மலையாள எழுத்தாளர் M. முகுந்தன் எழுதி 1989 ஆம் ஆண்டு வெளியாகி சாகித்ய விருது வென்ற தெய்வத்திண்டே விக்ருதிகள் மலையாள நாவலைத் தழுவி இயக்குனர் லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படைப்பு இது,
மலையாள எழுத்தாளர் முகுந்தனின் பெரும்பாலான படைப்புகளைப் போலவே, இந்த நாவலும் மய்யழி என்ற மஹியில் நடக்கிறது, 1952 ஆம் ஆண்டு ஃபிரெஞ்சு காலனியான மஹி விடுதலைக்குப் பின்னர் நடக்கும் கதைக்களம் இது.
மஹியில் பூக்கும் பூக்கள் எனது, அந்த கோட்டை எனது , ஒவ்வொரு மக்களும் எனது என்று உளமாற நேசிக்கும் மேஜிக் நிபுணர் அல்போன்சோ (ரகுவரன்) , அவரது மனைவி மேகி (ஸ்ரீவித்யா) மகள் எல்சி(மாளவிகா )
அல்போன்சோவின் நண்பர் ஆயுர்வேத வைத்தியர் குமாரன் ஆகியோரை மையமாகக் கொண்டது . மஹி காலனித்துவத்திலிருந்து விடுதலையான பிறகு அம்மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதை காலக்கண்ணாடியாக காட்டியிருக்கிறது.
இப்படத்தில் அல்போன்சோ கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிப்பு அற்புதமானது என்றால் தேய்வழக்கு,நம் தமிழ் திரைப்படங்கள் அவருக்கு தராத கௌரவத்தை இந்த அல்போன்சோ கதாபாத்திரத்தில் இயக்குனர் லெனின் ராஜேந்திரன் வழங்கியிருந்தார், அஞ்சலி திரைப்படத்தில் அவருடன் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் இக்கதாபாத்திரத்திற்கு இவர் மிகவும் பொருத்தமாக இருப்பார் என பரிந்துரைத்தவர், படம் நெடுக அவரின் நடிப்பை அப்படி எண்ணற்ற சட்டகங்களில் பதிவு செய்திருந்தார்,
ஸ்ரீ வித்யா நடித்த இந்த மேகி மதாமா கதாபாத்திரம் நம் தமிழ் ரசிகர்கள் அறியாதது. உயிர் நண்பர் குமாரனாக திலகன் வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்,
நடிகர் ரகுவரனுக்கு கிடைக்க வேண்டிய சிறந்த நடிகருக்கான தேசிய விருது இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் Tahader Katha திரைப்படத்திற்கு நடிகர் மிதுன் சக்ரபொர்த்திக்கு வழங்கப்பட்டது.
படத்தின் கதை : மஹியில் அன்று ஆயிரக்கணக்கில் மக்களை ஏற்றிக்கொண்டு ஃப்ரான்சிற்கு செல்லும் கடைசி குடியேற்றக்கப்பல் கிளம்ப இருக்கிறது, துவக்கக் காட்சியில் அல்போன்சோ (ரகுவரன்) கடற்கரையில் குழந்தைகளுக்கு மேஜிக் காட்டுவதைக் பார்க்கிறோம். அவர் மணலை சில இனிப்புகளாக மாற்றி அனைத்து குழந்தைகளுக்கும் அங்கே விநியோகிக்கிறார்.
அவர் அவர்களுடன் இருக்கும்போது ஒரு குழந்தையாகவே மாறுகிறார்,இவர் சம்பாதித்த செல்வம் எல்லாம் ஊராரின் மகிழ்ச்சி மட்டுமே,
அவரது மனைவி மேகி (ஸ்ரீவித்யா), கணவர் இத்தனை விட்டேத்தியாக இருப்பதைக் கண்டு கோபமடைகிறார், வார்த்தைகளால் விளாசுகிறார், ஆனால் அவளுக்கு உள்ளூர அல்போன்சோ மீது தீராக்காதலுண்டு, அல்போன்சாவுக்கும் அது தெரியுமாதலால் தெறிவிளிகளை அவர் காதில் வாங்குவதில்லை.
அவரும் அவரது குழந்தைகளும் தங்கள் பைகள் மற்றும் சாமான்களுடன் மஹியிலிருந்து ஃப்ரான்ஸிற்கு மக்களை குடியேற்றும் கடைசி கப்பலில் சென்று ஏறத் தயாராக உள்ளனர்.
ஆனால் நாம் யாருமே நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை ,
இங்கேயே இருப்பதைக் கொண்டு வாழ்வோம் என்று அல்போன்சோ சொல்கிறார், மேகியால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மிகவும் ஏமாற்றமும் விரக்தியும் அடைகிறாள் .
அதன் பின் விளைவுகளைப் பற்றி மேகி எச்சரிக்கிறாள் , மேலும் அவரது மேஜிக் கொண்டு அவர்களால் ஒருபோதும் வயிறு நிரம்பாது மகிழ்ச்சியாக வாழ முடியாது என்கிறாள், ஆனால் அவர் பின்வாங்குவதில்லை மிகவும் உறுதியாக இருக்கிறார்.
அவர் மேகியிடம், உன்னையும் நம் குழந்தைகளையும் நான் சம்பாதிக்கும் பணம் கொண்டு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் , மஹி மக்களுக்கு நான் தேவை என்கிறார்.
இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கிறோம், அல்போன்சோ மகள் எல்சி (மாளவிகா) ஒரு அழகான இளம் பெண்ணாக வளர்ந்திருக்கிறாள். மகன் மைக்கேல் பிரான்சிற்கு கள்ளத்தனமாக குடியேறியுள்ளான்.
அல்போன்சோ வீட்டில் பியானோ மற்றும் இவரது மேஜிக் சாமான்களைத் தவிர எந்த விலையுயர்ந்த பொருட்களும் இல்லை.
அல்போன்சோவுக்கு குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் உள்ளது,
இதனால் மேகி கடும் அவமானமும் அதிருப்தியும் அடைகிறாள்.
அல்போன்சோவுக்கு ஆயுர்வேத வைத்தியர் குமாரன் (திலகன்) மீது உயிருக்குயிரான நட்பு உண்டு , அல்போன்சோவுக்கு மது குடிக்க கிடைக்காத போது இவர் உரிமையுடன் அவர் வைத்யசாலையில் சென்று அவர் தயாரித்த அரிஷ்டத்தை புட்டியில் இருந்து ஊற்றிக் குடிக்கிறார்.
குமாரனின் மகன்கள் சசி (வினீத்)மற்றும் சிவா (சுதீஷ்) இருவரையும் தன் மகன்களாகவே கருதுகிறார்,
இவரது மகள் எல்சி அவர்களுடன் நண்பர்களாகப் பழகுகிறாள், தாய் மேகிக்கு இது பிடிப்பதில்லை, ஆனால் அல்போன்சோவுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, அவர்களுக்கு தங்கை இல்லை, அதனால் இவளை தங்கையாக பழகுகின்றனர் என்கிறார்.
எல்சி அவர்களுடன் ஓணம் கொண்டாடுகிறாள். அவர்கள் இவளிடம் எப்போதும் சீண்டி விளையாடி கிண்டல் செய்கிறார்கள்.
இருவரில் சசி அவள் மீது உண்மையில் மையல் கொள்கிறான் , அவளின் அருகாமைக்கும் ஸ்பரிசத்திற்கும் காத்திருக்கிறான் , கிடைக்கையில் தொட்டு விளையாடி முத்தம் வைக்கிறான்,
கிறிஸ்துமஸ் வருகிறது. கிறிஸ்துமஸை வரவேற்கும் மனநிலையில் மேகி இல்லை, கையாலாகாத அல்போன்சோவை இவர்களின் மோசமான வாழ்க்கைக்கு குற்றம் சாட்டுகிறாள்.
எல்சி அல்போன்சோவின் மேஜிக் நிகழ்ச்சி ஒத்திகைகளில் தந்தையுடன் கைகோர்ப்பதற்காக அவள் கோபப்படுகிறாள்.
ஆனால் எல்ஸி அப்பாவின் செல்ல மகள் ,எல்சியும் சசியும் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை மூங்கில் குச்சி கொண்டு வடிவமைத்து அதன் மீது வண்ணக்காகிதங்களை ஒட்டி அதனுள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து எளிமையாக பண்டிகையை வரவேற்கின்றனர்,
மேகியின் மகன் மைக்கேல் ஃப்ரான்ஸிற்கு சென்றவன் எங்கே இருக்கிறான் என்றே இவர்களுக்கு தெரியவில்லை, இதுவரை ஒரு கடிதமில்லை, பிரான்சில் இருந்து அவன் நண்பர்கள் யார் வந்தாலும் ஃப்ரான்ஸ் உலகத்தை விடவும் பெரிது, அங்கே ஒருவரை தேடுவது எளிதல்ல என்கின்றனர்,
மேகிக்கு புதுத்துணி,பரிசுகள், இறைச்சி , மது வகைகள் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட பிடிக்காததால் மகளிடம் காகித நட்சத்திரங்கள் செய்வதை நிறுத்துமாறு வீடே அதிர கத்துகிறாள்.
மனைவியின் காட்டுக் கூச்சல் அல்போன்சாவை மிகவும் பாதிக்கிறது. குமாரன் மகன் சசி மூலம் தான் தயாரித்த திராட்சை ரசத்தை தந்து அனுப்புகிறார், குடும்பத்தினர் அமர்ந்து திராட்சை ரசத்தை பருகியபடி கிறிஸ்துமஸ் தினத்தை வரவேற்கின்றனர்,
ஆனால் அதை வாயில் வைத்தது தான் தாமதம்,அந்த திராட்சை ரசம் அரிஷ்டம் போலவே உள்ளது,மூவரும் தனித்தனியே சென்று துப்புகின்றனர், இப்போது மற்றொரு திராட்சை ரச குப்பியை சிவா கொண்டு வருகிறான், எல்லோரும் அதைக் கண்டு திகைப்பது போல அக்காட்சி நிறையும், ரசமான ஒன்று.
இப்போது ஊரில் ஆடுமேய்க்கும் பாலுவின் மகன் தர்மபாலன் (சித்திக்) மேகியைக் காண வருகிறான், அவனுக்கு வயதில் மூத்த மேகி மதாமாவின் அழகு மீது தீராத மோகம் உள்ளது, அவன் மைக்கேலை ஃப்ரான்ஸில் வைத்து சில முறை சந்தித்ததாக மேகியிடம் சொல்கிறான்.
அவனை ஒரு கடற்கரையில் ஒரு பிரெஞ்சு பெண்ணுடன் பார்த்ததாக சொல்லி அழவைக்கிறான், அவன் மேகிக்கு ஸ்காட்ச் லிப்ஸ்டிக் ரூஜ் பெர்ஃப்யூம் என நிறைய பரிசுகளை வழங்குகிறான், பள்ளியில் இருந்து அழகிய எல்சி திரும்ப வருவதைக் கண்டவன் அவளை நோக்கி நகர்ந்து ஆசையுடன் கதைக்கிறான்.
தர்மபாலன் மேகியை குறுகுறுவென வெறித்துப் பார்க்கிறான், அவன் வரம்பு மீறுவதாக மேகி அறிந்தபோது, விரைவில் ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறாள். தர்ம்பாலன் அவளுக்கு சொற்பம் பணமும் தருகிறான், தரித்திரவாசிமேகி அதை வாங்க மறுக்கவில்லை, அவன் கிளம்பிய பின் பணத்தை அல்போன்சோவிடம் கொண்டு தந்து மீன் வாங்கி வரச் சொல்கிறாள் ,
அல்போன்சோ மேகியை குத்துவாக்குளால் காயப்படுத்த விரும்பவில்லை. அந்த இரவு விருந்தை அவரும் எல்சியும் உண்ண முடியாமல் எழுந்து போய் கைகழுவுகின்றனர், இதை பரிமாறும் முன்பே சொல்வதெற்கென்ன என்று கொதிக்கிறாள் மேகி.
மறுநாள் கணவன் மனைவியாக சர்சிற்கு சென்று விட்டு நீத்தார் சமாதிக்கும் மரியாதை செலுத்தி வந்தவர்களுக்கு ஆச்சரியமாக மகன் மைக்கேல் ஃப்ரான்ஸில் இருந்து திடீரென்று வந்து இறங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான்.
அவன் அம்மா மற்றும் சகோதரிக்கு நிறைய பரிசுகள் ,உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் நிறைய பொன் நகைகளை கொண்டு வந்திருக்கிறான், வீடு முழுவதும் ஒரு பண்டிகை மனநிலையைக் கொண்டிருக்கிறது, தன் அன்புமிகு சுற்றத்தாருக்கு அல்போன்சா ஒரு மது விருந்தை தருகிறார்.
எல்ஸி புதிய நளினமான கவுன் அணிந்து மது அருந்த சசியும் அங்கே மது அருந்துகிறான் , எல்சிக்கும் சசிக்கும் அங்கே ஆசை பற்றிக் கொள்ள மது விருந்தில் இருந்து நழுவி வெளிநேறியவர்கள் புல்தரையில் வைத்து சங்கமிக்கின்றனர்.
அனைத்து கொண்டாட்டங்களுக்கும் முடிந்த மறுநாள் முதல் நாள் ஆர்வம் முழுக்க வடிந்து போய் மைக்கேல் கொண்டு வந்த காசு முழுவதும் தீர்ந்து விடுகிறது, அவன் திரும்ப ஃப்ரான்ஸுக்கு போக ஐயாயிரம் பணம் வேண்டியிருக்க, அல்போன்சோ வேறு வழியின்றி வெற்றுப் பத்திரத்தில் கையொப்பங்கள் இட்டுத்தந்து பேராசை கொண்ட வெளிச்சபாடு தண்டல்காரனான ராஜன்.பி.தேவிடம் கடன் வாங்குகிறார்.
எல்சி சசி வீட்டில் ஊஞ்சல் வேகமாக ஆடுகையில் தலை சுற்றி மயங்கிவிடுகிறாள், அல்போன்சோ மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல, அவள் கர்ப்பமாக இருப்பது மருத்துவரால் கண்டறியப்படுகிறது ,
அல்போன்சோ இதற்கு யார் காரணம் எனக் கேட்கவில்லை, அவருக்கு சசி மீது ஐயம் இருந்தும் அவனை அவனுடைய அப்பா குமாரனிடம் காட்டித்தருவதில்லை, மஹிவாசிகள் யாரையும் இவர் நோகுவதில்லை, எல்லோரும் என் பிள்ளைகள் என நினைத்தேன்,தவறாகி விட்டது, இதற்கு யாரை வெறுப்பேன் என்று குமாரனிடம் சொல்கிறார் அல்போன்சோ.
மேகி மகளின் கருவை கலைக்க எண்ணுகிறாள். இதற்கு பெரிய தொகை தேவைப்பட்டபோது மகன் கொண்டு தந்த தங்கச்சங்கிலியை விற்க முடிவு செய்கிறார்கள், ஆனால் அவை அனைத்தும் முக்கு (coated) என்று சொல்லி அடகு கடையில் பணம் தர மறுக்கின்றனர்,
மகன் மைக்கேல் பெற்றோர்களை இப்படி முட்டாளாக்கியுள்ளான். மேகி வெறித்தனமாக கணவன், மகன் மற்றும் மகள் அனைவரும் தன்னை வஞ்சித்ததாக குற்றம் சாட்டி வெடிக்கிறாள், கருக்கலைப்பிற்கு பணம் தேற்ற அழகிய ஆடை அணிந்து, உதட்டு சாயம், ரூஜ் பூசி தர்மபாலனை அவன் வீட்டில் சென்று பார்க்கிறாள். அவனுடன் விருப்பமின்றி உறவு வைத்து பணம் வாங்கி வருகிறாள்.
அதே நாளில் பணத்துக்கு வேண்டி அல்போன்சோ தனது ரசிகனின் வீட்டில் தானே வலியச் சென்று ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். முடிவில் அவரின் ரசிகன் உச்சி குளிர்ந்து பெரிய தொகையை பரிசளிக்கிறார்,
அப்போது ஒரு பழைய சம்பவத்தைப் பகிர்கிறார், இவர் அவ்வூரின் புகழ்பெற்ற மேஜிக் நிபுனராக இருக்கையில் சிறுவனாக ஒரு நாள் இவரின் மேஜிக்கை காண விரும்பினாராம், அன்று டிக்கெட் வாங்க பணம் இல்லாததால் காவலாளியால் திருப்பி அனுப்பப்பட்டவர் மதில் மேல் நின்று பார்த்தவர் கீழே விழுந்து அடிபட்ட காயத்தை காட்டுகிறார்,
பணக்காரனாகி அவரை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்தாராம், அது இன்று நிகழ்ந்தது,ஃப்ரான்ஸிற்கு நன்றி என்கிறார். பரிசுகள் மற்றும் பணத்துடன். மகிழ்ச்சியாக அல்போன்சோ வீடு திரும்பியவர், தர்மபாலனின் வீட்டிலிருந்து திரும்பி வந்த மாகியுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டது தான் தாமதம், தான் அவசரப்பட்டு சோரம் போனதற்கு அப்படி வெடித்து அழுகிறாள் மேகி.
இப்போது மேகியும் எல்சியும் மஹி யூனியன் பிரதேசத்தை ஆளுகை செய்யும் புதுச்சேரிக்கு கருக்கலைப்பு செய்யச் செல்கின்றனர்.
இப்போது எல்சியை பார்க்க சசி வர,
நாங்கள் சட்டைக்காரர்கள், ஆணும் பெண்ணும் தொடுவோம் அணைப்போம் முத்தம் தருவோம் ஆனால் உறவில் வரம்பு மீற மாட்டோம் என்றவர்.
இனி மீண்டும் ஒருபோதும் எல்சியைப் பார்க்காதே என்று எந்த உணர்ச்சியும் காட்டாமல் சொல்கிறார்,
சசி இப்போது ஊரை விட்டே போய்விடுகிறான், எங்கும் யாருக்கும் தென்படுவதில்லை, குமாரன் அல்போன்சோ குடும்பத்துக்கு நிம்மதி வேண்டும் என்று தனது இன்னொரு மகன் சிவாவை வெளியூர் கல்லூரி விடுதிக்கு அனுப்புகிறார்,
புதுச்சேரியில் இருந்து திரும்பிய மேகி எல்சிக்கு ஃபிரெஞ்சில் குடியேறிய மணமகனை நிச்சயிக்கிறாள், அல்போன்சோ அந்த சம்மந்தத்துக்கு ஆர்வம் காட்டவில்லை.
சசி ஊருக்குள் திரும்ப வருகிறான், அவன் வருகையை தந்தை குமாரன் ரசிப்பதில்லை, சசி நான் எல்சியை மணக்கிறேன் என்கிறான், தந்தை இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது நாளை எல்சி திருமணம் , அது நின்றால் அந்த குடும்பம் தகரும் என்று , அவனை கையோடு அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு போக ரயிலேற்றி விட்டுத் திரும்புகிறார்.
மறுநாள் சர்ச்சில் வைத்து திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று எல்சி வெளியேறுகிறாள், சசியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தனது தந்தையிடம் மன்றாடுகிறாள்,
இப்போது மேகியும் அல்போன்சோவும் தனியாக இருக்க. கந்து வட்டிக்காரர் ராஜன்.பி.தேவ் வாங்கிய ஐயாயிரத்துக்கு வட்டித் தொகையை கேட்கிறார், நகைப்பாக பேசி அவமானப்படுத்துகிறார், கஞ்சா இழுத்த படி இருந்த அல்போன்சோ அவரை கீழே தள்ளி விடுகிறார்,
அவர் கடனை அடைக்க வீட்டுக்குள் சென்று தனது மேஜிக் உபகரணங்களைக் வெளியே கொண்டு வந்து வைக்கிறார், மேகி அவரிடம் பியானோ மற்றும் கிராமபோனை விற்கச் சொல்கிறாள், ஆனால் அல்போன்ஸ் மறுக்கிறார் , அவள் சோர்ந்து மனம் தளர்ந்து போய் இருக்கும்போது அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பவை அவை தான் என்கிறார். இனி மேஜிக்கிற்கு இவ்வூரில் எதிர்காலமில்லை, தான் இவ்வூருக்கு வேண்டாம் என்கிறார்.
தெருவில் எல்சி தண்டல்காரனிடம் கெஞ்சுகிறாள் ,அவரோ இவை வட்டிக்கு மட்டுமே தேறும், அசலிற்கு உன் அப்பா சிறைக்கு செல்லத்தான் வேண்டும் என்கிறார்,
அந்த சாமான்கள் அப்பாவின் வாழ்க்கை என்பதால் அவற்றை எடுத்து போக வேண்டாம் என்று எல்சி மேலும் கெஞ்ச அவர் என்னுடன் நீ ஒரு இரவைக் கழிக்க வேண்டுமே என்கிறார்.
எல்சி அப்பாவின் மேஜிக் பொருட்களை மீட்டு வந்து தர தண்டல்காரருக்கு இரை ஆகத் துணிகிறாள், அவரின் வீட்டுக்கு இரவில் சேலை உடுத்தி அலங்கரித்துப் போகிறாள், ஆனால் அதற்கு முன்பாகவே பக்கத்து ஊருக்கு படிக்கச் சென்ற சிவா தன் கம்யூனிச சகாவினரைக் கூட்டி வந்து அந்த ஊரின் கொடுங்கோலனான தண்டல்காரனை பள்ளிவாளால் வெட்டிக் கொன்றுவிடுகிறான், இவளை வீட்டில் பத்திரமாக கொண்டு விட்டு தப்புகிறான் சிவா.இது அல்போன்சா கையால் ஒருபாடு மிட்டாய்கள் வாங்கித்தின்ற எங்களின் கடமை என்கிறான்.
கடைசியாக அல்போன்சோ நண்பர் குமாரனிடம் சென்று , அவர் மகன்களின் எதிர்காலம் இப்படி ஆனதற்கு தானும் ஒரு விதத்தில் காரணமானதற்கு வருந்துகிறார், தான் மஹியிலிருந்து கிளம்பப் போவதாகச் சொல்கிறார், விடை பெறுகிறார் அல்போன்சோ.
அடுத்த காட்சியில் வண்ண வண்ண மிட்டாய்கள் நிறைந்த கடற்கரையை நாம் காண்கிறோம், அல்போன்சாவின் தொப்பி மணலில் கிடக்கிறது , அது மட்டும் கடல் நீரில் அடித்து வரப்பட்டிருக்கிறது. அங்கு கூடியிருந்த குழந்தைகள் தங்கள் அன்புக்குரிய மேஜிக் நிபுனன் எங்கே? என்று கேட்டபடி அலைந்து மிட்டாய் பொறுக்கிக் கொண்டிருக்கின்றனர்,
இப்படத்தை எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ரகுவரன்,திலகன், ஸ்ரீவித்யா மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு இங்கே எழுதி ஆவணப்படுத்துகிறேன்.இப்படத்தை இயக்குனர் லெனின் ராஜேந்திரன் மிக அற்புதமாக இயக்கியிருந்தார், அன்பின் வடிவான அல்போன்சோ கதாபாத்திரத்தை நடிகர் ரகுவரனைத் தவிர யாரும் இத்தனை நேர்த்தியாகச் செய்திருக்க முடியாது, இப்படத்தின் ஒளிப்பதிவு மது அம்பாட், மோகன் சிதாரா இசையில் ஐந்து அருமையான பாடல்கள் உள்ளன.
நடிகர் மற்றும் டப்பிங் கலைஞரான விஜய் மேனன்,
வருஷம் 16 திரைப்பட வில்லன்
இவர் ரகுவரனுக்கு தெய்வத்தின்டெ விக்ருதிகள் படத்தில் பின்னணி குரல் தந்துள்ளார்,
படம் யூட்யூபில் சப்டைட்டில் இன்றி கிடைக்கிறது
https://youtu.be/8rAVwDCObzQ