எந்த நாட்டில் மக்கள் பொது
போக்குவரத்தை தினசரி அலுவல்களுக்கு தன்னிச்சையாக பயன்படுத்துகிறார்களோ அந்த நாடே வளர்ந்த நாடு, வல்லரசு என தன்னை அறிவித்துக்கொள்ள தகுதியுள்ள நாடு.
அமீரகத்தில் இந்த நோல் அட்டை இல்லாதவர்களே இருக்க முடியாது,நோல் அட்டை ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானது,நோல் என்ற சொல் கட்டணம் எனபதன்( نول) அரபு வார்த்தையாகும். அமீரகத்தில் சென்று இறங்கியதும் , விமான நிலையத்தில் ஒருவர் வாங்குவது சிம் அட்டையும் நோல் அட்டையும் தான்.
நோல் அட்டை என்பது ஒரு ஸ்மார்ட் அட்டை ஆகும் , Near field communication (NFC) தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது , இதில் குறைந்தது 5 திர்கம் முதல் 5000 திர்கம் வரை செலுத்தி வரவேற்றம் ( top up) செய்து கொள்ளலாம்,நாட்டை விட்டுச் செல்கையில் அந்த தொகையை மெட்ரோ நிலையத்தில் எழுதித் தந்து திரும்ப வாங்கவும் முடியும்,நோல் அட்டையின் ஆயுட்காலம் 5 வருடம்.
இது துபாயில் உள்ள பல்வேறு RTA போக்குவரத்து முறைகளுக்கு ஒரே சொடுக்கில் பணம் செலுத்தும் பல நோக்கு அட்டையாகும் . துபாய் மெட்ரோ, துபாய் சிகப்பு RTA பேருந்துகள், துபாய் கார் டாக்ஸி, துபாய் டிராம் மற்றும் Dubai water taxis போன்ற நீர்வழி போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய பயணியர் தமது நோல் அட்டையை பயன்படுத்தலாம், உதாரணமாக தன் வீட்டில் இருந்து பணிக்கு கிளம்பும் ஒருவர் மெட்ரோ ரயில் ஏற இதை சொடுக்குகையில் அந்த நேரமும் ஏறிய இடமும் சர்வரில் பதியும், அவர் இறங்கும் மெட்ரோ நிலையத்தில் சொடுக்குகையில் அந்த நேரம் இடம் சரிபார்க்கப்பட்டு இவர் அட்டையில் இருக்கும் கட்டண தொகையில் இருந்து பயண தூரத்துக்கு ஏற்ப கட்டணம் கழிக்கப்படும், சரி இறங்கியவர் ஒருமணிநேரத்துக்குள் நகர பேருந்து ஏறுகிறார் என்றால் ஏறும் இடத்தில் சொடுக்கும் நேரம் சர்வரில் பதியும், இறங்கும் இடத்தில் சொடுக்கும் நேரம் சர்வரில் பதியும்,அவர் அங்கிருந்து ட்ராம் பிடிக்கிறார் என்றால் ஏறும் இடத்தில் சொடுக்கும் நேரம் சர்வரில் பதியும், இறங்கும் இடத்தில் சொடுக்கும் நேரம் சர்வரில் பதியும்,ஆக இந்த மொத்த மெட்ரோ , பேருந்து,ட்ராம் பயணங்களும் ஒரே பயணமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டு அவருக்கு ஒரே பயணத்துக்கான நிகர தூரத்துக்கான கட்டணம் மட்டும் கழிக்கப்படும்,
சாலைகளில் இருக்கும் கட்டண பார்க்கிங்கிற்கு ஆங்காங்கே kiosk நிறுவியிருப்பர்,அதில் இத்தனை மணிக்கு என தட்டச்சு செய்து நிறுத்தல் சீட்டு பெறவும் நோல் அட்டையை பயன்படுத்தலாம்.
இந்த நோல் அட்டையை அமீரகத்தில் மக்கள் தினசரி 15 லட்சம் முறைக்கு மேல் (தொடுகைகள்) பயன்படுத்துகின்றனர்.
TTR என்ற பயணசீட்டு பரிசோதகர்கள் பயண நேரத்தில் கையில் ஒரு NFC scanner கொண்டு வருவர், அதில் பயணிகள் தத்தம் அட்டையை வைக்க, அந்த பயணி பேருந்து அல்லது மெட்ரோவில் ஏறுகையில் தன் நோல் அட்டையை சொடுக்கினாரா? என்பதை காட்டித் தந்துவிடும், சொடுக்காதவர்களை கையோடு இறக்கிக் கொண்டுபோய் அபராதமிடுவதைப் பார்த்துள்ளேன், அதே போல நோல் அட்டையை இறங்குகையில் சொடுக்காமல் சிலர் இறங்குவர், அவர்களின் அட்டையை மறு பயணத்தில் ஏற்காது,கதவு திறக்காது,அவர் தனது நோல் அட்டையை மெட்ரோ நிலைய அதிகாரியிடம் தந்து reactive செய்து கட்டணம் கழித்து வாங்க வேண்டியிருக்கும்.
இந்த நோல் அட்டை போல தமிழ் நாட்டில் பலநோக்கு அட்டை பயன்பாட்டுக்கு வர வேண்டும், மக்கள் எளிதாக Local EMU,metro, நகர பேருந்துகள்,ஆட்டோக்கள்,ஷேர் ஆட்டோக்கள் என எல்லாவகை போக்குவரத்திலும் அந்த பலநோக்கு அட்டையை பயன்படுத்திவிட்டு நொடியில் கடந்து போகலாம், எத்தனை நேரம் மிச்சம்?
ஒவ்வொருவர் வீட்டில் இருந்து 200 மீட்டரில் பொது போக்குவரத்து சேவை துவங்க வேண்டும், கார் என்பது ஒரு சுமை, அதை வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்த பார்க்கிங் இல்லாதவர்கள் வாங்குவது தவறு , இன்று எந்த சிறிய தெருவில் வேண்டுமானாலும் நுழைந்து பாருங்கள், வீட்டின் முன் ஒரு கார் காம்பவுண்ட் சுவரை அணைத்தபடி நிற்கிறது, பல தெருக்களில் mini suv நிற்கிறது ,முப்பது அடி அகல தெருவில் இருபுறமும் (8+8)பதினாறு அடி இந்த சட்ட விரோத கார் பார்க்கிங் செய்வதால் ஆக்கிரமிக்கப்படுகிறது, மீதமுள்ள 14 அடியில் தான் பள்ளி வேன்கள், ஆட்டோ , லாரி இவை மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறது.
"A developed country is not a place where the poor have cars. It's where the rich use public transportation."