வீட்டில் பழைய வெங்கல பூஜை மணி இருந்தது, பூஜையில் மணி அடிக்கையில் அதன் முத்து கம்பியுடன் கழன்று விழுந்து விட்டது,(ஒரு லட்சம் அடி மட்டும் mileage என்று கங்கணம் கட்டி செய்திருப்பார்கள் போல ) அதை பற்ற வைக்க பல்லாவரம் மார்க்கெட் மற்றும் நிறைய வெல்டிங் கடைகளில் கேட்டு பார்த்தேன், யாரும் அத்தனை சிக்கலான குறுகிய துளைக்குள் வெல்டிங் செய்யத் துணிந்து வேலையை எடுக்கவில்லை,
கடும் அலைச்சலுக்கு புதிய மணி 800₹ க்கு வாங்கலாம் தான், ஆனால் ஆகி வந்த பொருள் ஆயிற்றே , ஆன வரை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற கொள்கை உள்ளதே என்று மணியை வண்டியின் திறந்த வெளி பெட்டியில் தலைகீழாக இட்டு அலைந்தேன்,வண்டி ஓடுகையில் கிணிகிணியென ஒரு வாரமாக சத்தம் இந்த அலுவலை நினைவூட்டியபடியே இருந்தது,(யாரும் இந்த பளபள வஸ்துவை திருடிச் செல்லவில்லை பாருங்கள்)
குரோம்பேட்டை ஆர்ச் திரும்புகையில் இந்த திறந்த வெளி வெல்டிங்கடைக்காரர் பெயர் பலகை உச்சி வெயிலில் கண்ணில் பட, நிறுத்தி போன் செய்தேன், தான் அடுத்து கடைக்கு வரும் நேரம் சொன்னார், நேற்று பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு பூங்காவில் ஓட்டப்பயிற்சி சென்றுவிட்டு, அவரை அழைத்து இப்போது வரலாமா எனக்கேட்டு காலை 9-10 க்கு சென்று விட்டேன்,
திறந்த வெளி கடைக்கு கோணிப்பை பிரித்து திறக்கும் முஸ்தீபுகள் மட்டும் பத்து நிமிடங்கள் ஆகின்றன, பின்னர் gas குழாய்களை ஐந்து நிமிடம் சீராக பரப்பி சுருட்டல்களை நீவி சீராக்கி நம் வேலையை துவங்கினார், சிறிய வேலை தான் ஆனால் நச்சு பிடித்த வேலை, இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது, அழகாக பெரிய வளையத்தை மணிக்குள் பொருத்தி வெல்ட் செய்த பின், புதிய கம்பியை வளைத்து அதில் வெங்கல முத்தை பொருத்தி இணைத்து பற்ற வைத்து தந்தார்,
டிரம் டீ காரார் சென்றால் டீ வாங்கி தரலாம் என தேடினேன், தென்படவில்லை, அருகிலும் டீ கடை இல்லை, வேலை முடித்து சூடு ஆறுகையில் எவ்வளவு என கேட்டேன், 150₹ என தயங்கியபடி சொன்னார், கண்டிப்பாக தகும், அத்தனை சூடு மணியில், மகிழ்வுடன் வாங்கிக்கொண்டார், முதல் போணி பேரம் பேசாமல் தந்தீர்கள் சார் என்றார், அவரிடம் 250₹ சொன்னாலும் தந்திருப்பேன், காரணம் வேலை அதிகம் என்று சமாதானம் செய்து விட்டு வந்தேன்.
உங்களிடம் நச்சு பிடித்த ஏதாவது பற்ற வைக்க வேண்டிய பழைய பொருள் இருந்தால் திரு.ராஜாவை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு நேரம் குறித்துக்கொண்டு குரோம்பேட்டை லலிதா ஜுவல்லரி பக்கவாட்டு சாலையில் ஆர்ச் அருகே எடுத்து போய் கொடுங்கள்,கையோடு சுணங்காமல் பற்ற வைத்து பழையபடி செய்து தருவார்.
எனக்கு ஒருவழியாக இந்த conservation பணி இனிதே முடிந்தது.
conservation: not allowing something to be wasted, damaged or destroyed.