1968 | தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பு | ஜெமினி ஸ்டுடியோ |
ஃப்ரெஞ்ச் இயக்குனர் / ஒளிப்பதிவாளர் லூயி மாலி சென்னையில் சினிமா ஸ்டுடியோவையும் விட்டு வைக்கவில்லை, முதலில் அண்ணா சாலையில் இருக்கும் சஃபையர், புளு டயமண்ட் , எமரால்ட் வளாகத்தை காட்டியவர், அங்கே எதிரே வைக்கப்பட்ட நடிகர்கள் எம்ஜியார் ஜெய்சங்கர் ,முத்துராமன் படங்களின் கட்அவுட்களையும், வண்ண திரை பேனர்களையும் காட்டுகிறார்.
தன் கேமராவுடன் உள்ளே நுழைந்தவர் அங்கே பூச்சூடியிருக்கும் கேமராவை விசித்திரமாகப் பார்த்து நக்கலடிக்கிறார். லிப்ஸ்டிக் மற்றும் ரூஜ் பூசிய ஆண் நடிகர்களை நக்கல் அடிக்கிறார்,
இந்திய சினிமாவில் இத்தனை குண்டான பெண்கள் கதாநாயகியாக நடிப்பதை நக்கலடிக்கிறார். கண்ணில் க்ளிசரின் இடாமலே தாரையாக நீர் வார்க்கும் நடிகை பத்மினியை வியக்கிறார்.
உற்சாகமாக பணி புரியும் ஒளிப்பதிவாளர் K.S. பிரசாத் மற்றும் குழுவினரைக் காட்டுகிறார், கதர் சட்டை கதர் வேட்டி அணிந்து ஆஜானுபாகுவான தோற்றத்தில் உற்சாகமாகச் சென்று காட்சியை விளக்கி நடிப்பு சொல்லித்தந்து வேலை வாங்கும் இயக்குனர் ஏ.பி.நாகராஜனை வியக்கிறார்.
ஆக்ஷன் என்று சொன்னவுடன் டேக் வாங்காமல் படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிப்போன சிக்கல் சண்முகசுந்தரம் ( நடிகர் திலகம் ) தங்க ரத்தினம் (ஏவிஎம் ராஜன் ), முத்துராக்கு ( டி.எஸ்.பாலையா) நட்டுவாங்கனார் முத்துகுமாரஸ்வாமி ( கே.ஏ.தங்கவேலு ) வரதன் ( டி.ஆர்.ராமசந்திரன் ) , சுடலை ( ஏ.கருணாநிதி) கதாபாத்திரங்களை மெச்சுகிறார்,
ஏன் இந்தியப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெள்ளை சருமம் மீது இப்படி ஒரு மையல்? அதில் என்ன இருக்கிறது? என்று இப்படி நிறத்தை நேரம் செலவிட்டு மாற்றத் துடிக்கின்றனர் என கேட்கிறார் லூயி மாலி.
ஐரோப்பிய சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் அங்கே கேமராவிற்கு பூ வைக்க மாட்டோம் இங்கே வைக்கின்றனர் என முடிக்கிறார் லூயி மாலி
PS:Phantom India தொலைக்காட்சி தொடரை இரண்டு 16 mm கேமரா உபயோகித்து படமாக்கினர் என படித்தேன், லூயி மாலி view finder பயன்படுத்தவில்லையாம், உடன் பயணித்த ஒளிப்பதிவாளர் Étienne Becker க்கு முழு சுதந்திரம் தந்து விடுவாராம்.
முழு தொடருக்கும் அவர் ஸ்க்ரிப்ட் கூட எழுதவில்லையாம், film stocks அவர் உபயோகித்தவை, கலர் ப்ராஸஸிங் செய்தவை எல்லாம் மிகுந்த தரமானவை,
#லூயி_மாலி,#துக்ளக்,#louie_malle,#Things_Seen_in_Madras,#thillana_mohanambal,#தில்லானா_மோகனாம்பாள்,#ஜெமினி_ஸ்டுடியோ,#சிவாஜி_கணேசன்,#பத்மினி,#ஏவிஎம்_ராஜன்,#டிஎஸ்_பாலையா,#கேஏ_தங்கவேலு,#ஏபி_நாகராஜன்