மகாநதி திரைப்படத்தில் துலுக்காணம் கதாபாத்திரம் அத்தனை அற்புதமான ஒன்று, கான்விக்ட் வார்டர் என்ற மிதப்பில் திரிபவன், சிறைக்குள் வருகிற பாவிகள் , அப்பாவிகள் என அனைவரையும் ஆட்டிப்படைக்கிறவன், அவன் நோக்கம் அத்தனை பேரையும் பயத்தில் வைத்திருக்க வேண்டும், பரமசிவன் கழுத்து பாம்பு போல ஜெயிலரின் செல்லப்பிள்ளை, விசுவாசத் துடுக்கன், சிறைக்கைதிகளை கான்விக்ட் வார்டர் தன் துணையின்றி அடக்கி வழிக்கு கொண்டு வர முடியாது என்ற தைரியத்தில் ஜெயிலர் தந்ததை விடவும் கூடுதல் அதிகாரம் எடுத்து அள்ளி அனுபவிக்கிறவன், பஞ்சாபகேசன் உணவில் மண்ணைப் போடுகிறான்,தடுத்த கிருஷ்ணாவை அடித்துப் புடைக்கிறான், முகத்தில் எச்சில் உமிழ்கிறான்,
சிறைக்குள் யாருக்கும் நல்ல பெயர் எடுக்க விடாதவன், சிறை வார இறுதி நேர்காணல் சமயத்தில் கைதிகளுக்கு விருந்தினர் தருவதை வலுக்கட்டாயமாக பிடுங்கி பரிசோதிப்பவன்,தனக்கு என அதில் ஒதுக்குகிறவன், சிறைக்குள் கைதிகள் தன்னிடம் மட்டும் பீடி சிகரட் கஞ்சா வாங்க வேண்டும் என்ற சுயநலம் அதில் தெரியும் , கிருஷ்ணா மகள் தந்த அல்வாவை அவள் சொன்னபடியே கொஞ்ச கொஞ்சமாக சாப்பிட்டு தட்டில் மீதம் வைத்திருக்கிறார் கிருஷ்ணா, விடிகாலை தொரட்டி கொண்டு இழுத்து அதில் மூத்திரம் பெய்து கொக்கரித்து அகல்கிறான் துலுக்காணம்,
கையாலாகாத மனக்குமுறலில் கழிவிரக்கத்தில் சாம்பார் கிளறியபடி இருக்கும் இருக்கும் கிருஷ்ணா காதுபடவே ,சாம்பார் கையில் ஊற்றி சுவைக்கையில் என்ன ஐயரே? பெருங்காயம் மூத்திர நாத்தம் அடிக்கிது? என வெறுப்பேற்றுகிறான் துலுக்காணம், சாது கிருஷ்ணா மிரண்டு விடும் தருணம் அது, தோளைத் தொட்டு அழைத்து திரும்ப முகத்தில் சரமாரியான குத்துகள்,நெஞ்சில் மிதி, கட்டிப்பிரண்டு உண்டக்கட்டி அடுக்கிய தகர மேஜையை தூக்கி அவன் முகத்தில் எறிந்து பிண்டம் வைத்து , மேலே பாய்ந்து தாக்கும் அத்தனை அபாரமான நிஜ தெருச்சண்டை போன்ற கைகலப்பு அது,
சாது மிரண்டதை தாங்காத மிருகம் கொம்பு தீட்டுவது போல துலுக்காணம் அங்கே நெற்றியில் அடித்துக் கொண்டு தன்னையே உசுப்பேற்றிக் கொண்டு தவளை பாய்வது போல கிருஷ்ணா மீது பாய்வான் பாருங்கள்.இந்த காட்சி கோழைக்கு கூட உத்வேகம் தரும் காட்சி, சாக இருப்பவன் கூட பார்த்துவிட்டு சாகிறேன் என சொல்லும்படி படமாக்கப்பட்ட காட்சி.
லெச்சுமணா என கண்ணியில் மாட்டி துடிக்கும் பன்றி போல துலுக்காணம் அலறுவதை நம்மால் மறக்க முடியுமா?
லெச்சுமணன் வரும் முன் பிடித் துணியால் துலுக்காணத்தின் முகத்தை மூடி முறுக்கி கொதிக்கும் சாம்பார் டேக்ஸாவில் நன்கு முக்குவார் கிருஷ்ணா , துலுக்காணம் கையில் காய்கறி வெட்டும் கத்தியைப் பற்றியவன் காற்றில் கண்டபடி சுற்றுவான், கிருஷ்ணா அந்த கத்தி ஏந்திய கையை விறகடுப்பின் எரிதழலில் வைத்து சுடவும், அலறியபடி கத்தியை கைவிடுவான், அவனை சுழற்றி ஒற்றைக்கல் சுவரில் தூக்கி அடித்து விடுவார் கிருஷ்ணா,கண்ணெரியுது என குழந்தை போல அழுவான் துலுக்காணம், வெட்டுரூம் உளி ஒன்று வாகாக கைக்கு சிக்க,அதைக் கொண்டு இறக்கிவிடப் போகையில் சக கைதியர் குத்து குத்து என ஆகோஷிக்க, பஞ்சாபகேசன் நல்ல மருமகன் கொலைக்குற்றவாளி ஆகக்கூடாதே என அலறித் தடுக்க, அந்த இரும்புளியை தூர எறிந்து விட்டு, உலக்கையால் அரிசி நொய் குத்துவார்.
உள்ளே வந்த லச்சுமணன் பார்க்கும் பார்வையிலேயே துலுக்காணத்தின் எதிர்காலம் விளங்கிவிடும்,வழுக்கி விழுந்திட்டேன் என சொன்னவனை போய்யா போய் டாக்டர பாரு என அனுப்பி வைத்து கைதிகள் எல்லோரையும் திரும்பிப் பார்க்க , கிருஷ்ணாவின் முதுகு சட்டைப்புறம் பிசுக்காயிருக்கும், அதை வைத்து ஆட்சித்தலைமை மாற்றத்தை அங்கே கணித்துவிடுவான் லச்சுமணன்.
துலுக்காணத்தின் அடிப்படை முதலீடே பிறருக்கு பயம் காட்டும் தவ்லத்தனம் தான்,அந்த தெனாவட்டு போன பின் அவன் ஒரு செத்தபாம்பு, கிருஷ்ணாவின் முன்னால் திரண்டு வந்து அடுத்த தலைவன் நீ என நிற்கும் சிறைக்கைதிகளைப் பார்த்து கிருஷ்ணா கலங்கிப் போவார், இது எனக்கு தேவையில்லாத மரியாதை, நான் வெளியில் போகனும், என்னை என்வழியில் போகவிடுங்கள் என சொல்லாமல் சொல்லி உலக்கையைப் பற்றி தலையை குனிந்து கொள்கையில் அக்காட்சி நிறையும்,
இந்த காட்சி முழுக்க நிலைகொள்ளாத M.S.பிரபுவின் கேமரா அடுத்த காட்சியில் தச்சு பட்டறையில் நிலை கொண்டுவிடும். துலுக்காணம் மேஜை மேல் அமர்ந்து வேலையை வேடிக்கை பார்க்க அவன் அங்க அசைவில் அடிபட்ட தெருநாயின் நுட்பமான பம்மும் உடல்மொழி காணலாம், துலுக்காணம் எழுந்து விலக , கிருஷ்ணா அங்கே வேலை செய்ய நுழைவார், எல்லோரும் வணக்கம் தலைவா என்பர், கையில் ரம்பம் வைத்து அறுக்கும் கரகர குரல் கொண்ட பழுத்த கைதி ஒருவரும் கூட வணக்கம் தலைவா என்பார்.
சினிமாவில் ஒரு காட்சி எத்தனை வீர்யமாக பார்வையாளர்களுக்குள் அங்கு சிறையில் நடந்து முடிந்த ஆட்சித்தலைமை மாற்றத்தை நுட்பமாக சொல்லி விடுகிறது பாருங்கள்.
அது நாள் வரை துலுக்காணத்தின் முகத்தில் எண்ணெய்ப் பளபளப்பை காணலாம்,செல்வத்தின் பளபளப்பு, அதிகாரத்தின் பளபளப்பு, ஆனால் எல்லாம் அங்கே வற்றி முடிந்து முகத்தில் கொதிக்கும் சாம்பார் ஏற்படுத்திய வெந்தபுண் தழும்புகளையே நாம் பார்ப்போம், துலுக்காணம் தன்னிடம் கைதிகளுக்கு பயம் போனதை நன்கறிந்தவன் என்பதால் இனி தன்னை விட வல்லவனின் துணை கோருகிறான்,
தேங்கி உள்ள பீடி சிகரெட் உரம் என்ற கஞ்சா இவற்றை சிறைக்குள் விற்று காசாக்குதல் பெரிய கலை, விற்பனைக்கு இடையூராக உள்ளவர்களை வேவு பார்த்து களையெடுக்க வேண்டும், வாங்கிப் புகைபவனுக்கு கடனுக்கு தந்து சரியாக வசூல் செய்து வாங்க வேண்டும்,
பயம் போனால் பாக்கி வசூலாகாது,மொத்தத்தில் டாஸ்மாக் ஊழியர் மரியாதையாக பேசி மது விற்றால் சரிவராதே, அது போல ஒரு பிடிமானம் வேண்டும், அந்த பிடிமானம் தான் கைதிகனின் பயம், மரியாதை.
அதனால் தான் எஜமானன் லச்சுமனனிடம் இதை முறையிட்டு கிருஷ்ணாவை இதில் பிரதான பங்குதாரராக ஆக்க கேட்கிறான் துலுக்காணம்.
லச்சுமணன் லாவகமாக லத்திக்கொம்பால் ஜன்னல் கம்பியில் தட்டி அதிகாரம் கலந்த நட்புடன் கிருஷ்ணாவை கிசுகிசுத்த குரலில் வாய்யா என தன்னுடன் அழைத்து போகும் காட்சியை பாருங்கள்,
மேலும் துலுக்காணம் எஜமானன் லச்சுமணனை ஏன் நிஜமாகவே அடித்து காயப்படுத்த வேண்டும்? என வெகுஜன பார்வையாளர்களுக்குத் தோன்றும்,
சிறைத்துறையில், பொய்யைக் கூட நம்பும்படி சொல்ல வேண்டும், அப்போது தான் எடுபடும், அடி நிஜமாக இருந்தால் தான் அரசு சிறை மருத்துவர் மருத்துவச் சான்றளிப்பார், அப்படித்தான்
திமு திமுவென காவலர்படை சுழற்படிகளில் இறங்கி வந்து தச்சு பட்டறையில் மரம் இழைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவை கொத்தாக தூக்கிப் போய் மிதித்து லாடம் கட்டியது அங்கே நிகழ்ந்தது.
எத்தனை அற்புதமாக சிறை வாழ்வியலை மகாநதி பேசியிருக்கிறது பாருங்கள்.
மகாநதி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10159890096401340&id=750161339&mibextid=Nif5oz