சாந்தோம் கடந்து க்ரீன்வேஸ் சாலையில் MRC நகர் தாண்டியதும் வலப்புறம் ராமகிருஷ்ண மடம் சாலை இணையும் , அதன் நேர் எதிரே தமிழ்நாடுஅரசு இசைக் கல்லூரி அலங்கார வளைவுக்கு உள்ளாக ஒரு சாலை இடப்புறமாக செல்லும்,அடுத்த முறை உள்ளே நுழைந்து விடுங்கள் .
இந்த சாலையின் பெயர் Bradis Castle Road (ப்ராடீஸ் கேஸில் சாலை) , அங்கு சாலை முடிவில் தமிழ் நாடு இசைக்கல்லூரிக்குள் நுழையலாம், அதற்குள் தொடர்ச்சியாக சென்றால் இந்த அழகிய பிரம்மாண்டமான ப்ராடீஸ் கோட்டை அடையார் ஆற்றங்கரையைப் பார்க்க அமைந்துள்ளதை காணலாம்,
இந்த கோட்டை அமைந்துள்ளது ஒரு தீவு, இதன் பெயர் quibble island என்பதாகும்.
இந்த ப்ராடீஸ் கோட்டைக்கு "தென்றல்" என்று அரசு அழகிய தமிழ்ப் பெயர் சூட்டி இங்கு 1990 ஆம் ஆண்டு முதல் அரசு இசைக் கல்லூரியை நடத்தி வருகிறது,
இந்த ப்ராடீஸ் கோட்டையில் இருந்த சுமார் 20 பிரம்மாண்டமான அறைகளை வகுப்பறைகளாக மாற்றி இசை வகுப்புகள் நடந்து வருகின்றன,
இந்த ப்ராடீஸ் கோட்டை அடையாறு கடலில் சேரும் கழிமுகத்தில் அமைந்துள்ளதால் தென்றல் என்ற பெயருக்கேற்ப காற்று அப்படி உள்ளே நுழைந்து வீசி வெளியேறுவதைக் கண்ணுறலாம், இந்த கோட்டையின் முற்றத்தில் ஆற்றில் படகு சவாரி செய்யச் செல்ல ஏறி இறங்குவதற்கு தோதாக அணுகுப் படிகளும் மேடையும் இருந்தததை இந்த ஓவியமும், 1963 ஆம் ஆண்டு வெளியான ஆசை அலைகள் திரைப்படமும் உரைக்கின்றன, இன்று படகு மேடை பராமரிப்புன்றி சிதிலமடைந்து விட்டன.
இந்த 11 ஏக்கர் நிலப்பரப்பில் தாகூர் பிலிம் சென்டர் திரையரங்கம் கூட இயங்கி வருகிறது, சென்ற ஆண்டு சத்யஜித் ரே திரைப்படங்களுக்கு தினமும் செல்கையில் உணவு இடைவேளையில் இந்த பிரம்மாண்ட வளாகத்தைச் சுற்றி வந்தேன், இசைக்கல்லூரிக்குள் செல்ல அனுமதி இல்லை தூர இருந்து தான் பார்க்க முடியும்.
இணைப்பு படங்கள் ஒவ்வொன்றாகப் பாருங்கள், முதலில் இருப்பது ப்ராடீஸ் கோட்டையின் water colour ஓவியமாகும், 1841 ஆம் ஆண்டு Justinian Gantz (1802-1862) என்ற ஓவியர்/கட்டிடக்கலைஞர் வரைந்த ஓவியம், இந்த ஓவியம் வரைகையில் அடையாறைத் தாண்டுவதற்கு 18 கண் வளைவு கொண்ட எல்பின்ஸ்டன் பாலம் அங்கே கட்டப்பட்டு 1840 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது,ஏனோ ஓவியர் அப்பாலத்தை ஓவியத்தில் வரையாமல் விட்டுருக்கிறார்,இந்த பாலம் Higginbotham புத்தக கடை நிறுவனத்தார் போஸ்ட் கார்டில் கூட அசசடித்துள்ளதை இணைப்பு படங்களில் பாருங்கள்,
இந்த ஓவியத்தை அவர் அடையார் ஆற்றங்கரையின் மறுபுறம் அமைந்திருக்கும் பிரம்மஞானசபையின் கரையில் (இப்றைய ராதா பர்னியர் பாதை ) இருந்து எதிரே ப்ராடீஸ் கோட்டையைப் பார்த்து வரைந்துள்ளார்,
இதுபோல கட்டிடங்களை, சுற்றத்தை on site ல் வரைவதை ஆங்கிலத்தில்
urban sketching என்பர் , நான் துபாயில் இருக்கையில் மூன்று வருட காலம் urban sketching செய்துள்ளதால், இந்த water colour ஓவியத்தின் மகிமையை அறிந்து மேலும் தேடிப் படித்தேன்.
அடையாரில் இந்த பெருமைமிகு நிலப்பரப்பை அடுத்ததாக தமிழ்நாடு அமைச்சர்களின் வீடுகள் உள்ளன, அதனை அடுத்து மறைந்த தொழிலதிபர் AC முத்தையா அவர்களின் பிரம்மாண்டமான அரண்மனை
உள்ளது,
இங்கு மீரா(1948), முத்து உள்ளிட்ட திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன, அதற்கடுத்தபடியாக ராணி மெய்யம்மை டவர்ஸ் உள்ளது, அதை அடுத்து இருந்த காலி நிலப்பரப்பில் அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் நடந்தது, சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்திற்கு மால் அரங்கை இந்த காலி நிலப்பரப்பில் அமைத்தனர், அதனை அடுத்து லீலா பேலஸ் ஹோட்டல்
அமைந்து உள்ளது, அதனை அடுத்து அடையார் முகத்துவாரம், அதனை அடுத்து சீனிவாசபுரம் என்ற மீனவர் குப்பம் குடியிருப்புகள்.
இந்த அழகிய ப்ராடீஸ் கோட்டைக்கு தொடர்ச்சியான துயர வரலாறு உண்டு.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஊழியரும் தொழிலதிபருமான ஜேம்ஸ் ப்ராடி ( 1769-1801) என்பவரால் ப்ராடிஸ் கோட்டை 1798 ஆம் ஆண்டு கட்டப்பட்டது,அவருக்கு கிழக்கிந்திய கம்பெனி அரசு கோட்டை அமைக்க வழங்கிய 11 ஏக்கர் நிலத்தில், அடையாற்றின் குயிப்பிள் தீவில் பிரம்மாண்டமாக அமைந்த அரண்மனை இது, முதல் தளத்தில் இருந்து நேராக ஆற்று முற்றத்திற்கு இறங்க அணுகுப்படிகள் கூட கொண்டுள்ளது, அடையாறு கழிமுகத்திற்கு கண்டம் விட்டு கண்டம் பறக்கும் வசந்தகாலப் பறவைகள் சுமார் 405 வகை எண்ணிக்கையில் வருவதைக் காணலாம், அடையார் ஆற்றின் கழிமுகத்தில் இயற்கையாக அமைந்த 7 அலையாத்தி காடுகளின் தீவுக் கூட்டத்திற்குள் பல்லாயிரம் பறவைகள் வந்து இளைப்பாறும், இனப்பெருக்கம் செய்யும், முட்டையிடும்,தொலைதூர விமானங்கள் எப்படி துபாய் சிங்கப்பூரில் transitல் தங்கிச் செல்லுமோ அப்படி பறவைகள் இங்கே தங்கி இளைப்பாறிச் செல்கின்றன, இதைப் பார்க்கவைன்றே அடையாறு கழிமுகத்தில் அமைந்த அரண்மனைகளில் birder terrace அமைத்திருப்பர், இந்த ப்ராடி கோட்டையிலும் அப்படி ஒரு மேடை அமைந்திருந்தது, இன்று சிதிலமடைந்து விட்டது,
ஏசி முத்தையா அவர்கள் அரண்மனையில் பிரம்மாண்டமான birder terrace உள்ளதை google map ல் காணலாம்.
ஜேம்ஸ் ப்ராடி இந்த வீட்டில் சிறிது காலமே குடியிருந்தார்,
அவரது செல்வம் குன்றி குடும்ப முதலீடுகள் கடும் வீழ்ச்சியடைந்ததால், குத்தகைதாரர்களுக்கு இவ்வீட்டை வாடகைக்கு தந்தார் ப்ராடி, அந்த குத்தகை தாரர்களில் முதன்மையானவர், சென்னையின் உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியான Sir. Thomas Strange ஆவார்.
ப்ராடி ஒரு படகுசவாரி விளையாட்டு வீரரும் (rower ) கூட, அடையார் போட் க்ளப் (1867) துவங்கும் முன்னரே அடையாற்றில் படகு சவாரி செய்தவர், அடையாறு பகலில் சலனமற்று இருக்கும்,மாலையில் நீரோட்டம் சற்று கொந்தளிப்பாகவே இருக்கும், 1801 ஆம் ஆண்டு ப்ராடி அடையாரின் வெள்ளப்பெருக்கில் படகு சவாரி செய்கையில் விபத்தில் இறந்தார், மனைவி அவரை இன்று படகு சவாரி செல்ல வேண்டாம் ஏனோ எனக்கு நல்லதாக தெரியவில்லை என்ற எச்சரிக்கையையும் மீறி ப்ராடி மாலையில் படகுச்சவாரி சென்றவர் கடலில் சிக்கி மூன்றாம் நாள் தான் சடலமாக கரை ஒதுங்கியிருக்கிறார்.
ப்ராடி இறந்ததைத் தொடர்ந்து, அந்தக் குடும்பம் சிறிது காலம் அங்கே குத்தகைக்கு தங்கியிருந்த அர்புத்நாட் குடும்பத்தாருக்கு இந்த சொத்தை விற்றது,
அர்புத்நாட் வங்கி ப்ரிட்டீஷ் இந்தியாவில் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும், கவர்ச்சியான வட்டி தருவதாக சொல்லி விளம்பரம் செய்து இந்தியாவெங்கும் பெரிய செல்வந்தர்களின் முதலீடுகளை ஈர்த்த நிறுவனம்,பெங்களூரில் ஏசியாட்டிக் சொசைட்டி என்ற நிதி நிறுவனத்தில் 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஸர்.சிவி.ராமன் அவர்கள் தனக்கு நோபல் பரிசு தருகையில் கைக்கு வந்த 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் வாழ்நாள் சேமிப்பையும் முதலீடு செய்து ஏமாந்தார், அதற்கு எல்லாம் முன்னோடி இந்த அர்புத்நாட் வங்கி, இன்றைய பர்மா பஜாருக்கு எதிரே இயங்கி வந்தது, 1906 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொருளாதார மந்தத்தில் அர்புத்நாட் வங்கி நொடித்துப் போய் வீழ்ந்தது வரலாறு.
மறைந்த ஜேம்ஸ் ப்ராடி ஸ்காட்லாந்தின் பிராடி குடும்பத்தின் ஏக வாரிசாக இருந்தார், அவரது ஸ்காட்லாந்தின் Morayshire உள்ள ப்ராடி கோட்டைக்கும் இந்த ப்ராடி கோட்டைக்கும் தொடர்பு உண்டு, Morayshire உள்ள பிராடி கோட்டை இன்று ஸ்காட்லாந்திற்கான தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமானது, இந்த ப்ராடி கோட்டை இன்று அரசுடைமை ஆகி இசைக்கல்லூரியும் ஆகிவிட்டது.
சென்னையின் வரலாறு மிகப்பழமையானது, மிகவும் பெரியது, நமக்கு பல பல ஆச்சர்யங்களைத் தரும், நாம் சற்று மெனக்கட்டு தேடிப் படித்தால் போதும், அடையாறைப் பற்றி பத்து கட்டுரைகள் எழுதினாலும் போதாது, நிறையாது என்னும் படி அத்தனை வரலாறு உண்டு.