"Experiment with truth"
ஹேராம் படத்தில் காந்தி சுடப்பட்ட பின்னர் அவரை தொண்டர்கள்
மல்லாக்காக தூக்கிக் கொண்டு நடப்பார்கள்,அங்கே காந்தியின் விழிகள் நிலைக்குத்தியபடி இருக்கும், ஒரு சுவற்றின் பின்னர் நின்று அக்காட்சியைப் அழுதபடி பார்ப்பார் சாகேத்ராம் ,
அந்த கணத்தில் அங்கே சத்தியம் என்ற வண்ண நிறம் காணாமல் போய் விடும், கருப்பு வெள்ளை ஒளிப்பதிவுக்கு மாறும், 1948 ஜனவரி 30 மாலை 5-30 முதல் 1999 டிசம்பர் 6 இவர் மரணிக்கும வரை கருப்பு வெள்ளை தான்,
சாகேத்ராம் பார்வையில் அதன் பின் யாரும் சத்யசந்தன் இல்லை,அதனால் நிகழ்காலக் காட்சிகள் அனைத்திலும் கருப்பு வெள்ளை நிறம் தான்.
பேரன் சாகேத்ராம் ஜூனியர் டாக்டர் முனவ்வரிடம் சொல்வார்.
"மகாத்மா காந்திக்கு தூங்கும் போது கூட light எரியனும், ஆனா என் தாத்தாவுக்கு இருட்டு தான் பிடிக்கும், ஒருவேளை என் தாத்தா மகாத்மா இல்லையோ "
பேரன் சாகேத்ராம் ஜூனியர் அந்த பொக்கிஷ பீரோவைத் திறந்து தாத்தா தனக்குள் புதைத்த ரகசியங்களைக் கண்ணுறுகையில் மீண்டும் படம் வண்ணத்துக்கு திரும்புகிறது.
சமீபத்தில் ஒரு மேடையில் வைத்து "ஹேராம்" படத்தை இன்றுவரை ஒரு இந்துத்துவ திரைப்படம் என்று விமர்சிக்கிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டனர்’’
அதற்கு ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் மார்க் ஆண்டனியின் கடைசிப்பேச்சு சீஸரின் கிரீடத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கான பேச்சு என்று யாராவது சொன்னால் என்ன செய்ய முடியும்?
புரூட்டஸுக்கு ஆதரவான பேச்சு என்று சொன்னால் என்ன செய்யமுடியும்?. ஏனென்றால், அதை மறுக்கவும் முடியாது. ‘Brutus is an honourable man’ என்கிற வரி அதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கும், ஒருவகையான வஞ்சப் புகழ்ச்சிதான் அது, அதே போலத்தான் ஹேராம் படமும்.
என்னுடைய மன்னிப்புக் கோரல்தான் ஹேராம் படமே, ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்து, பெரிய பக்திச் சூழலில் வளர்ந்த பையன் எப்படி பகுத்தறிவை நோக்கிப்போனானோ அதேபோல், காந்தி வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய என்னுடைய மன்னிப்புக் கோரல் தான் ஹே ராம்.
ஒரு வாரப்பத்திரிகையில் காந்தி அவர்களின் பிறந்தநாளுக்காக ஒரு கட்டுரை கேட்டபோது ‘டியர் மோகன்’ என ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில் ஒரு மன்னிப்புக்கோரல் இருக்கும்.
‘54-ல் பிறந்த ஒரு பையன்... உன்னைச் சுட்டதற்காக sorry... உன்னுடன் உரையாட வேண்டும்,மறுபடியும் மறுபடியும் உன்னைச் சந்திக்க முயற்சி செய்கிறேன். ஆனால் உன் தலைக்குப்பின்னால் இருக்கும் சூரியவட்டம் என்னைத் தெரியவிடாமல் செய்கிறது.
நான் கூட்டத்தில் இருந்து கை காட்டினால் நீங்கள் என்னைப் பார்ப்பதும் எனக்குத் தெரிய வேண்டாமா? எவ்வளவு நாள்தான் உங்களுக்குத் தெரியாமல் கைகாட்டிக் கொண்டே இருப்பது?.
உங்களைச் சுற்றியிருக்கும் காதி கமாண்டோக்களைக் களையுங்கள். நான் உங்கள் அருகில் வரவேண்டும், என எழுதியிருந்தேன்,அதன் நீட்சிதான் ஹேராம் படம்.
நான் காந்தியின் ரசிகனாக மாறிப் போனேன். அதை Anti காந்தி படமாக சிலர் நினைத்தார்கள் என்றால் அவர்களுக்கு ‘ஹேராம்’ புரியவில்லை, சினிமா தெரியவில்லை என்று அர்த்தம்.
என்னுடைய மிகப்பெரிய முயற்சி அது. நல்ல நடிகர்கள், நல்ல டெக்னீஷியன்களை வைத்துச் செய்தபடம் ஹேராம் ,நவாஸுதின் சித்திக்கி அந்தப்படத்தில் உதவி இயக்குநர்.
படத்தின் நீளம் அதிகமானதால் அவர் நடித்த காட்சிகள் கடைசியில் வேறு வழியின்றி நீக்கப்பட்டன, அந்தப் படத்தின் வழியாகச் சொல்ல எனக்குப் பல கதைகள் இருக்கின்றன.
துஷார் காந்தியின் நட்பு, திருமூர்த்தி பவனில் நடந்த அற்புதமான விஷயங்கள் என எல்லாம் நிகழ்ந்தது ‘ஹேராம்’ படத்தால்தான்.
எல்லோரும் சொல்வதுபோல எனக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம் அல்ல அது. டேபிளில் எங்களுக்கு லாபம்தான். காந்திக்கணக்கு என யாரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன் என்று முடித்தார் கமல்ஹாசன்.
#ஹேராம்,#கமல்ஹாசன்,#சாகேத்ராம்,#காந்தி,#இருட்டு,#grey_areas,#கருப்பு_வெள்ளை