வீட்டு தோட்டத்தில் செடிகளுக்கு Mulching அல்லது முடாக்கு இடுதல் என்றால் என்ன எப்படி செலவின்றி இடுவது என்று பார்க்கலாம்.
நாம் அனைவரும் வீட்டில் சமையலுக்கு பூஜைக்கு தினமும் தேங்காய் உபயோகிக்கிறோம், அந்த சிரட்டைகளை, தேங்காய் மட்டைகளை , குடுமிகளை தினமும் குப்பையில் எறிந்து விடுகிறோம், அவற்றை இந்த இணைப்பு படங்களில் உள்ளபடி சதுரமாக உடைத்து செடிகள் வளர்க்கும் பாத்திகளின் மீது, தொட்டிகளின் முழுக்க நிரப்பி விட்டு நீர் பாய்ச்சலாம், பார்க்க மிகவும் அழகாக இருக்கும்,இந்த முடாக்கு களை,புல் என எதுவும் வளர விடாது, வெயில் நாட்களில் இதனால் செடிகள் வாடிப்போகாது, கடும் வெயிலில் வெறும் மண் தொட்டியில் உள்ள ஈரத்தை வெப்பம் உறிஞ்சிவிடும், மண் அத்தனை கெட்டி ஆகிவிடும் , ஆனால் இந்த நீரில் ஊறிய மட்டைகள் ,ஓடுகள் மெதுவாக நீரை மண்ணுக்கு அனுப்பும், செடி அல்லது மரத்தின் வேர் எப்போதும் காயாமல் செழுமையாக இருக்கும், நாட்படநாட்பட மண்ணுடன் மக்கி உரமாகிப்போகும்.அதன் பின் மீண்டும் முடாக்கு இடலாம்.
இந்த வகை dressing ஐ துபாயில் dry landscape ற்கு நிறைய கட்டிடங்களில் முகப்புகளில் செய்வார்கள்,பார்க்க மிகவும் அழகாக இருக்கும், இதை mulching என்பார்கள், இதனால் செடிகள் பல நாட்கள் நீரின்றி பிடித்து நிற்கும்.
எந்த உயிரும், எந்த பொருளும் ஒரு நாள் மக்கி மண்ணாகும், எந்த பொருளையும் மறுசுழற்சி செய்து பலநோக்கு உபயோகமாக மாற்றுவது சுற்றுச்சூழலுக்கு நன்று, தேங்காய் ஒடுகளை உடைக்க சுத்தியல் போதுமானது, மட்டைகளை சதுரமான வடிவில் நறுக்க chopping knife அல்லது உளியும் சுத்தியலும் போதுமானது, வீட்டின் landscape வித்தியாசமாக பார்க்க அழகாக தோற்றமளிக்கும், தெருவில் வீசும் குப்பையும் குறையும், இவற்றை குப்பையில் வீசினால் நகராட்சி அதை புறநகரில் புதிய புதிய குப்பைமேடுகள் உருவாக்கி குப்பை மலைகள் அமைத்து கொளுத்தி விடுகின்றனர், இதை கவுல் பஜார் வழியாக சென்றால் நீங்கள் பார்க்கலாம், பல்லாவரம் 200 அடி சாலை வழியாக சென்றால் பார்க்கலாம், நம் வீட்டு குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகள் அங்கே மலைகளாக குவித்து எரிக்கப்படுகின்றன.