வில்கானுண்டு ஸ்வப்னங்கள் (கனவுகள் விற்பனைக்கு)| 1980 | மலையாளம் | M.ஆசாத் | M. T. வாசுதேவன் நாயர்
"பூதலம் நிண்டே பத்ராசனம் " என்ற பாடல் யூ ட்யூபில் முதலில் பார்க்கையில் முழுக்க துபாயின் 1980 ன் skyline மற்றும் அமீரகத்தின் சூழலை அப்படி அள்ளி வந்திருந்தார் ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு அவர்கள்,
அந்த visuals உடனே என்னை படமும் பார்க்க வைத்தது, இப்படத்தின் மூலம் தான் மலையாள நடிகர் சுகுமாரன் என் மனதில் பதிந்தார்.
நடிகர் சுகுமாரன் 1970 களில் மலையாள சினிமாவில் பிரபலமான நட்சத்திரமாக உருவெடுத்தவர். 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் M.G.சோமன் மற்றும் ஜெயனுடன் இணைந்து மலையாள சினிமாவின் trio சூப்பர் ஸ்டார்கள் மூவரில் ஒருவராக அவர் கருதப்பட்டார், கட்டையான உருவம், சுருட்டை முடி , முட்டைக்கண்கள், தொங்கிய கன்னங்கள், எம்ஜியார் போன்ற முகவாய் குழி, ஒழுங்கில்லாத பற்களில் இடைவெளிகள் என ஒரு சாதாரண தோற்றம் கொண்ட நடிகர், ஆனாலும் மலையாள சினிமாவில் பல மறக்கமுடியாத கதாபாத்திரங்களை அனாயசமாய் செய்தவர்.
பின்னர், 1980 கள் மற்றும் 1990 களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றார்.
1978 ஆம் ஆண்டில், M. T. வாசுதேவன் நாயரின் பந்தனம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை பெற்றார். ஒரு தயாரிப்பாளராக இரகள், படயணி போன்ற படங்களைத் தயாரித்தார்.
16 ஜூன் 1997 ஆம் ஆண்டு நடிகர் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 49 மட்டுமே, இரகள் திரைப்படத்தில் மூன்று மகன்களில் ஒருவர், மனசாட்சிமிக்க , அந்த குடிக்கு அடிமையான சன்னி கதாபாத்திரத்தை நடிகர் சுகுமாரன் அவர்கள் அத்தனை தத்ரூபமாக செய்தார்.
வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்திற்கு எம்.பி.ஸ்ரீனிவாசன் அவர்கள் இசை, கவிஞர் ஸ்ரீதரனுண்ணி பாடல் எழுதினார்.
M.T.வாசுதேவன் நாயர் படத்தின் கதை திரைக்கதை வசனங்களை எழுதினார், M.ஆசாத் இயக்கம்,
ராஜகோபால் (சுகுமாரன் )துபாய்க்கு கள்ளத்தோணியில் வந்து, தன் அண்டை கிராமத்தில் இருந்து வந்து இங்கு பெட்டிக்கடை நடத்தும் மம்மக்கா (பகதூர்) என்பவர் சிபாரிசில் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக மேனேஜராக உயரும் கதை ,
அதை நம்பும் படி ரத்தமும் சதையுமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் M.ஆசாத், சில வருடங்களுக்கு முன்னர் வந்த பத்தேமாரிக்கு எல்லாம் முன்னோடி இப்படம்,
படத்தில் மாலதி என்ற அழகிய நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீவித்யா ,
நடிகர் மம்மூட்டியின் முதல் படம் இது, மாதவன் குட்டி என்ற குடிகார நண்பன் கதாபாத்திரத்தில் வருகிறார் , அவருக்கு நடிகர் சீனிவாசன் குரல் தந்துள்ளார்,
பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாமல் ராஜகோபால் (சுகுமாரன்) துபாய்க்கு, பகீரதப் பிரயத்தனப்பட்டு பம்பாயில் கள்ளத் தோணி ஏறி புறப்படுகிறார், உடன் ஆறு பேர் பயணிக்கின்றனர், இவர்கள் ஊரார் காலம் காலமாக சொல்லக் கேட்ட பலப்பல துபாய் கதைகள், தோணியில் ராஜகோபால் தூங்க கண்களை மூடினால் கண்களில் விரியும் ஊராரின் ஏச்சு பேச்சுக்கள்,அம்மா சமையல்காரியாக இருக்கும் தரவாட்டு வீட்டில் தங்கநெக்லஸ் திருட்டு ஒன்றில் இவரை சந்தேகித்து தூணில் கட்டி வைத்து அடித்த ஆப்த நண்பர்கள் ,ஊர் பெரியவர் குருப், சம்பாதித்து அவர்கள் முகத்தில் கரிபூச வேண்டும் என்ற வெறியில் ஆறு நாட்களாக இந்த தோணியில் பயணம் தொடர்கிறது, இவருடன் இருக்கும் சந்திரனுக்கு தீராத வாந்தி ,மயக்கம், வயிற்றுப்போக்கு, தண்ணீர் குடித்தாலும் பச்சை மீனின் மணம் தோன்றி உடனே வாந்தி,
அழகான மற்றும் பணக்கார "துபாய்" பற்றிய அவர்களின் கனவுகளைத் தேடி புறப்பட்ட லட்சக்கணக்கானோரில் இவரும் ஒருவர் ஆகிறார்,
தோணி விடியலில் ஃபுஜைராவில் கடற்கரைக்கு ஒரு மைல் தொலைவில் இருக்கையில் படகோட்டி , எங்கே இராணுவத்தால் பிடிபடுவோமோ? என்று அஞ்சி இவர்களை எழுப்பி குதி என்கிறான், குதிக்காதவர்களைத் தள்ளியும் விடுகிறான்.
அங்கு உடன் வந்த ஆறுபேர் அலையில்லாத கடலில் கரைக்கு நீந்துகிறார்கள்,வெவ்வேறு திசையில் செல்கின்றனர் , இவர் சந்திரனை காப்பாற்றி நீந்தி அழைத்து வந்தாலும் கரையில் சந்திரனால் பிடித்து நிற்க முடியவில்லை, இறந்து போய்விடுகிறார், சுற்றிலும் வரண்ட மலைகள், புதையும் மணல்.
தான் கனவு கண்ட துபாய் இப்படி தரிசுப் பாலைவனமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் ராஜகோபால் ,
ஏதாவது கட்டிடம் தென்படும் வரை கடும் வெயிலில் தாகமெடுக்க தலைசுற்றலுடன் நடக்கிறார்,ஒரு நல்ல மனம் கொண்ட அரபி pickup truck ஓட்டி வந்தவர் இவருக்கு நீர் அருந்தக் கொடுத்து ஷார்ஜா வரை கொண்டு விடுகிறார்.
அது முதலே இவரது மறுபூமி கதை தொடங்குகிறது.
'பெர்ஸியா' வில் தலையெழுத்து தான் மிகப்பெரிய வல்லமை பொருந்திய சான்றிதழ் என்பதை விரைவில் கண்டறிகிறார்.
துபாயில் முதலில் கடுமையான கட்டிட வேலைகளைச் செய்கிறார்,
ஊரில் மகனிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று மனம் நொந்த இவரது அம்மா நோய்வாய்பட்டு இறந்த தகவல் ஊர்க்காரர் மூலம் கிடைக்கிறது , ஆனால் இவருக்கு ஊருக்குப் போக பணமில்லை,விசா இல்லை ,பாஸ்போர்ட் இல்லை ,
தனது ஊர்க்கார நண்பர் மம்முக்காவை பல மாதங்கள் தேடி கண்டுபிடிக்கிறார். மம்முக்கா (பகதூர் )வலது கை தருவதை இடது கை அறியாமல் உதவுபவர், சாதி மதம் பாராமல் எத்தனையோ பேருக்கு வேலை வாங்கித் தந்தவர், அவர் தனக்குத் தெரிந்த கம்பெனி மேலாளரிடம் நேரில் சென்று மன்றாடி ராஜகோபாலுக்கு வேலை வாங்கித் தருகிறார்.,
அது ஒரு நல்ல அக்கவுண்ட் உதவியாளர் வேலை , ராஜகோபால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார், கம்பெனியின் எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கிறார், தன் மேலாளருக்கு அதை தைரியமாக உரைக்கிறார்.
இப்போது மம்முக்கா மகன் அபு(சீனிவாசன்) அனுப்பிய கடிதத்தில் ராஜகோபாலனின் திருமண வயதில் இருந்த தங்கை அம்மணி கோவில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருப்பதை காட்டுகிறார், இதயம் கல்லாய் மாறி உறைந்து நிற்கிறார் ராஜகோபாலன், ஆறுமாதத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள் ,கண்ணீர் வறண்டு அழக்கூட தோன்றவில்லை இவருக்கு.
பின் வந்த நாட்களில் லட்சியத்துடன் கடுமையாக உழைத்து தன் மேலாளருக்கும் அரபாப் முதலாளிக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார் ராஜகோபால் , இப்போது மேலாளர் மேனோன் ஓய்வு பெறுகையில் அந்த மேலாளர் பதவி ராஜகோபாலுக்கு கிடைக்கிறது, உடன் கார், வீடு, நல்ல பெரிய சம்பளம் அனைத்தும் தேடி வருகின்றன, மம்முக்காவின் மகன் அபு முன்னின்று இவருக்கு ஊரில் அழகிய ஆற்றின் முன்பாக வீடு கட்டத் துவங்குகிறார்.
இவரது காரியதரிசி அலீஸ் ஆங்கிலோ இந்தியர்,இவருக்கு தானே விரும்பி வந்து படுக்கையில் விருந்தாகிறாள், மறுநாள் விடியலில் தன் தம்பிக்கு ஒரு NOC கேட்கிறாள். அப்போது விசாவுக்கு பதிலான NOC என்ற no objection certificate மட்டும் இருந்தால் போதும் ஒரு ஏழை இளைஞன் துபாய்க்கு நேர்வழியில் வந்து விடலாம்,இவர் இதற்கு தான் என்னோடு ஈஷினாயா என திகைத்தாலும் அவளின் குடும்பத்தின் கதை கேட்டவர், ஆகட்டும் முயன்று பார்க்கிறேன் என்கிறார்,பின்னாளில் கம்பெனியில் ஒரு NOC ம் தருகிறார், அலீஸ் நன்றியுடன் இவரால் ஒரு குடும்பம் முன்னேறப் போகிறது என்கிறாள், ஆண்களுக்கு சதையை விருந்தாக்கினால் தான் உதவுவார்கள் என தப்புக்கணக்கு போட்டதற்கு வருந்துகிறாள் ,முன்னாள் மேலாளர் மேனோன் தன்னை ஒரு NOC வேண்டி பல இடங்களில் வருத்தி ஆசை காட்டி உபயோகித்து உபேஷித்ததை பகிர்கிறாள் அலீஸ், ராஜகோபாலனும் அவளை பயன்படுத்தியதில் தனக்கு குற்ற உணர்வு இருப்பதை சொல்கிறார்.இப்போது தனிமையை விரட்ட மதுவை துணைகொள்கிறார்.
இவரின் நண்பர் மம்முக்காவுக்கு கார் விபத்து நேர்கிறது, தலையில் பெரிய காயம்,கை எலும்பு முறிவு, ஒரு மாதம் மருத்துவமனையில் இவர் தினமும் சென்று அமர்ந்து பார்த்ததில் நர்ஸ் மாலதி (ஸ்ரீவித்யா) நல்ல தோழியாகிறார், வார இறுதிகளில் தன்னை தேடிவந்து உடன் தங்கி உணவு தயாரித்து இவர் மீதான புரிதலில் தன்னையும் விருந்தாக்குகிறார் மாலதி.
மாலதிக்கு இவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டுவதேயில்லை, தான் விடுமுறைக்கு இரண்டு மாத விடுப்பில் ஏட்டுமானூர் போவதாயும் இவர் அப்போது தன் வீட்டிற்கு வர வேண்டும் , தன் தந்தையிடம் இவர் பற்றி நிறைய கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் கண்களில் அத்தனை ஏக்கம் தேக்கி சொல்கிறார் மாலதி,
மாலதியின் குடும்பம் ஊரில் நடுத்தரக் குடும்பம், ஸ்ரீ தனத்திற்கு பணமும் நகைகளும் சேர்க்க இங்கு துபாய்க்கு ஆறு வருடங்களுக்கு முன்பாக வந்தவர், தன் பக்கத்து ஊர் இளைஞர் ராஜகோபாலிடம் பேசி நட்பாகி விரும்பி, மணமுடிக்காமலே சுகித்திருக்கிறார், இந்த துணிச்சலான நர்ஸ் மாலதி கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக உருமாறியிருந்தார் நடிகை ஸ்ரீவித்யா,
தெய்வானுகிஹத்தில் பெரும் பணம் சம்பாதித்திருக்கிறார் ராஜகோபால் , ஊரார் வியந்து பார்க்க வீட்டைக் கட்டி முடிக்கிறார்,புழையோரத்தில் ஒரு வீடு.
தன் அம்மா சமையல்காரியாக இருந்த பெரிய தரவாடு இன்று நொடித்து ஜப்திக்கு வர இருக்கிறது, அந்த தரவாட்டின் பெண் வாரிசான ஸ்ரீதேவியை இவர் சிறுவயதில் விரும்பியிருக்கிறார், அவ்வீட்டார் மற்றும் ஸ்ரீதேவியின் அண்ணன் நேரே வந்து இவரிடம் ஸ்ரீதேவியை மணந்து அவளையாவது இந்த கடன் துயரில் இருந்து காப்பாற்றும் படி கெஞ்ச இவர் மாலதிக்காக சற்று யோசித்தவர் சிறுவயது காதலி ஸ்ரீதேவிக்காக சம்மதிக்கிறார்.அங்கு செல்கையில் இவரைக் கட்டி வைத்த அந்த மரத்தூண் விரிசல் விட்டிருப்பதை தடவிப் பார்க்கிறார்.
நர்ஸ் மாலதியிடம் இருந்து வந்த இரண்டு தந்திகளுக்கும் இவர் நெடுநாளாக பதில் சொல்லவில்லை , அவள் ஊருக்கு நேரில் சென்றும் பார்ப்பதில்லை. மாலதியின் அப்பாவே இவர் வீட்டுக்கு வந்தவர் இவருக்கும் ஸ்ரீதேவிக்குமான திருமண ஏற்பாடுகள் நடப்பதைப் பார்த்து எதுவும் பேசாமல் எழுந்து வந்து விடுகிறார் மானஸ்தர்.
தன் தங்கை குளத்தில் விழுந்து சாகக் காரணம் ஏழ்மையல்ல , அவளின் நான்கு மாத கர்ப்பம் என்று நண்பன் மாதவன் குட்டி (மம்மூட்டி)குடித்து விட்டு வந்து சண்டை இடுகையில் அறிகிறார்,அவனுக்கு ஸ்ரீதேவி மீதான காதலில் இப்படி பொறாமையில் பிதற்றுகிறான் என நன்கு உதைத்தவர்.
அபுவிடம் அதை கேட்டு உறுதி செய்கிறார், தன் தங்கை அம்மணியை ஏமாற்றிய நண்பனின் தங்கை ஸ்ரீதேவியை (ஜலஜா ) இவர் மணம் முடிக்க சம்மதம் சொன்ன நிலையில், திருமண நாளன்று ஸ்ரீதேவியின் அண்ணனை ஊர் பொதுவில் வைத்து அடித்து துவைத்து அவமானப்படுத்துகிறார், திருமணத்தை நிறுத்தி விடுகிறார், தான் இப்போது பெரும் கோடீஸ்வரன் என்று ஊரார் முன்பாக மார்தட்டுகிறார்.
ஸ்ரீதேவிக்கு வேண்டி ராஜகோபால் கால் பிடிக்கிறேன் என்று சமாதானம் சொன்னவனிடம் ஸ்ரீதேவி மறுக்கிறாள், நம் தரவாட்டுக்கு பெருமை உள்ளது, அதைச் செய்யலாகாது என்கிறாள். ஸ்ரீதேவியின் அண்ணன் தங்கை திருமணம் நின்றதாலும், தரவாடு வீடு கடன்காரர்களால் கோர்ட்டில் தோற்று ஜப்திக்கு வர இருப்பதாலும், அன்றிரவே விஷம் குடித்து இறந்து விடுகிறான்.
தன் கஷ்டப்பாட்டில் உதவாத ஊராரையும் தங்கையை ஏமாற்றி கர்ப்பமாக்கி அவள் சாக காரணமானவனையும் ராஜகோபால் பழி வாங்கி விட்டாலும் அதன் மூலம் நிம்மதி கிடைப்பதில்லை,
இப்போது தான் விரும்பும் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய அவள் தரவாடு தேடிப் போகிறார்,கதவைத் தட்டுகிறார் , ஆனால் காலம் கடந்துவிடுகிறது, அவள் பழைய தரவாட்டுப் பெருமைகள் பேசி தன் அண்ணன் இறந்ததற்கு இவர் காரணம் என்று இவரை வெளியே போகச் சொல்கிறாள், இனி ஒருக்கிலும் வரக்கூடாது என கதவை அடித்து சாத்துகிறாள், ராஜகோபால மேனனுக்கு அங்கே முதல் புறமுதுகு.
இப்போது தன்னை விரும்பும் நர்ஸ் மாலதியை திருமணம் செய்ய ஏட்டுமானூர் வீட்டுக்குத் தேடிப் போகிறார், அங்கும் காலம் கடந்து விடுகிறது, தந்தை சொன்ன டாக்டர் வரனை திருமணம் செய்து கொண்டு நேற்றே மாலதி துபாய் சென்றுவிட்டதை அறிகிறார் .ராஜகோபால மேனனுக்கு இங்கே இரண்டாம் புறமுதுகு.
சொந்த ஊரில் ஊரார் வியக்க கட்டிய வீடு , ஆனால் அங்கு நிலவிளக்கேற்ற ஒரு பெண் இல்லை, இரண்டு மாத விடுப்பு கரைகிறது,யாருக்காக இங்கே இருக்க வேண்டும்? என்று மீண்டும் துபாய் புறப்படுகிறார், வீட்டு கதவில் வீடு விற்பனைக்கு என்று அபுவிடம் சொல்லி பலகை மாட்டச் சொல்கிறார் .
தன்னிடம் வந்து இரண்டு மாத காலங்கள் கார் ஓட்டிய , கள்ளத் தோணியில் உடன் பயணித்த சந்திரனின் அப்பாவுக்கு நிறைய பணம் தருகிறார், அவர் ஐயோ போதும் என்கிறார்,அவர் மகனை தேடச் சொல்ல மீண்டும் விண்ணப்பிக்க, இவர் அவனை இனி தேட வேண்டாம், சந்திரனும் நானும் ஒன்றாகத் தான் தோணியில் பயணித்தோம்,அவனைத் தேடிப் பயனில்லை இனி தேடாதீர்கள் என்று சொல்லிவிட்டு அவர் முகத்தை பாராமல விமான நிலையத்திற்குள் நுழைகிறார்.கதை நிறைகிறது.
வேலை தேடி, வளைகுடா நாடுகளுக்கு குடிபெயர்ந்த மக்களின் உணர்வுகளை இத்திரைப்படம் அத்தனை நுணுக்கமாக சித்தரித்தது, அவர்கள் ஆசைக்கனவுகளை தியாகம் செய்து தான் பொன் பொருள் சம்பாதித்தனர்,70 மற்றும் 80 களில் சுமார் எண்பதாயிரம் இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தனர், இது அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் கூட.
இந்தியாவில் உறவினர்கள் "கல்ஃப்" இந்தியரின் செல்வத்தை மட்டுமே எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதை, கல்ஃப் வாழ்க்கை சொர்க்கம் போன்றது என்ற தூரத்துப்பச்சை மனநிலையையும் இத்திரைபடம் நன்கு உரைக்கிறது.
அரேபிய பாலைவனத்தின் குன்றுகள் மற்றும் பாலைவன வெப்பத்தின் மத்தியில் வாழும் லட்சக் கணக்கான இந்தியர்களின் உண்மையான வாழ்க்கையின் காலக் கண்ணாடி வில்காணுண்டு ஸ்வப்னங்கள் (கனவுகள் விற்பனைக்கு).
மலையாளத்தில் M.T.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் தேவலோகம் என்ற திரைப்படம் பாதியில் நின்றதால், எம்.டி. முஹம்மது குட்டி என்ற நடிகராய் மாறிய வழக்கறிஞருக்கு அவர் கதை திரைக்கதை எழுதி எம்.ஆசாத், இயக்கிய வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
இப்படத்தில் ஒரு தள்ளுமுள்ளு காட்சியில் முகமது குட்டி சுகுமாரன் என்ற உச்ச நட்சத்திர நடிகருக்கு எதிராக கிடைத்த சிறு கதாபாத்திரத்தில் கவனிக்கப்படக்கூடிய நடிகராக தன்னை நிரூபித்தார் அவர் .
வில்கானுண்டு ஸ்வப்னங்கள் படப்பிடிப்பின் போது, நடிகர் ஸ்ரீனிவாசனும் மம்முட்டியும் நெருக்கமாயினர், அவர்களது நட்பு இன்று வரைத் தொடர்கிறது.
பின்னாளில் கே.ஜி.ஜார்ஜ் மேளா திரைபடத்தை இயக்கியபோது, அவர் துணிச்சலான மோட்டார் சைக்கிள் ஜம்பர் கதாபாத்திரத்திற்கு அழகான திறமையான ஒரு புதிய நடிகரைத் தேடினார். எர்ணாகுளத்தில் ரேமான் சர்க்கஸில் படப்பிடிப்பு நடந்தபோது மம்முட்டியின் பெயரை நடிகர் ஸ்ரீனிவாசன் தான் இயக்குனருக்கு பரிந்துரைத்தாராம்.
கல்ஃப்வாசிகள் இந்த திரைப்படம் கண்டிப்பாக பாருங்கள் யூட்யூபில் சப்டைட்டில் இன்றி கிடைக்கிறது.
#mt_வாசுதேவன்_நாயர் ,#சுகுமாரன்,
#மலையாளம்,#ஸ்ரீவித்யா, #ராமசந்திரபாபு