தேவர் மகன் திரைப்படத்தில் வரும் இந்த ப்ளைமவுத் காரை ஒருவர் மறக்க முடியாது, இந்த ஆகாய நீலமும் தந்த நிறமும் கொண்ட கார் ஒரு கதாபாத்திரம் போலவே வரும், பெரியத்தேவரின் பழம் பெருமையை போற்றிக் காப்பதில் இக்காருக்கு முதலிடம் உண்டு,குடும்பத்தில் மூத்த அங்கத்தினர் போன்றது, அடுத்தது சாரட் வண்டி,இசக்கி தான் (வடிவேலு) கார் ஓட்டுனர், ரயிலில் இருந்து வந்த சக்தி காரை ஓட்டக் கேட்கையிலேயே அதான் நான் இருக்கேன்லய்யா என்று சொல்லுவார், அத்தனை பெருமைக்குரிய வாகனம், மருத்துவமனையில் கைதுண்டாகி படுத்திருக்கும் நிலையில் கூட ஒத்தக்கையில கார் கூட ஓட்டுவேன்யா என தன்னம்பிக்கையாகச் சொல்வார், இது மத்து கியர் என்ற 3 speed hand gear transmission கொண்டதால் அப்படிச் சொன்னார் இசக்கி.
பானுமதியை , சக்தியும் பஞ்சவர்ணமும் சென்று தூவலூரில் ரயிலேற்றிவிட்டு வரும் வழியில், இரு லாரிகள் முன்னும் பின்னும் வழி மறிக்கும், முன்னால் கடந்து சென்ற லாரியில் நீட்டியிருக்கும் முறுக்கு கம்பிகள் பின்னால் சக்தி ஓட்டி வரும் காரின் பின்னால் மோதும்,இரும்பு முறுக்கு கம்பிகள் இந்த பதினெட்டடி நீளமுள்ள ப்ளைமவுத் காரின் முன் பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு பின் பக்க கண்ணாடியையும் உடைத்து துருத்தும், சக்தியும் பஞ்சவர்ணமும் நன்கு தலையை குனிந்து கொண்டு தப்பும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானது, நாயகன் திரைப்படத்தில் இந்த காட்சியை வைக்க இருந்தார் கமல் ஆனால் தயாரிப்பாளர் வின்டேஜ் காரை சேதம் செய்ய பட்ஜெட் இடம் தராததால் அதில் இக்காட்சியை படமாக்கவில்லை.
இது 1955 plymouth belvedere 4doors hard top sedan, 8-cyl. 259cid/177hp 4bbl வகைக் கார், அமெரிக்காவில் டெட்ராய்ட் மாகாணத்தில் தயாரானது, அமெரிக்க muscle கார்களின் முன்னோடி இது, Chrysler நிறுவனம் தயாரித்த கார் இது,
ப்ளைமவுத் என்பது 1620 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இங்கிலாந்து அரசு நிலஅளவை செய்து முதன் முதலில் நிறுவப்பட்ட காலனியின் பெயர் ஆகும், பழமைக்கும் புகழுக்கும் பெயர் போன ப்ளைமவுத் காலனியை இக்காருக்கு Chrysler நிறுவனத்தார் சூட்டினர்.
இதன் அப்போதைய விலை 2000 அமெரிக்க டாலர்,இந்திய முகவர் விலை சுமார் 24000 ரூபாய் , அன்று ஆடம்பரமான எட்டுக்கல் வரிசை பிரம்மாண்ட ப்ளு ஜாக்கர் வைரங்கள் பதித்த நெக்லஸ் வாங்கும் விலை இது, பல ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கமுடிந்த விலை இது என்றால் மிகையில்லை, இதன் சொகுசு எழுத்தில் எழுதிவிட முடியாது, ஆறு பேர் மிக வசதியாக தாராளமாக அமர்ந்து போக ஏற்ற கார் , இதன் சஸ்பென்ஷன் எல்லாம் அப்படி மெத்து மெத்தென்று ஆனது, எந்த அலுங்கல் குலுக்கல் கரடு முரடானசாலைப்பள்ளங்கள் எதுவும் உள்ளே பயணிகள் அறியாமல் உச்ச வேகம் 120 கிலோமீட்டர் போக முடியும், இதன் ப்ரேக் எல்லாம் அத்தனை அற்புதமானது , எங்கு சாய்ந்தாலும் மெத்தென்று இருக்கும்,bucket seat வகை இருக்கைகளைக் கொண்டது.
இணைப்பு படங்களில் ப்ளைமவுத் காரின் படங்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள்.