தமிழ் சினிமா கடந்து வந்த பாதை
கைராசிக்காரன் (1984) திரைப்படத்தில் மெடிக்கல் மிராக்கிள் வகை காட்சி வருகிறது.
ராதா தன் குப்பத்தில், தெருகுழாயில் தண்ணீர் பிடிக்கையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வழுக்கி விழுந்து விட, அவரை வெந்நிற ஆடை மூர்த்தி மற்றும் மனோரமா நடத்தும் உப்புமா க்ளீனிக்கிற்கு கொண்டு வருகிறார், கர்ப்பிணிக்கு வயிறு கிழிந்து குழந்தையின் விரல் வெளியே துருத்திக் கொண்டுள்ளது, வெண்ணிற ஆடை மூர்த்தியும் மனோரமாவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போக சொல்ல, ராதா அரசு மருத்துவமனை சரியில்லை இரண்டு குப்பத்து குழந்தைகள் இறந்து போயின, எனவே இங்கு கொண்டு வந்தேன் , ஏதாவது செய்து காப்பாற்றும்படி மிகவும் வேண்டுகிறார், பிரபு மருத்துவ கல்லூரி படித்து மூன்றாம் வருட ட்ராப் அவுட், அவர் மருத்துவமனையில் எடுபிடிகள் செய்பவர், செய்வதறியாமல் திகைக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் மனோரமாவும் இந்த பரீட்சயத்தில் பிரபுவையே ஏதாவது செய்யச் சொல்கின்றனர்,வெண்ணிற ஆடை மூர்த்தி பதட்டத்தில் சிகரட் பிடிக்க, அதை வாங்கிக் கொண்டு போன பிரபு துருத்திக் கொண்டிருக்கும் குழந்தையின் விரலில் சிகரட்டால் சுட, அது விரலை உள்ளே இழுத்துக் கொள்கிறது, அதன் பின் சுகப்பிரசவம் நடக்கிறது, தாயும் சேயும் நலம், இதன் பின்னர் அரை டாக்டர் பிரபுவுக்கு கைராசிக்காரன் என்ற பட்டம் கிடைக்கிறது,உப்புமா க்ளீனிக் பிஸி மருத்துவமனை ஆகிறது, பிரபு தலைமை மருத்துவர், அவருக்கு கூப்பிட்ட குரலுக்கு ஏழு செவிலியர்கள் வந்து நிற்கின்றனர்.
போலி டாக்டர் பிரபு போலீஸ் அதிகாரிக்கு ஊசி போடுகையில் கையும் களவுமாக பிடிபட்டு சிறை செல்கிறார், பிஸி மருத்துவமனை இழுத்து மூடப்படுகிறது, காதலி ராதா திடீரென பணக்காரர் செந்தாமரையின் வாரிசு எனத் தெரிகிறது, அவர் திடீர் மகளை காஷ்மீர் அழைத்துப் போய் விடுகிறார், பிரபு சிறை மீண்டதும் மீதம் உள்ள படிப்பை படித்து தேர்ச்சி பெறுவார் என்று நினைத்தால் காதலி ராதாவைத் தேடி காஷ்மீர் சென்று டூயட் பாடுகிறார்.
இப்படத்தில் இசைஞானியின் இசையில் நிலவொன்று கண்டேன் பாடல் அற்புதமானது, அது பனிமலையில் பாடப்படுகிறது.
இசைஞானி பாடிய ஊமை மேகமே என்ற ரேர்ஜெம் இதில் தான் வருகிறது.
தேன்சுமந்த முல்லை தானோ மற்றும் கைவீசும் தாமரை போன்ற அட்டகாசமான பாடல்கள் உண்டு.
சில்க் ஆடும் ஏ ராஜா பாடல் உண்டு
மாணவர்கள் பிக்னிக்கில் பாடும் ஓதாமல் ஒரு நாளும் என்ற மலேசியா வாசுதேவன் பாடிய பாடல் உண்டு.
இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ரா.கி.ரங்கராஜன், இயக்கம் SSK சங்கர்.ஒளிப்பதிவு D. D. பிரசாத்.