அன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு பூங்கா கதவை மூடி சங்கிலியிடுகையில் எதிரே அமர்ந்திருந்த ஒரு காவி சந்நியாசிக்கு 20₹ தகர டப்பாவில் இட்டேன், அவரை இரு வாரமாக பார்க்கையில் track pant ல் பர்ஸ் கொண்டு போனால் 20₹ கொடுப்பேன்,
எப்போதுமே எதுவும் கேட்காமல் அமைதியாக உள்ளவர்களுக்கு மட்டுமே ஏதாவது தருவேன்,காரணம் தர இயலாத போது இவன் இன்று தரவில்லை என்று அங்கலாய்க்க மாட்டார்கள், நம்மை குறுகுறுக்க வைக்க மாட்டார்கள் , அன்று அவர் என் கண்களைப் நிமிர்ந்து பார்த்து விட்டார்,
இரண்டு குழந்தையா? மூத்தது பெண்ணா? குலதெய்வத்துக்கு மூன்று வருடமாக போகலையா? என முகம் படித்து கேட்டார், (இவர் நம் fb போஸ்ட் படிப்பாரோ என லேசான ஐயமிருந்தது) பேசாமல் மௌனமாகி விட்ட தாய் மாமா உண்டு தானே? என்றார், அவன் வீட்டு சித்தன் அருமை தெரிஞ்சு பார்த்துக்கங்க என்று மேலும் கண்ணை ஊடுருவினார், எனக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, வரேங்கய்யா என விடைபெற்று விட்டேன்,அடுத்த இரண்டு நாட்களில் சோளிங்கர் சென்று வந்துவிட்டோம்.
என் மூத்த தாய்மாமா சிவாஜி பித்தர் அவர் பற்றி நகைச்சுவையாக இங்கே நிறைய எழுதுவேன், அவர் சித்தர் என்று அறிய வந்த தருணம் மிகவும் surreal ஆக இருந்தது, காரணம் அவர் திருமண முறிவுக்குப் பின் வடக்கில் சென்று அலைந்து திரும்ப வருகையில் மௌனமாகிவிட்டார், இடுப்பில் விரலால் குத்தினால் தான் ஏதாவது பேசுவார், என் இளைய தாய் மாமாவுக்கு அவரின் 60 லட்சம் பெருமானமுள்ள மதுரை ஷகரில் உள்ள சொத்தை இந்தா பிடி என தந்து விட்டார் , காரணம் இளைய தாய் மாமாவின் பச்சை வயல் மனதை அவர் படித்திருக்கிறார், இன்று அவர் வீட்டில் மூன்று வேளை தருவதை சாப்பிட்டு, அவர் தினம் செலவுக்கு தரும் 100₹ யில் சிகரட் ஊதிக்கொண்டு அவர் வளர்ந்த மதுரை நகரின் தெருக்களில் நினைவுகளை அசைபோட்டு திரிகிறார்,மதுரையம்பதி விட்டு கடந்த 12 வருடங்களாக அவர் எங்கும் நகர்ந்ததில்லை,தொட்டடுத்த மீனாட்சி கோயில் அல்லது எந்த கோயில் உள்ளேயும் போனதில்லை, அகத்துள் இருக்கும் பிரம்மத்தை அவர் தரிசித்து அடங்கியிருக்கிறார் என்று உணர்ந்த நாள் அது, என் இளைய தாய் மாமாவுக்கும் இதைச் சொல்ல,அவர் இன்னும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
குலதெய்வத்துக்கு சென்று வந்து விட்டோம் என்று செய்தி சொல்ல இரு வாரமாக அந்த சூரியம்மன் கோயில் வாசல் சித்தரை தேடுகிறேன் காணவில்லை.