உச்ச நட்சத்திரமா? my foot , நடிகன் நடிக்கையில் கௌரவம் பார்க்கக்கூடாது என்பது நடிகர் கமல்ஹாசன் கற்ற பாலபாடம்,மைக்கேல் மதனகாமராஜனில் மரவீட்டில் வைத்து சந்தானபாரதி மயங்கி கிடக்கும் மதன் முகத்தில் ரப்பர் செருப்பு காலால் மிதிப்பார் .
மகாநதி திரைப்படத்தில் கிருஷ்ணா முகத்தில் நீர் ஊற்றி எழுப்பி ஹல்லோ சொல்லி தனுஷ் (ஹனீஃபா) ஷூகாலால் முகத்தில் மிதிக்கையில், நமக்கு உள்ளம் பதைபதைக்கும்.
இப்போது மட்டும் இது ரஜினி படமாக இருக்கக் கூடாதா? என ஒவ்வொருவரும் ஏங்கிய தருணம் அது,
காரியமா? வீரியமா? என்கையில் காரியமே பெரிது என தனுஷின் கால் பிடித்து , தன் மகளின் இருப்பிடத்தை அறிவார் கிருஷ்ணா, ஹனீஃபா மிதித்தவை நிஜமாகவே மிதித்தது, கிருஷ்ணாவுக்கு வலித்து நெறிக்கட்டி கன்றியது, நிஜமாகவே நெறிக்கட்டி கன்றியதே, அப்படி புத்திரசோகத்தின் ஆழ்ந்த வலியை, தந்தைமையின் தவிப்பை , துரோகத்தின் ஆழ்ந்த வலியை , துரோகி தனுஷ் கால் பிடித்து கெஞ்சுகையில் காட்டியிருப்பார் கிருஷ்ணா,
காரியம் ஜெயித்து கடமை ஆற்ற முற்படுகையில் சம்மட்டியால் அடித்து டிரம்மில் வைத்து காங்க்ரீட் கொட்டி இறுகியதும் கடலில் எறிய இருப்பார்கள், சுதாரித்து, குட்டியை காக்க தாய் நாய் எப்படி சீறி விழுமோ அப்படி அல்லக்கைகளை தற்காப்புக்கு தாக்கிவிட்டு ஸ்தலம் விடுவார் கிருஷ்ணா,
அங்கிருந்து சிறைக்காவலர் முத்துசாமி வீடு, கல்கத்தா பயணம் அறிவித்து வெறும் இரண்டாயிரம் ரூபாயோடு கல்கத்தா ரயில் ஏறி சோனாகாச்சி என்றால் என்ன என அறியாமல் அங்கே செல்வார்கள் கிருஷ்ணா மற்றும் பஞ்சாபகேசன்.அதுவரை பரணி யமுனா இருவரும் சிறை அதிகாரி முத்துசாமி வீட்டில் பாதுகாப்புக்காக தங்கி இருப்பர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த கொச்சின் ஹனீஃபா அணிந்துள்ள கட் ஷூ மாடல் போல தோரணம் டிசைன் அலுவலகத்தில் யார் அணிந்தாலும் குறுகுறுவென பார்ப்பேன்,இது தனுஷ் அணிந்த ஷூ என கிண்டல் செய்வேன்,எனக்கு பிடிக்காத ஷூ மாடலில் இதுவே முதன்மையானது,அதே போலவே தனுஷ் அணிந்த பிரத்யேக ப்ரிண்டட் சட்டைகள், இது போல டிஷர்ட் என எது கண்டாலும் இந்த தனுஷ் கதாபாத்திரம் எனக்கு நினைவு வந்து விடும்.