அடிமைப்பெண் (1969) படப்பிடிப்பில் எம்ஜியார் தன் ஆஸ்தான மேக்கப்மேன் M.பீதாம்பரம் நாயர் உடன் இருக்கும் போட்டோ இது,
எம்ஜியாரின் கழுத்தில் எம்.ஆர்.ராதா சுட்ட குண்டுக்காயத்தின் தையல் போட்ட வடு மறையாமல் இருந்த நிலையில் , அப்படம் முழுக்க இவர் பிரமாதமான நெக்லெஸ் ,ஸ்கார்ஃப் என எம்ஜியாரின் கழுத்தைச் சுற்றி அழகாக அத்தழும்பை மறைத்திருப்பார், இவருக்குப் பிரமாதமான aesthetic taste இருந்தது,இவர் வரைந்த மீசை,வைத்த விக் ,நடிகைகளின் அலங்காரங்கள் என அவை அத்தனையும் சொல்லி வைத்தாற்போல ஹிட் ஆயின.
அப்போது முப்பெரும் நடிகர்களான எம்ஜியார்,சிவாஜி,என்டிஆர் அவர்களுக்கு இவர் மேக்கப் கால்ஷீட்டைத் தான் முதலில் சொல்லி block செய்து வைப்பார்கள்,
எம்ஜியாரிடம் சென்று இவர் இன்று தம்பி ஷீட்டிங் இருக்குண்ணே ,போகவா? என்றதும் ,போ போ போ,என உடனே அனுப்பி வைப்பாராம்,தம்பி என்றால் சிவாஜி.
பாதாள பைரவி படத்தில் எஸ்.வி.ரங்காராவிற்கு 105 வயது கிழ மந்திரவாதி வேடத்துக்கு மேக்கப் போட்டவர் இவரே,சிவாஜிக்கு மேக்கப் போட்டு இவர் தான் மீசையை தன் கையால் வரைய வேண்டும்,அப்போது தான் அவருக்கு பரமதிருப்தி.
செய்யும் தொழிலில் அத்தனை கச்சிதம்,அதுவும் ராமர்,கிருஷ்ணர் வேடங்களுக்கு இவர் தயாரிக்கும் ரசாயனமற்ற அந்த மேகநீல வர்ண ரூஜ் கலவை ஒரு ரகசிய பேடண்ட்டாம்,
அதுவும் என்டிஆர் இந்த வேடங்களைப் பூணுகையில் அதிகாலை துவங்கி வெகு சிரத்தையாக உண்ணாவிரதம் இருப்பாராம்,பல மணி நேரம் மேக்கப் போட வேண்டிய இவரும் எதுவும் உண்ணாமல் கைகளில் சற்றும் தொய்வோ நடுக்கமோ இன்றி மேக்கப் இடுவாராம்,
மேக்கப் போட்டபின் இவர் எங்கும் போய் விட மாட்டாராம், அதை நடிகர்கள் சொரியாமல், கலைக்காமல், அசங்காமல் காப்பாராம், எந்த சக கலைஞரும் மேக்கப்பில் கை வைக்கும் முன் இவரிடம் அனுமதி வாங்க வேண்டுமாம், இவர் மேக்கப் போட்ட நடிகர்களைப் பார்த்து இந்த முகம் ஷாட் முடியும் வரை உங்களுடையது அல்ல,என்னுடையது என உரிமை கொண்டாடி காவலராக நின்றிருக்கிறாராம்.
எம்ஜியார்,என்டிஆர் திரைபடங்கள் நடிப்பதை நிறுத்திய பின்னர் இவரும் ஓய்வெடுத்துக் கொண்டவர் கடைசியாக மேக்கப் போட்டது முரட்டுக்காளை படத்தில் ஒரு காட்சிக்கு கிருஷ்ணர் வேடமிட்ட ரஜினிக்கு தானாம்.
இவரது கோபாலபுரம் வீட்டில் இவர் குடும்பம், தம்பிகள், தங்கைகள் , அவர்களின் குடும்பம் என 40 பேர் வசித்தனராம்,வீட்டினருக்கு தன் கைப்பட நல்ல காய்கறி,இறைச்சி,மீன் வாங்குவதில் விருப்பமுள்ளவர்,
அவர் 1970 களில் தயாரித்த ஒரு தெலுங்குப்படம் தோல்வியடைந்து வீடு வாசல் எல்லாம் விற்று கடனடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட குடும்பமே கஞ்சி குடிக்கும் நிலை வந்ததாம், எம்ஜியார் உடனே கால்ஷீட் தந்து அவருக்கு படம் செய்ய முன்வர, என்டிஆரும் என்னிடம் ஏன் சொல்லவில்லை? என கோபித்தவர் போட்டி போட்டு இவரை கடன் மீட்க வந்து ஒரு தெலுங்குப் படம் செய்து தந்தாராம்.
எம்ஜியார் தன் தேதிகளை இயக்குனர் சேதுமாதவனுக்குத் மாற்றித் தர நாளை நமதே படம் உருவானதாம், என்டியார் நடித்து தந்த தெலுங்குப் படமும் வெற்றியாம்.
எங்கள் தங்கம் படத்தில் எம்ஜியாருக்கு. அமெரிக்க ராக்கெட் பற்றி அறிவியல் கதாகாலட்சேபம் செய்ய இவர் போட்ட மொட்டைத் தலையில் குடுமி மேக்கப் அத்தனை ஹிட்டாகி, திரைவட்டாரத்தில் பெரிய பேச்சாகிப் போனதாம்.
அப்போது எம்ஜியார் படங்களில் ஒரு முக்கிய விதி , தனக்கும் தன் படத்தின் ஹீரோயினுக்கும் முதல் மேக்கப் பீதாம்பரம் அவர்களால் தான் செய்யப்பட வேண்டும், அந்த மேக்கப் டெஸ்ட் முடித்த பின் எடுக்கும் test போட்டோ பழம்பெரும் சினிமா போட்டோகிராப்பரான R.N.நாகராஜராவ் அவர்களால் தான் எடுக்கப்படவேண்டும் என்பது தான் அது,
எம்ஜியாரை V வடிவில் இரட்டை விரல்களைத் தூக்கி காட்டி பிரச்சாரம் செய்யும் புகழ்பெற்ற போட்டோவிற்கு முதலில் யோசனை சொல்லி எடுத்தது R.N.நாகராஜராவ்,இவரின் ஸ்டில் புகைபடங்களை எம்ஜியார் அத்தனை விரும்பினாராம்,
சிவாஜி அவர்கள் எல்லோரையும் உரிமையுடன் ஒருமையில் தான் பேசுவார் என கேள்விப்பட்டிருப்போம், அவர் இவரை கடைசிவரை பாஸ் என்றே அழைத்தாராம், காரணம் பராசக்தி படத்தின் மேக்கப் டெஸ்ட் போட்டோவை எடுத்து இவர் ஜெயிப்பார் என செட்டியாரிடம், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவிடமும் சொன்னவராம் R.N.நாகராஜராவ் ,
இவர் பற்றி சுதேசமித்திரன் செய்திஆசிரியர் நீலம் " ஸ்டில் மேதை நாகராஜராவ் "என ஒரு புத்தகம் எழுதி மேலே சொன்னவற்றை தொகுத்துள்ளார்.
பீதாம்பரம் பற்றி அவர் மகன் இயக்குனர் வாசு பல அரிய தகவல்களை "சாய் வித் சித்ரா " என்ற யூட்யூப் பேட்டிகளில் 3 பாகங்களாக பகிர்ந்துள்ளார், தமிழ் சினிமாவில் மிகவும் underrated ஜாம்பவான்கள் இந்த இருவர் என்றால் மிகையில்லை.
இந்த Man who had the magic touch - The Hindu கட்டுரையையும் வாசியுங்கள்
https://www.thehindu.com/features/cinema/Man-who-had-the-magic-touch/article14932665.ece
#பீதாம்பரம்,#நாகராஜராவ்