இந்தியாவில் 90 களுக்கு முந்தைய லைசன்ஸ் ராஜ் காலத்தில் எந்த வெளிநாட்டுப் பொருளையும் வாங்குவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது, அப்படி வாங்கினால் கள்ளச் சந்தையிலோ அல்லது காப்பி , பர்ஸ்ட் ரெப்ளிக்கா அல்லது டெல்லி செட் வகைகளைத் தான் வாங்கி இன்புற வேண்டியிருக்கும்.
எந்த ஒரிஜினல் சோனி டிவி, விசிஆர் , கார்ட்லெஸ் போன், வீடியோ கேம், ஆண்கள் மற்றும் பெண்களின் ஃபாரின் வாட்ச் , எல்லாவற்றுக்கும் இது தான், குறிப்பாக ஃபாரின் ஸ்விஸ் வாட்சுகளுக்கு பெரிய இறக்குமதித் தடை இருந்தது, ஒரிஜினல் பில்லுடன் ஸ்விஸ் வாட்ச் கிடைத்தால் பெரிய லாட்டரி போல.
ஸ்விஸ் வாட்சில் இந்தியாவில் மிகப் பிரபலமான வாட்ச் என்றால் பேவேர் லூபா ப்ராண்ட் வாட்ச் ஆகும், நடுத்தர குடும்பத் தலைவர்களின் கனவு வாட்ச் பேவேர் லூபா, காரணம் 280 வருடப் பழமையான ப்ராண்ட், பழமையான ஸ்விஸ் வாட்சில் இரண்டாமிடம்,1920 ப்ரிடிஷ் இந்தியாவில் இது இங்கே அறிமுகமாகையில் அதன் புராதானம் 120 ஆண்டுகளாம்.
சுதந்திர இந்தியாவின் தேசி வாட்சான HMT 1965 முதல் வெற்றிகரமாக செயல்படத் துவங்கி மத்திய 1990 வரை கோலோச்சியது, அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு வேண்டி அன்றைய நேரு அரசு வெளிநாட்டு வாட்சுகளின் நேரடி விற்பனையை தடை செய்தது, அதன் காரணமாக 70 களின் துவக்கத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது.
பின்னர் ஏக போக ராஜாவாக HMT ராஜ நடை போடத் துவங்கியது , அவர்கள் கோலோச்சிய காலகட்டத்திலேயே இந்த பேவேர் லூபா கள்ளச் சந்தையில் HMT க்கு கடும் போட்டியாக இருந்தது, இது Father to Son watch வகையரா, கையில் அணிந்தால் மட்டும் ஓடும், மிகவும் நுணுக்கமான பேலன்ஸ் ஸ்டாப் மற்றும் இலேசான பற்சக்கரங்கள் கொண்டது, அத்தனை கம்பீரம்.
என்னைப் பொருத்த வரை வாட்ச்சின் இலக்கணம் என்றால் ஆட்டோமேட்டிக் தான் , இந்த குவார்ட்ஸ் வாட்சுகளை கணக்கில் சேர்க்கவே மாட்டேன், தினமும் 15 தரம் மேல் நோக்கி கீ கொடுக்கும் மெகானிக்கல் வாட்சுகளைக் கூட கணக்கில் சேர்ப்பேன்.
நம் தேசி ப்ராண்டான HMT ஜனதா மற்றும் பைலட் மெகானிக்கல் வகையறா வாட்சுகள் மக்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டவை, இந்த இரு வகை வாட்ச் டயல்களில் எத்தனை அழகுற வடிவமைக்கப்பட்ட மினிமலிசம் பாருங்கள், நம் மும்பையின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைனில் M.Arch ப்ராடக்ட் டிசைன், முதல் பேட்ச் முடித்து வெளியேறி HMT ல் பணிபுரிந்த யாரோ பெரிய ப்ராடக்ட் டிசைனர் தான் அதை வடிவமைத்திருக்க வேண்டும், இன்னும் பழைய HMT ஜனதாவும் ,பைலட்டும் eBay ல் 2000 ரூபாய்க்கு கிடைக்கின்றன.
பழைய Favre Louba வாட்ச்கள் 6000 முதல் மின்ட் கன்டிஷனில் ebayல் கிடைக்கின்றன, பேவேர் லூபா பற்றி வண்ணதாசன் , நாஞ்சில் நாடன் தங்கள் சிறுகதையில் மேற்கோள் காட்டியுள்ளனர், சிறு வயதில் என் மாமா ஒருவரிடம் பேவேர் லூபா இருக்கும், அதை அவர் உபயோகிக்காமல் வைக்கும் தருணத்தில் அதன் வாட்ச் பட்டையை அழுந்தப் பற்றி இடமும் வலமுமாக , விசிறுவார்,
அது அன்றைய தினத்துக்கு இயங்க தன்னை முறுக்கேற்றிக் கொள்ளும். அதன் முத்து நிற டயலின் வசீகரத்தில் கவரப்பட்டு எடை கூடிய அந்த சாதனத்தை நான் கீழே போட்டுவிட, அது அந்த அதிர்வை தாங்கி ஓடிக் கொண்டே இருந்தது, அதனால் தான் அதை Duomatic
என்றனர்,
அந்த பதத்தின் பேட்டென்டை அவர்கள் மட்டுமே கடைசி வரை வைத்திருந்தனர், நடுத்தர மக்களின் கனவு ஸ்விஸ் வாட்ச் ப்ராண்டில் முதன்மையான இது, ஆராதிப்பவர்கள் குறைந்ததால் நிறுவனம் நொடித்து உற்பத்தியை சுமார் 10 வருடங்கள் நிறுத்தியிருந்தது,
இந்த Favre Leuba ப்ராண்டின் அருமை பெருமைகளை உணர்ந்த டாட்டா குழுமம் இந்த நிறுவனத்தை விலைக்கு 2011 ஆம் ஆண்டு 2 மில்லியன் யூரோவுக்கு வாங்கினர், அதை தன் டைட்டன் நிறுவனத்துடன் இணைத்து இன்றைய கால கட்டத்திற்கேற்ப வாட்ச் டயல் மற்றும் பஸல்களில் (கேஸ் ) நிறைய மாற்றங்களைச் செய்து அதை ராயல் வாட்சாக மாற்றியுள்ளனர், ரோலக்ஸ் , ஒமேகா, வாட்ச் ப்ராண்ட்களுக்கு அடுத்த படியாக இதன் சந்தை விலை இருக்கிறது, ஆரம்ப விலையே மூன்று லட்ச ரூபாய்.
பேவேர் லூபா தன்னை முறுக்கேற்றும் சத்தம் இன்னும் எனக்கு நினைவுள்ளது.உங்கள் வீட்டில் ஐம்பதைக் கடந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் இந்த வாட்ச் ப்ராண்ட் பற்றிக் கேளுங்கள்.நிச்சயம் ஏதேனும் கதை எழுத விஷயம் கிடைக்கும்.
#Favre_leuba,#ஃபேவர்_லூபா