதற்கு அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஆனியை கண்டிப்பதற்கு பதில் அவரை நீ சகித்து வாழுவாயாக, அவளை மணமுறிவு செய்யக்கூடாது என்று மிரட்டுகிறார் ,இவரது கார் சாவியை மூத்த மகன் கோஷி பறித்துக் கொள்கிறார், அதைப் பெற மன்றாடும் ஆன்ட்ரூஸை அடிக்கிறார் கோஷி, சன்னி அங்கே குடி போதையில் தள்ளாடியபடி வந்து ஆனியை கன்னத்தில் மாறி மாறி அறைகிறார், அண்ணன் கோஷியை லாவகமாக அறைகிறார், இருவரும் மல்லுக்கட்டுகின்றனர், கார் சாவியை திரும்ப ஆன்ட்ரூஸிடம் தர, மேத்யூஸ் இது நான் சீதனம் தந்தது, மகளை விவாகரத்து செய்யும் எண்ணத்தில் இருப்பவனுக்கு கார் ஒரு கேடா? என்று ஆன்ட்ரூஸை நடந்து போக வைக்கிறார், மேத்யூஸ் கதாபாத்திரம் நடிகர் திலகன் அவர்களின் மிக முக்கியமான கதாபாத்திரம்.
தமிழ் ரசிகர்கள் அறியாத பல அற்புதமான செயற்கரிய கதாபாத்திரங்களை நடிகை ஸ்ரீவித்யா அங்கு மலையாள சினிமாவில் லஜ்ஜையின்றி மிகையின்றி யதார்த்தமாக செய்திருக்கிறார்.
திருவனந்தபுரம் லாட்ஜ் திரைப்படத்தில் காமத்துக்கு கிடந்து ஏங்கும் ஜெயசூர்யா விலைமங்கை ஒருத்தியைத் தொடர்ந்து சென்று அவளை அணுகி பேசி அவளின் விகாரமான குடிசையில் கிடத்தி சம்போகத்துக்கு தயாராகையில் அவள் நோயாளி கணவன் படுத்த படுக்கையாக மலஜலம் தன்னிச்சையாக கழிப்பான்,
அதைப்பார்த்து அருவருத்த ஜெயசூர்யா எழுந்து வந்துவிடுவார், இப்படத்தில் அதே போல ஒரு காட்சி ரேவதி என்ற விலைமங்கையிடம் பேபியை அவனது வேட்கை தீர்க்க அழைத்துப் போகிறான் ராகவன் (அசோகன் )அங்கு பாலியல் தொழிலாளி ரவிக்கை நெகிழ்த்தி தளர்த்தி தரையில் தன் விழித்திருக்கும் பிள்ளை அருகில் பாயில் லஜ்ஜையின்றி படுத்துக்கொண்டு பேபியை வா என அழைக்கிறாள்,so intense,so dark ,அங்கு ஷனம் கூட நிற்க இயலாத பேபி விரைந்து வெளியேறுகிறான்.
Alejandro González Iñárritu இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான babel திரைப்படத்தில் குடும்பத்தலைவன் தன் நண்பரிடம் பண்டமாற்றில் கிடை ஆடுகளைத் தந்து ஓநாய்களை வேட்டையாட வாங்கி வரும் துப்பாக்கி எப்படி அவர் குடியையே கெடுக்கும் என்று அற்புதமாக பேசியிருக்கும், அதற்கெல்லாம் இப்படம் இரகள் முன்னோடி.
சந்தோஷ் சிவன் இயக்கிய before the rains ,2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் ஆங்கிலேய சாயப் இனாம் தரும் கைத்துப்பாக்கி நீலனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும்.
அதைப்போல ரப்பர் முதலாளி மேத்யூஸின் தந்தை போப்பி தான் பணிசெய்த ஆங்கிலேயே சாயபிடமிருந்து இனாமாக வாங்கி வந்த துப்பாக்கி உதவியால் அந்த மலைக்காட்டின் 20 ஏக்கரைத் திருத்தி தன் வழியில் இடைப்பட்ட புலி காட்டெருமைகளைத் வனவிலங்குகளை சத்தம் எழுப்பி விரட்டினார், ஆனால் கொல்லவில்லை,
அவர் சந்ததியான மேத்யூஸ் அந்த துப்பாக்கியால் விலங்குகளைக் கொன்றார்,2000 ஏக்கராக்கினார்,இருந்தும் போதவில்லை, பணத்தையே இன்னும் சுவாசிக்கிறார்,
அவர் மகன்கள் அதே அந்த துப்பாக்கி கொண்டு கொலபாதகங்களை திறம்படச் செய்கின்றனர், பெரும் பணத்தால் அந்த பாவத்தில் இருந்து தப்புகின்றனர், ஆனால் எப்போதும் தப்புவதில்லை, postman always rings twice என்று ஒரு பழமொழி உண்டு, அதற்கு ஈடாக நாம் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்போம்.
இசையமைப்பாளர் M.B.சீனிவாசன் எனக்கு மிகவும் பிடித்த இசைமேதை,அவர் இந்த பேபி கதாபாத்திரத்திற்கு தந்த இசை, அவனின் எண்ணங்களுக்கேற்ப ஆங்காங்கே மாறுகிறது, மிகுந்த தொலைநோக்கான இசை.
இப்படம் அனைவரும் பாருங்கள் , மொழி தெரியாதவர்களுக்காக ஒரு movie buff கொட்டை எழுத்துகளில் english subtitles எழுதி பதிவேற்றியுள்ளார், அவசியம் பாருங்கள் நண்பர்களே.
https://youtu.be/SS0uFyoLyp8
இரகள் = master craft