சிறையில் கொத்தாளதேவர் தன்னை பேட்டி காணும் ரோஹிணியிடம் சொல்லும் வசனம் இது
"இனிக்க இனிக்க பேசுவான் நானே அவன்பேச்சுல மயங்கிடேன்னா பாருங்க
விளக்குல விழுந்த பூச்சி மாதிரி அன்னலட்சுமி அவன் வலையில விழுந்துருச்சி"
விருமாண்டி திரைப்படத்தில் வரும் சண்டியரே சண்டியரே பாடல் இப்படித் தான் துவங்குகிறது
"ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய பிப்பாய்ங்க
என்கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா"
ஆற்றங்கரை பின்னணியில் கொத்தாளத் தேவர் குடும்பத்தினர் மற்றும் அன்னலட்சுமி ஈசலை மண் சட்டியுள் விளக்கு வைத்துப் பிடிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தின் சுற்றுப்புறங்களில் மாலைக் கருக்கலில் இப்படி விளக்கு வைத்து ஈசல் பிடிப்பது சாதாரணக் காட்சியாம், ஈசலைப் பிடித்து பலவகையாக சமைத்து உண்ணுவதை வழக்கமாக வைத்துள்ளனராம்.
ஒவ்வோர் ஈசல் புற்றின் மீதும் இரண்டு அங்குல நீளத்தில் சற்று மேடாக வாயில் போன்ற அமைப்பு இருக்குமாம், இதற்கு வருவு என்று பெயராம். பகல் நேரத்தில் வருவு கட்டியிருக்கிறதா என்பதைப் ஊரார் பார்த்துக்கொள்வராம்.
ஈசல் கொட்டை என்ற ஒரு வகை கொட்டையையும், பெருமருந்து கொடியின் வேரையும் நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்வராம். இந்தப் பொடியை இரவு நேரத்தில் புற்றின் மீது செலுத்தி, ஏதாவது ஒரு விளக்கொளியை புற்றின் மீது அடிப்பார்களாம். விளக்கொளியாலும், பொடியாலும் கவரப்பட்டு ஈசல்கள் வெளியே வருமாம். புற்றுக்குழிக்கு அருகே வலை, பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வெளியே வரும் ஈசலைப் பிடிக்கிறார்களாம்.
இப்படி பிடித்த ஈசலை சாக்குப் பையில் போட்டு இரண்டு புறமும் பிடித்துக் கொண்டு குலுக்கும் போது ஈசலின் சிறகுகள் உதிர்ந்துவிடுமாம். பின்னர் சிறகுகளை புடைத்து நீக்கி விட்டு காய வைப்பார்களாம்.
உண்ணுவதற்கேற்ற பகுதியை அரிசியோடு சேர்த்து வறுத்து சாப்பிடுவராம்.நேரடியாக எண்ணெயில் பொரித்து மசாலா பூரி போன்றும் சாப்பிடுவராம். தேனி, கம்பம், கோயம்புத்தூர் பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானிய மாவுடன், ஈசல் பூச்சி, வெல்லம் சேர்த்து உருண்டை செய்து சாப்பிடும் பழக்கும் உண்டாம்.
ஈசலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளதால் ஒரு கிலோ ஈசல் 200 ₹ மேல் சந்தையில் விற்கப்படுவதாக படித்தேன்.
சித்த மருத்துவத்தில் ஈசல் ‘இந்திர கோபப் பூச்சி’ என்று அழைக்கப்படுகிறதாம். இது பெரும்பாலும் ஸ்டார்ச் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில்தான் உயிர்வாழுமாம். இதை நேரடியாகவோ அல்லது உணவுப் பொருள்களுடனோ சேர்த்து சாப்பிடுவராம்.
இதில் செம்பு சத்து அதிகமாக உள்ளதால் இதை உணவாக உட்கொள்ளும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறதாம். உதாரணமாக, உடலுக்கு சூடு கொடுக்குமாம். ஆண்மைத்தன்மையை அதிகப்படுத்தும். விந்தணுக்களை கெட்டிப்படுத்துமாம்.
பிராஸ்டேட் சுரப்பிகளின் வீக்கத்தை குறைக்கும். நரம்புகளை வலுப்படுத்தும் நெர்வைன் டானிக்காக (nervine tonic ) செயல்படுகிறது, ஈசலை எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் தசைப்பிடிப்புகள் நீங்குமாம்.
மேலும் இதை எரித்து சாம்பலாக்கி தண்ணீருடன் கலந்து குடிக்கும்போது கக்குவான் இருமல் சரியாகுமாம். இதை ஜாதிக்காயுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தேவையற்ற வலிகள் (சூலை நோய்) நீங்குமாம்.
ஈசலை நன்றாக அரைத்து மாவாக்கி அதனுடன் தேன்மெழுகை உருக்கி எடுத்த எண்ணெயை கலந்து உறைய வைக்கவேண்டும். இந்த க்ரீமை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குணமாகுமாம். இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் (hemiplegia), முகவாதம் (facial paralysis) போன்ற நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறதாம்.
PS: விருமாண்டி படம் வந்து பதினேழு வருடங்களாகிறது, எத்தனை முறை இந்தப் பாடலை கேட்டிருப்போம், இப்பாடலை மனப்பாடம் செய்து பாடியிருப்போம், இப்படத்தில் ஈசல் தீம் எதற்கு ? என யோசித்துள்ளோமா?
இதற்கு முத்தாய்ப்பாக விருமாண்டியிடம் ரயில்வே கேட்டில் வைத்து அன்னலட்சுமி பேசுகிற வசனத்தை கவனிக்க வேண்டும்,
"சாமி உசிர காப்பாத்தியும் உனக்கு புத்தி வரலயே (சித்தப்பன் கொத்தாளனை நினைத்து பயந்து சொல்கிறாள்), கரயானுக்கு ரெக்க மொளச்சா பறந்து பறந்தே செத்திருமாம்,அதான் நீயி"
இதே அன்னலட்சுமி விருமாண்டியிடம் காதல் வயப்பட்டபின் பாடும் வரிகள் இவை
" ஈசலை போல் நான் பறந்து
வெளிச்சத்த தேட ஈசனப் போல் நீ
இழுத்து உன் ஒளியில் போடு
சிறகோடு பறந்தாலும் சிறு
பொழுது உன்னைச் சேர ஆச
வேறென்ன பேச"
எப்படி இயக்குனர் கமல்ஹாசனும் இசைஞானியும் (இசைஞானி இப்பாடலாசிரியரும் கூட ) இந்த கிராமிய மணம் கமழும் ஈசல் தீம் பாடலை படத்தில் பிரமாதமாக பயன்படுத்தியுள்ளனர் என வியக்கிறேன்.
கமல்ஹாசன் ஈசல் Fry விரும்பி சாப்பிடுவார் என கிசுகிசு vlogger /துணை நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன் யூ ட்யூப் சேனல் காணொளியில் கூறியுள்ளார்.
ஈசல் பிடிப்பது பற்றி படிக்க :
https://www.vikatan.com/amp/story/health%2Fhealthy%2F102305-health-benefits-of-winged-termites