முதல் படத்தில் இருப்பது பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விற்பனையில் இருக்கும் Picture magnet,150₹ விலை ,
இது அரவிந்தரின் பாண்டிச்சேரி வருகையை குறிக்கிறது,
ஏப்ரல் 4 1910 ஆம் ஆண்டு அவர் SS Dupleix என்ற பெயர் கொண்ட பயணியர் கப்பலில் கல்கத்தாவிலிருந்து பாண்டிச்சேரி வந்தார்,
இன்றைய பாண்டிச்சேரி கடற்கரையில் காந்தி சிலை உள்ள திடலில் 1910 ஆம் ஆண்டு இரும்பு கடல் பாலம் இருந்தது,இது 1866 ஆம் ஆண்டு ஃப்ரெஞ்சு காலனி அரசால் கட்டப்பட்டது, பாண்டிச்சேரிக்கு வரும் கப்பல்கள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்த அங்கிருந்து பயணியர் படகில் இந்த கடல் பாலம் வந்தடைந்து, அங்கிருந்து shuttle ரயில் பெட்டி வழியே பாண்டிச்சேரி customs பரிசோதனை அலுவலகத்துக்குச் சென்று பரிசோதனைக்குப் பின் நகருக்குள் நுழைவர்.
இந்த இரும்பு கடல் பாலம் 1952 ஆம் ஆண்டு பலத்த புயலில் முழுக்க சேதமடைந்து விட்டது.
இந்த இரும்பு கடல் பாலத்தில் அரவிந்தர் முதலில் நுழைந்து புதுச்சேரி வந்ததால் இந்த பாலம் அரவிந்த ஆசிரமவாசிகளுக்கு மிகவும் முக்கியமானது, புனிதமானதும் கூட, இப்பாலத்தின் இரும்பு தூண்கள் இன்று கடலுக்குள் மூழ்கியுள்ளது,2004 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி கடற்கரையை சுனாமி தாக்கிய போது கடல் உள்வாங்குகையில் பல ஆண்டுளுக்குப் பின் அந்த இரும்புப் பாலம் வெளிப்பட்டதை இணைப்பு படங்களில் பாருங்கள்.
நான் 1988 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனாக பாண்டிச்சேரி சுற்றுலா செல்கையில் புதுச்சேரி கடற்கரையில் மணல்வெளி இருந்தது, இத்தனை கடல் கொந்தளிப்பு இருக்கவில்லை, இத்தனை கடல் முன்னேறவில்லை, இத்தனை கருங்கல் பாறைகள் இட்டு நிரப்பவில்லை, அன்றைய பாண்டிச்சேரியின் அழகு , சுத்தம், நளினம் , ஒழுங்கு இன்னும் கண்களில் காட்சியாக நிற்க்கிறது, பிரம்மாண்டமான பாரதி பூங்காவில் விளையாடியபின் சுத்தமான கடற்கரை மணலில் வெகுநேரம் விளையாடி பானிபூரி சாப்பிட்டு கூட்டமான கடைவீதியில் சுற்றியது பசுமையாக நினைவில் உள்ளது, 1989 ஆம் ஆண்டு புதிய துறைமுகம் கட்டத்துவங்கியதும் கடல்அரிப்பு நிகழ்ந்து மணல் நகர்வு தடைபட்டு கடல் முன்னேறி இந்த உலகப் புகழ்பெற்ற பாண்டிச்சேரி promenade ஐ கபளீகரம் செய்யத் துவங்கியது.
இந்த தண்டவாளம் அமைக்கப்பட்ட இரும்பு கடல் பாலம் 1988 ஆம் ஆண்டில் அரித்து குச்சி குச்சியாக இரும்பு தூண்கள் மட்டுமே எஞ்சியிருந்ததை நான் கண்டுள்ளேன் ,
1952 ஆம் ஆண்டு இன்று நாம் காணும் new iconic pier காங்க்ரீட் பாலம் கட்டப்பட்டது, இன்றும் காட்சிக்கு உள்ளது, கடந்த 2022 மார்ச் 5 அன்று அப்படியே ஒரு பகுதி சேதமடைந்து கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.
இன்று கப்பல் மூலம் மண் பீய்ச்சி அடித்து கடல் முன்னேறிய பாண்டிச்சேரி கடற்கரையில் எல்லாம் மணல்வெளிகள் மீட்கப்பட்டுள்ளன, செயற்கை மணல்வெளிகள் மிகுந்த பராமரிப்பும் பிரயத்தனமும் கோடிக்கணக்கான நிதியும் கோருபவை, இந்த பணிகளை பாண்டிச்சேரி அரசு தொடர்ந்து சிரத்தையாக செய்யும் என நம்புகிறேன்.
அலிப்பூர் குண்டு வெடிப்பு சதி இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும் கிளர்ச்சியாகும்.
பல ஆண்டுகள் நடந்த வழக்கில் மயிரிழையில் அரவிந்தர் 17 பேர்களுடன் விடுதலையானார், அந்த விடுதலையை அரவிந்தரே எதிர்பார்க்கவில்லை, அவரை, மீண்டும் எப்படியாவது வேறு குற்றவழக்கில் சிக்க வைக்க பிரிட்டீஷ் ஏகாதிபத்ய அரசு சதா கண்காணிக்க, அவர் கல்கத்தாவில் இருந்து தப்பியவர் மேற்கு வங்கத்தின் ஃப்ரெஞ்சு காலனியான சந்தன்நகரில் பல நாட்கள் தலைமறைவாக இருந்தார், தன் நெருங்கிய சகாக்கள் நால்வருடன் மீண்டும் கல்கத்தா துறைமுகம் வந்து பல சோதனைகளை கடந்து கப்பல் ஏறினார், அங்கிருந்து ஃபரெஞ்சு காலனியான புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்து அரசியலுக்கும் புரட்சிக்கும் முழுக்கு போட்டு புது தவவாழ்வை துவங்கிய கதை படிக்க மிகவும் சுவாரஸ்யமானது.
30 ஏப்ரல் 1910 ஆம் ஆண்டு அரவிந்தரை ஏற்றிக்கொண்டு வங்கக்கடலுக்குள் பாதுகாப்பாக பயணித்து நான்கு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 4, 1910 அன்று புதுச்சேரிக்குள் இறக்கி விட்ட கப்பலின் பெயர் SS Dupleix இணைப்பு படத்தில் பாருங்கள், அன்று பயணிகள் கப்பலில் முதல் வகுப்பில் பயணிக்க 600₹ ஒருவழிக்கு கட்டணம்
இருந்துள்ளதைப் பாருங்கள், இக்கப்பல் பாண்டிச்சேரிக்கு பின் கொழும்பு , எகிப்து ,மார்செய்ல்ஸ், சீனா,ஜப்பான் என சுற்றியிருக்கிறது.
பழைய புகைப்படத்தில் இரும்பு கடல் பாலத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் 8 கருங்கல் தூண்களைப் பாருங்கள்,பாதுகாப்பு அரணான பீரங்கிகளைப் பாருங்கள், இந்த கருங்கல் தூண்கள் 1866 ஆம் ஆண்டு செஞ்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள வெங்கடரமணர் திருக்கோயிலில் இருந்து பெயர்த்துக் கொண்டு வந்து நிறுவப்பட்டவை, 1963 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு இந்த காந்தி சிலை 1965 ஆம் ஆண்டு அந்த இரும்பு பாலத்தின் முன்னால் உள்ள அரைவட்ட திடலில் இந்த கருங்கல் தூண்களுக்கு நடுவே நிறுவப்பட்டது, சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலையை செய்த சிற்பி D.P. ராய் சவுத்ரி அவர்கள் வடித்த சிலை இது.
அரவிந்த ஆசிரமம் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான சம்பவம்.
சிதலமடைந்து இருக்கும் செஞ்சி வெங்கடரமணர் திருக்கோயில்