நகக்ஷதங்கல் (நகக் கீறல்கள் ) எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில், ஹரிஹரன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம்,இது தமிழில் பூக்கள் விடும் தூது என்று மீள் உருவாக்கம் செய்யப்பட்டு1987ஆம் ஆண்டு வெளியானது,அந்த படத்தை எல்லோரும் மறந்தாலும் அதன் பாடல்களை ஒருவர் மறக்க முடியாது, டி.ராஜேந்தர் பாடல்களும் இசையும், அந்த படத்தின் பாடல்களை யூட்யூபில் கேளுங்கள்.
மலையாள சினிமாவில் முக்கியமான முக்கோணக் காதல் க்ளாஸிக் படைப்பு இது.
காலஞ்சென்ற நடிகை மோனிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது இப்படத்துக்கு கிடைத்தது,மோனிஷா பெரும்தச்சன் போன்ற பல உன்னத க்ளாஸிக் படங்களில் நடித்தவர்,இதில் அவர் செய்த கௌரி கதாபாத்திரம் மறக்க முடியாதது,
வினித் தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அண்டர்ரேட்டட் நடிகர்,அவர் ஏற்று செய்த ராமு கதாபாத்திரம் மிகவும் கடினமானது,அதை அனாசயமாக செய்திருப்பார்.
புது முகங்களாக கலை சினிமாவில் அறிமுகமாவது சவாலானது, இப்படத்தில் லட்சுமி என்னும் கதாபாத்திரம் செய்த சலீமாவும் மனதில் இருந்து நீங்கா நடிகை, அவர் ஆரண்யகம் என்ற படத்திலும் நன்கு நிரூபனமானவர், அதன் பின்னர் அவர் அதிக படங்கள் செய்யவில்லை.
படத்தில் பாடகர் ஜெயச்சந்திரன் அண்டை வீட்டில் சோம்பித் திரியும் ஒரு நம்பூதிரி இளைஞராக கேமியோ கதாபாத்திரம் செய்துள்ளார்.
படத்தின் கதை எளிமையானது, அதை எம்.டி.வி அவர்கள் திரைக்கதையில் மெருகேற்றி,மணி அவர்கள் நறுக்கென எடிட் செய்து ,இந்நாள் கலைசினிமா இயக்குனரான ஷாஜி என்.கருண் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு மிகவும் நேரத்தியாக ,தொலைநோக்காக உள்ளது, ஒளிப்பதிவின் முக்கிய இலக்கணமான Rule of thirds ஐ பின்பற்றி சட்டகங்கள் அமைத்திருந்தார்.
படத்தின் கதை: தாய் தந்தையர் இல்லாத வினித் தன் தாய்மாமன் திலகனுடன் குருவாயூருக்கு சென்று தங்கி இருவார பிரம்மோசவத்தில் கலந்து கொள்கிறார்,
அங்கே ஊரின் பெரிய வக்கில் தரவாட்டு வீட்டின் வயதான பெண்மணி கவியூர் பொன்னம்மாவிற்கு துணையாக வருகிறார் வேலைக்காரப் பெண் மோனிஷா, வினித்திற்கும் மோனிஷாவிற்கும் கவிதைகள் மீதுள்ள நேசத்தால் நட்பு ஏற்பட்டு காதலாகிறது.
வினித்தின் தாய்மாமா திலகன் மிகுந்த கருமி, கோபக்காரர், பத்தாம் வகுப்பு தேறிய வினித்தை ப்ரி டிகிரி சேர்க்காமல் வீட்டு வேலைக்கு உபயோகிக்கிறார்.
வினித்தின் பக்கத்து வீட்டுக்கார நம்பூதிரியாக பாடகர் ஜெயச்சந்திரன் நடித்திருந்தார்,இவர் எதிலும் பிடிப்பில்லாதவர்,கொஞ்சகாலம் ஜோதிடம் படிக்கிறார், அது அலுக்கவும் ஓவியம் படிக்கிறார், அதுவும் அலுத்துப் போக சங்கீதம் படிக்க ஆசை கொள்கிறார்,மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டால் கச்சேரியில் சாதகம் செய்யலாம் என உறுதியாக நம்புகிறார்.
அவருக்கு எப்போதும் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும், அவ்வப்பொழுது வினித்தை அழைத்துச் சென்று சொக்கட்டான் ஆடுகிறார், தான் திருவனந்தபுரத்தில் அறை எடுத்து முழுநேரம் ஆசான் அமர்த்தி சங்கீதம் கற்கப்போவதாகவும் உடன் உதவிக்கு வினித்தையும் அழைக்க அங்கே அருகில் கௌரியும் வசிப்பதால் வினித்திற்கு நிலை கொள்ளவில்லை, அவளைப் பார்க்கத் துடிக்கிறார்,தாய்மாமனிடம் அனுமதி கேட்கிறார்.
வினித்தை தாய்மாமன் திலகன் வெளியூருக்கு விடுவதில்லை, எனவே ஓரிரவில் தன் வளர்ப்பு குரங்கு சகிதம் சொல்லாமல் வெளியேறுகிறார் வினித்.
புதிதாக வந்த இடத்தில் வினித் நம்பூதிரி ஜெயச்சந்திரனின் சங்கீதம் கற்றலுக்கு சேவகம் செய்கிறார், இஸதிரி,சமையல் வேலை சகலம், என உழைத்துக் கொட்டுகிறார், நம்பூதிரி கல்விக் கட்டணம் செலுத்த நேரத்தை வீண்டிக்காமல் பிரி டிகிரியில் முதல் க்ரூப் சேர்கிறார்.
இடத்திற்கேற்ப வளைந்து போகக்கூடிய குணம் அவரை எல்லோரிடத்திலும் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.கல்லூரியில் மாணவர் தலைவனாகிறார் நல்ல பேச்சாளராகிறார்.
இப்போது தன் தந்தையின் ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்த நம்பூதிரி தந்தைக்கு நடக்கும் செவ்வாய் திசை அவருக்கு மாரகம் செய்யும் என்று கணிக்கிறார்.எனவே இச்சூழ்நிலையில் தான் தந்தையுடனே இருக்க விரும்புவதாகக் கூறி வினித்தை நிர்கதியில் விட்டு ஊருக்குக் கிளம்புகிறார்,
வினித்திற்கு செய்வதறியாத நிலை, ஆனால் அந்த அனாதைக்கு பெரிய வீட்டு வேலைக்காரப் பெண் மோனிஷா உதவுகிறாள், தன் வீட்டு எஜமானியிடம் வினித்தின் அவல நிலையைக் கூறி வீட்டில் தலைமை சமையல்காரர் குதிரவட்டம் பப்புவிற்கு உதவும் எடுபிடி வேலையும் தங்குவதற்கு இடமும் வாங்கித் தருகிறாள்.
அவ்வீட்டில் கவியூர் பொன்னம்மாவின் மகன் ஜகந்நாதவர்மா அவ்வூரின் பெரிய வழக்கறிஞர், அவரின் ஒரே மகள் சலீமா அழகி என்றாலும் பிறவியில் பேச்சுதிறன் , செவித்திறன் அற்றவள்,மிகுந்த படிப்பாளி ,எனவே தந்தைக்கு மகள் மீது உயிர்.
வழக்கறிஞர் , வினித் கல்லூரியில் படிப்பது தெரியாமல் நிறைய எடுபிடி வேலைகள் வாங்குகிறார்,ஆனால் சலீமா அவருக்கு நிறைய உதவுகிறாள்.
ஒரு நாள் வழக்கறிஞர் வினித் படிக்கும் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க ,வினித் வரவேற்புரை நல்கி அவர் எழுதிய புத்தகங்களைக் குறிப்பிட்டு அதில் மேற்கோள் காட்டி பேசி அவரை அசரடிக்கிறார்.
வீட்டுக்கு வந்தவர் அவரைக் கொண்டாடுகிறார், அவரின் அடுக்களைப் பணிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தவர், தன் குமாஸ்தா வேலைகளுக்கும்,நிர்வாக வேலைகளுக்கும் வினித்தையே உபயோகப்படுத்துகிறார், அவரின் கல்லூரி கட்டணமும் செலுத்துகிறார்,
சலீமாவுக்கு வினித்தின் நல்ல பண்பான குணத்தின் மீது மையல் தோன்றி காதலாகிறது, இதை அவள் வேலைக்கார்பெண் மோனிஷாவிடம் பகிர அவளுக்கு பயம் வருகிறது,
இதனால் காதலன் ஜென்ம நட்சத்திரத்தன்று அவனுக்கு வில்வ மாலை அணிவித்து கோவில் வாசலில் கந்தர்வ மணம் போல செய்கிறாள், அன்று இரவே அவன் அறைக்கு வந்து அவனைத் தேற்றி ஆரத்தழுவி தன்னை விருந்தாக்குகிறாள்,
இப்போது அப்பாவின் ஈமைக்கிரியைகளை செய்து விட்டு,சங்கீதத்தைக் கைகழுவிவிட்டு வினித்தைப் பார்க்க வருகிறார் நம்பூதிரி ஜெயச்சந்திரன், இம்முறை வடக்கே காசி,மதுரா,கயா என தேசாந்திரம் போவது தான் தன் லட்சியம் உடன் நீ வர வேண்டும் என உரிமையுடன் அழைக்கிறார், வினித் விட்டாரே ஓட்டம்,தெறித்து ஓடுகிறார்.
ஊருக்குச் திரும்பிச் சென்ற நம்பூதிரி தாய்மாமனிடம் வினித் இருக்குமிடத்தைச் சொல்ல,இங்கே வினித்தை காண கோபமாக வருகிறார் திலகன், ஆனால் வினித்தின் செல்வாக்கான நிலையினைக் கண்டவர், அவரை ஆதூரமாய் தழுவிக் கொள்கிறார், ஊருக்கு மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்.
இப்போது வினித்தின் நன்றிக்கடனுக்கு அந்த தரவாட்டு வீட்டாரால் உடனடி பரீட்சை வைக்கப்படுகிறது.
வழக்கறிஞரின் தாயார் கவியூர் பொன்னம்மா படுத்தபடுக்கையாகிவிட்ட படியால் அவர் பேத்தி சலீமாவின் எதிர்கால நிலை குறித்து மிகுந்த கவலை கொள்கிறார்,
மாற்று திறனாளியான சலீமாவை யார் திருமணம் செய்வார்? என சதா அனத்துகிறார், அவரே வினித்திற்கு தரவாட்டு வீட்டின் முகலட்சணம் உள்ளது,எனவே வினித்தே சலிமாவைக் கைபிடிக்க வேண்டும் என்கிறார்,அவனுக்கு 17 வயதே ஆவதால் தற்காலம் சிறியதாக மணமுடித்து அவன் பார் கவுன்சில் தேறியதும் பெரிதாக திருமணம் நடத்தலாம் என மகனிடம் யோசனை வைக்கிறார்.
வினித் இருக்கும் அவல நிலைக்கு அவரால் இந்த கட்டாயத் திருமணத்துக்கு எந்த மறுப்பும் சொல்ல இயலவில்லை, ஒரு புறம் கந்தர்வ மணம் புரிந்த காதலி மோனிஷா,
மறுபுறம் தன்னை நேசிக்கும் பணக்கார வீட்டுப் பெண் சலீமா, மற்றொருபுறம் தன் படிப்பிற்கும் எதிர்காலத்துக்கும் அஸ்திவாரம் போட்டு கட்டிடமே எழுப்பித் தரும் தரவாட்டுக் குடும்பம் என யாரைத் தான் திருப்தி செய்வது? என வினித் தவியாய் தவிக்கிறார்,இனி என்ன ஆகும் ? படம் அவசியம் பாருங்கள்.
படத்தில் ஓஎன்வி குருப் அவர்கள் எழுதி பாம்பே ரவி இசையமைத்த நான்கு அற்புதமான பாடல்கள் உள்ளன,
மஞ்ஞள் பிரசாதவும் நெற்றியில் சார்த்தி என்ற பாடல் சித்ரா பாடினார்,அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.https://youtu.be/Bkj0jyd-SMA
இதில் ஜெயச்சந்திரன் பாடிய கேவல மர்த்ய பாஷ பாடல் மிக அருமையான ஒன்று,
https://youtu.be/rVpXFyFz2yo
அவர் பாடிய துக்கடாவான ஒரு கர்நாடக சங்கீத கீர்த்தனைப் பாடலும் உண்டு
தாஸேட்டா குரலில் ஆரேயும் பாவ காயகனாக்கும் ஆத்ம சௌந்தர்யமானுநீ பாடல் மிக அற்புதமானது,மனதில் ரீங்காரமிடுவது.https://youtu.be/_mklJayifLA
தாஸேட்டா குரலில் மற்றொரு பாடலான நீராடுவான் நிலையில் மிக ரம்மியமானது.https://youtu.be/GoNY9vSpfmI