பொங்கல் திருநாளின் மறுநாள் என் பாட்டி , அம்மா , என் சகோதரிகள், மாமியார், என் சகோதரி மகள்கள் என அனைவரும் அவர்கள் சகோதரர்கள் மற்றும் பிறந்த வீட்டுக்காக நலம் விரும்பிப் பாடும் கனுப்பாடல் உண்டு.
இதற்கென நாளை விடியலில் சூரிய வழிபாட்டில் மஞ்சள் கிழங்கு இலையில் மஞ்சள் தூள் கலந்த சாதம், குங்குமம் கலந்த சாதம்,தயிர் சாதம் சர்க்கரைப்பொங்கல்,என உருண்டை வைத்து காக்கைக்கு படைப்பர்.
அப்போது பாடும் கனுப்பிடி பாடல் இது.
கனுப்பிடியும் காக்காப்பிடியும் நானும் வைச்சேன்,மஞ்சள் இலை விரிச்சு வைச்சேன், மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வைச்சேன்
காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வைச்சேன் நிறம் நிறம்மா சாதம் வைச்சேன். கடும்பு துண்டும் கலந்து வைச்சேன்
வகைவகையா சாதம் வைச்சேன் வாழைப்பழமும் சேர்த்து வைச்சேன் அண்ணன் தம்பி குடும்பம் எல்லாம் அமர்களமாய் வாழ வைச்சேன்.
இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம் இதயத்தோட எடுத்து வைச்சேன்
கூட்டும் வைச்சேன் கூவி வைச்சேன்
கூட்டு குடும்பம் கேட்டு வைச்சேன்.
பார்த்து வைச்சேன் பரப்பி வைச்சேன் பச்சை இலையில் நிரப்பி வைச்சேன் கற்பூரம் ஏத்தி வைச்சேன் கடவுளை நான் வணங்கி வைச்சேன்
ஆரத்தி எடுத்து வைச்சேன். ஆண்டவனை வேண்டி வைச்சேன் பிறந்த அகம் ஓங்கி வளர ஆண்டவளை வணங்கி வைச்சேன்
(3 தடவை இந்த அடியை பாடுவர்)