பல்லாவரம் மலை பற்றி எத்தனை எழுதினாலும் போதாது, முற்று பெறாது, அன்றைய தமிழ் திரைப்படங்களில் திருப்புமுனைக்காட்சி ,இறுதிக்காட்சி, வில்லன் கதாநாயகன் சந்திக்கும் காட்சி இங்கே தான் படமாக்குவர், சேது 1999 திரைப்படத்தில் விக்ரமை pimping racket ரவுடிகள் இந்த மலை உச்சியில் வைத்து தான் தலையை பாறையில் மோதி நடைபிணமாக்குவார்கள்.
அதே போல புது புது அர்த்தங்கள் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் தொலைத்ததை தேடுகிறேன் என்று இந்த மலை உச்சியில் வந்து தேடி அலைவார் கீதா, கிடைக்காத விரக்தியில் தான் ஓட்டி வந்த சிகப்பு ஃபோர்ட் காரை மலையில் இருந்து தள்ளி விடுவார்.
இந்த மலை உச்சிக்கு இன்று விமான நிலைய பாதுகாப்பு கருதி போலீஸார் அனுமதிப்பதில்ல, கஞ்சா வியாபாரிகள் , பெந்தகொஸ்தே சுவிசேஷ ஊழியர்கள் கூட ஜாகையை மாற்றிக் கொண்டு கவிதாவபண்ணை கல்குவாரி பக்கம் போய்விட்டதாக அறிந்தேன்.
இந்த பல்லாவரம் மலை வெள்ளை குவிமாட மண்டபத்துக்கும் ஹைதராபாதில் உள்ள புகழ்பெற்ற மௌலா அலி மலை தரகாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு,இந்த இடிந்த குவிமாட மண்டபத்துக்கு மௌலா கா பஹாத் என்றும் பெயருண்டு.
தமிழ்நாட்டின் இமாமிகள் பல ஆண்டுகளாக ஈத்-இ-காதிர் மற்றும் மௌலா அலியின் பிறந்தநாளை ரஜப் 13 ஆம் தேதி 'மௌலா கா பஹாத்' கல்லறையில் சந்தனகூடு நடத்தி பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர்.
ரஜப் 28 அன்று, இமாம் ஹுசைனின் பக்தர்கள் மதீனாவிலிருந்து கர்பலா வரையிலான அவரது பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில் இமாம்கள் ஆயிரம் விளக்கு மசூதியில் இருந்து பல்லாவரம் மலை உச்சியில் உள்ள இந்த 'மௌலா கா பஹாத்' வரை வெறுங்காலுடன் நடந்து வருகின்றனர்.
இங்கே முந்தைய கட்டுரை அதிக படங்கள் உண்டு.