தினமும் செல்லும் யோக ஆஞ்சனேயர் கோயில் அமைந்திருக்கும் இருபதடி அகல தெருவில் எதிரெதிரே புதிய மச்சு வீடுகள், வீட்டுப் பெண்கள் தத்தம் வீட்டு வாசலில் மேஜையிட்டு வெற்றிலை மாலை , துளசி மாலை,தாமரைமொட்டு, பூக்கள் இவை கட்டி விற்பர்,
அண்டை வீட்டார் தான் என்றாலும் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் அப்பெண்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் , எதுவும் தேவைக்கு மீறிய உற்பத்தி என்றால் அங்கு பெரும் வியாபார போட்டி வந்து விடும், சனிக்கிழமை ஏகாதசி விசேஷ தினங்கள் எல்லாம் அமளி துமளி ஆகும், அப்படி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு புரணி பேசி வியாபாரம் செய்வர்,வியாபாரம் முடிந்ததும் மீண்டும் தோழமையாகிடுவர்.
நான் தினமும் 20₹ க்கு துளசி அல்லது வெற்றிலை மாலை வாங்குவேன் ஒரே பெண்மணியிடம் தான் வாங்குவேன், போன வருடம் முதன் முதலில் இங்கே எங்கள் திருமணநாள் அன்று போகையில் கோயில் பிரதான கதவுக்கு தொட்டடுத்து கடை வைத்திருக்கும் குண்டு ஆள் அழுகிய துளசி மற்றும் தேங்காயை தந்து விட்டான்,
கோயிலில் மாற்றி வரச் சொன்னார்கள், மாற்றித் தருகையில் மிகவும் சுணங்கினான்,தரிசனம் முடித்து வந்து கொடுங்கள் என்ற டெக்னிக்கில் மொத்தம் 150₹ பக்கம் வாங்கி விட்டான் என்பதால் , அவனிடம் அதன் பின் எதுவுமே வாங்கியதில்லை, இந்த ஒரே பெண்மணியிடம் தான் தினமும் வாங்குவோம்.
இன்று போகையில் கோயிலின் உரிமையாளர் நடிகரின் மனைவி வழக்கம் போல தரிசனம் செய்ய வந்திருந்தார்,
அவரைச் சுற்றி பூக்கார பெண்மணிகள் கலவரமாக நின்று கொண்டிருந்தனர், இது தான் காரணம், இந்த குண்டு ஆள் தொடர்ந்து அழுகிய துளசி,பூமாலை, தேங்காய் என தந்து நீண்டகாலம் பணம் பறிப்பதால் நிறைய புகார்கள் நடிகர் வரை போயுள்ளன,
எத்தனை சொல்லியும் அந்த ஆள் திருந்தவில்லை, அழுகல் பொருள் இனி தந்தால் கடை வைக்க வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை, கள்ளுளி மங்கன் தோற்றான், விபூதிப்பட்டை,எலுமிச்சை அளவு குங்கும பொட்டு , ருத்திராட்ச மாலை என மாட்டிக் கொண்டு நான் ஜகத்குரு என்னிடம் ஆசி வாங்கிப் போனால் தான் ஆஞ்சனேயர் வரம் தருவார் என புருடா விட்டு பக்தர்கள் தலையில் கைவைக்கும் வயசன்,லபலப என யார் வந்தாலும் பேசியபடியே கையில் பொருட்களை திணித்து விடுவான்,முன்னாள் பர்மா பஜார் வியாபாரியாரிப்பான் போல.
நடிகர் இத்தனை பெரிய தனித்துவமான கோயில் கட்டியும் கூட எப்படி ஒரு ஆளால் பிரச்சனை பாருங்கள்,அவன் கோயில் வாசலில் இனி அழுகல் கடை வைக்க கூடாது என்பதால் அங்கு தத்தம் வீட்டு வாசலில் பூக்கடை வைத்திருந்தவர்களையும் இனி பூக்கடை வைக்ககூடாது என சொல்லும் நிலை,காரியம் பெரிதா வீரியம் பெரிதா என பொறுமை காக்கும் நிலை.
அந்த வீட்டுப் பெண்கள் விடியலில் சென்று பூ,துளசி,இத்யாதி வாங்கி வந்து சிறியதாக ஈட்டிய வருமானத்தில் இந்த குண்டு ஆளால் இன்று முதல் மண் விழுந்து விட்டது,
எத்தனை பெரிய நடிகர்,அவர் நினைத்தால் எத்தனை பெரியவர்களிடமும் பேசலாம்,இந்த விஷயத்தை அரை நொடியில் தீர்க்கலாம், ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நெருப்பு போல , அதிகம் அணுகாமலும் அதிகம் அகலாமலும் தான் இருக்க வேண்டும் என்பதை அவர் அறிந்ததால் யாரிடமும் எதற்கும் போய் நிற்கவில்லை எனப் புரிகிறது,சாக்கடையில் கல் வீசினால் சாக்கடை நம்மீது தான் படும் என்பதால் பலரும் இதுபோல தருணங்களில் சகித்துப் போக வேண்டி உள்ளது .
இன்று முதல் கோயில் உள்ளேயே அர்ச்சனை பொருட்கள் விற்கின்றனர், கோயில் வரும் பக்தர்களை வெளியில் இருந்து எதுவும் பூஜை பொருட்கள் வாங்கி வரவேண்டாம் என்று கோரிக்கை வைத்து நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.