"கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா" என்று கந்தசஷ்டி கவசத்திலும், "கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்" என்று கந்த குரு கவசத்திலும் பாடப்படும் கண்டி கதிர்காமம் கந்தசுவாமி மிகவும் தனித்துவமான சந்நிதி கொண்ட கோயில்.
உருவ வழிபாடுக்கு மிகுந்த முக்கியம் தரும் இந்து மதத்தில் இறைவன் திருவுருவத்தை பக்தர்கள் பார்க்க முடியாத அபூர்வமான கோயில், நாட்டின் அதிபர் கூட மூலவரை தரிசிக்க முடியாத கோயில்.
சிங்கள பூசாரிகள் மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்து பக்தர்களுக்கு கனத்த திரையை ஓரமாக சிறிதே விலக்கி பித்தளை வேல்களை பிரசாதமாக வழங்குகின்றனர், எத்தனை பக்தர்கள் வந்தாலும் வேல்கள் வழங்கும்படி ஆலய நிர்வாகம் வேல்களை பூஜையில் எப்போதும் வைத்திருக்கின்றனர்.
தெனாலி திரைப்படத்தில் தெனாலி சோமன் கமல்ஹாசன் கூட கையில் ஒரு பிரசாதமாக தந்த கதிர்காமம் கந்தசாமி வேல் எப்போதும் வைத்திருப்பார், அதை வாங்கி வைத்த மனோதத்துவ நிபுனர் ஜெயராம் கோட் பாக்கெட்டில் இருந்து திரும்ப வாங்குகிறேன் என அவரின் சட்டை பாக்கெட்டையே கிழித்து விடுவார் தெனாலி.
கமல்ஹாசன் என்றாலே Detail, ஆத்திகர்கள் பலருக்கும் தெரியாத இந்த வேல் பற்றிய சுவாரஸ்யத்தை ஒரு நாத்திகர் இருபது வருடங்களுக்கு முன்னால் தன் படத்தில் வைத்து அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார் பாருங்கள்.
PS: கோயில்பட்டி குமரேசன் மலை முருகன் கோயில் கண்டி கதிர்காமத்தில் இருந்து மண் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்.
இங்கு மூலவர் வேல் தான், கண்டியில் திரையை மட்டுமே தரிசனம் செய்ய முடியும், கோயில்பட்டியில் பக்தர்களுக்கு தரிசனம் உண்டு ,
முற்காலத்தில் கோவில்பட்டியிலிந்து இலங்கை சென்று வணிகம் செய்து வந்த வணிகப்பெருமக்கள், இலங்கையிலுள்ள கண்டி கதிர்காமமுருகன் ஆலயத்தை வழிபாடு செய்து வியாபரம் செய்ய விரும்பினர். ஆனால், இவர்கள் செல்லும் நேரமெல்லாம் இவ்வாலயத்தின் நடை சாத்தப்பட்டிருக்கும். அதனால், ஏமாற்றமடைந்த வணிகப்பெருமக்களின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அத்திருத்தலத்திலிருந்து மண் எடுத்துவந்து, தம் நகரிலுள்ள அத்தைகொண்டான் பகுதியில் முருகப்பெருமானின் திருத்தலம் அமைக்க ஏற்பாடு செய்தனர். அப்பொழுது அங்குவந்த முனிவர் ஒருவர், ஆகம விதிகளின்படி அமைந்துள்ள இவ்வூர் மிகவும் சிறப்புவாய்ந்தது என்றும், முருகப்பெருமானின் ஆலயம் இங்குள்ள குன்றின்மேல் இருப்பதே சிறப்பு என்றும் கூறினார். அதன்படி இவ்வூரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள சொர்ணமலையின் மீது முருகப்பெருமானை வேல் வடிவில் பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி, மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி, பைரவர் ஆகிய சந்நிதிகளையும் அமைத்து வழிபாடு செய்து கதிர்வேல்முருகனின் அருள்பெற்று வந்தனர்.