எம்ஜியாரின் கொடுத்து வைத்தவள் 1963 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் , எனக்கு மிகவும் பிடித்த படம், இது தெலுங்கில் அத்ருஷ்டவதி என வெளியான போஸ்டர் இணைப்பில் பாருங்கள், மதுரை நியூசினிமாவில் என் சின்ன மாமா பால்யத்தில் அழைத்துப் போன திரைப்படம், இசை K.V.மகாதேவன் அவர்கள்,ஒளிப்பதிவு G.துரை, இயக்கம் ப.நீலகண்டன்.
எம்ஜியார் திரைப்படங்களை பீடி சிகரட் புகைமூட்டத்தில் தான் பார்க்க முடியும், அத்தனை கூட்டம், அத்தனை ரசிகர்கள், அத்தனை ஆரவாரம், கரகோஷம்,இப்படத்தில் தான் என்னம்மா சௌக்யமா? பாடல் .
இப்படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் நடிகை E.V.சரோஜா என்ற சரோஜா ராமண்ணா, அத்தனை அழகும் வசீகரமும் நடிப்புத் திறமையும் ஒருங்கே கொண்ட நடிகை,நாட்டிய மேதை வழுவூர் ராமையா பிள்ளை அவர்களின் சிஷ்யை , 26 வயதில் புகழின் உச்சியில் நடிப்பை விட்டு விலகியவர், மிகவும் underrated, இயக்குனர் T.R.ராமண்ணாவை மணம் செய்த பின்னும் சில படங்களில் நடித்தவர்,எம்ஜியாருக்கு என் தங்கை (1952 )திரைப்படத்தில் தங்கை மீனாவாக நடித்தவர்,கொடுத்து வைத்தவள் இவரின் கடைசி படமாகிவிட்டது.
தமிழ் சினிமா சரோஜாக்களால் நிரம்பியது என்றாலும் இவர் தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பு மிக முக்கியமானது, இவரது சிறப்பான நடனத்துக்கு என்றே அமைந்த பாடல்கள் video jukebox உண்டு மணிக்கணக்கில் நீளுபவை,அத்தனை லயமானவை, அத்தனை ரசமானவை.
இப்படத்தில் எம்ஜியாருக்கும் E.V.சரோஜாவுக்கும் ஜோடிப் பொருத்தம் அத்தனை பாந்தமானது.
ரயிலில் இருந்து குண்டு மணியால் தள்ளப்பட்ட பணக்கார இளைஞர் எம்ஜியாருக்கு புத்தி பேதலித்துவிடும், எதிர்பாராத சூழ்நிலையில் ஏழை அனாதையான மீனாட்சியை அவர் திருமணம் செய்து கொள்கிறார்,அதன் பிறகு அவருக்கு புத்தி திரும்பிவிடும்,ஆனால் மனைவி மீனாட்சியை அடையாளம் தெரியாது,இறுதியில் அவர் தன் மனைவியை அடையாளம் கண்டு ஒன்று சேரும் கதை "கொடுத்து வைத்தவள் ".
இதில் ஒரு திருப்புமுனைக் காட்சி உண்டு , எம்ஜியாரை தன் கணவன் என்று விலகி நின்று சொந்தம் கொண்டாடுவார் E.V.சரோஜா,உடன் பணக்காரப் பெண் L.விஜயலட்சுமியும் எம்ஜியாரை கணவனாக அடைய போட்டி இடுவார், (இவரும் நாட்டிய மேதை வழுவூர் ராமையா பிள்ளை அவர்களின் சிஷ்யை, E.V.சரோஜாவின் தோழி)
எம்ஜியார் வீட்டுத் தோட்டத்தில் புத்தகம் படித்து கிறங்கி நன்கு உறங்குகையில் ஒரு நல்லபாம்பு எம்ஜியார் நெஞ்சில் சுருண்டு படமெடுக்கும், அதைப் பார்த்த L.விஜயலட்சுமி அதிர்ந்து கூக்குரலிட்டு எம்ஜியாரை எழுப்பி பதட்டப்படுத்துவார், ஆனால் E.V.சரோஜாவோ கொண்டுவந்த காபி டபராவை எறிந்துவிட்டு நல்லபாம்பை தன் கையால் தட்டிவிடுவார், அப்போது பாம்பு சரியாக E.V.சரோஜாவின் திருமாங்கல்யத்தில் கொத்திவிடும், எம்ஜியாருக்கு அங்கே அவர் தான் தன் மனைவி தான் என மனதில் உரைக்கும்.
இக்காட்சி படமாக்குகையில் தேவர் பிலிம்ஸின் பல்பிடுங்கப்பட்ட பாம்பு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது, தேவர் பிலிம்ஸின் பாம்பு பயிற்சியாளர் மஸ்தான் தமிழ் சினிமாவில் பாம்பு காட்சிகளுக்கு மிகவும் புகழ்பெற்றவர், எத்தனை அதட்டியும் பாம்பு சொதப்பி விட்டது, எம்ஜியாரை கடித்தும் விட்டது,இயக்குனர் பதறிப்போய் தேவரிடம் குறையாகச் சொல்ல எம்ஜியார் மஸ்தானை ஒன்றும் திட்டாதீர்கள் என தேவருக்கு பரிந்துரை செய்தாராம்.
இப்படத்தில் குண்டு மணியும் எம்ஜியாரும் ரயிலின் vip coupe பெட்டியில் கத்தியுடன் மோதிக்கொள்ளும் காட்சி மறக்க முடியாதது, மிகவும் தத்ரூபமாக கவனமாக படமாக்கியிருப்பர், இரக்கம் பார்த்து ரயிலில் இருந்து எம்ஜியார் குண்டு மணியை தள்ளாமல் விட்டத்தை சாதகமாக பயன்படுத்தி அவரையே ரயிலில் இருந்து தள்ளிவிடுவார், எம்ஜியாருக்கு அது முதல் புத்தி பேதலிக்கும்.
இறுதிக் காட்சியில் E.V.சரோஜா தான் உண்மையான துணை என்பதை குடும்பத்தாருக்கு உரைக்க மீண்டும் புத்தி பேதலித்தது போல நடித்து துப்பாக்கி எடுத்து சுடவருவார் எம்ஜியார்,எல்லோரும் பயப்படுகையில் E.V.சரோஜா மட்டும் அங்கே பயமின்றி நிற்பார்,எனக்கு புத்தி பேதலித்தவர் தான் கணவனாக கிடைத்தார், எனக்கு புத்தி பேதலித்தவராகவே மீண்டும் கிடைத்தால் போதும் என தன்னிலை விளக்கம் அளித்த நொடியில் எம்ஜியார் குழல் துப்பாக்கியை வீசி எறிந்து மனைவியை அணைப்பார்,
எம்ஜியார் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கொடுத்து வைத்தவள்.
காலஞ்சென்ற நடிகை E.V.சரோஜா போல தனித்துவமான அழகும் திறமையும் அவர் போன்ற ஜாடையும் கொண்ட நடிகை என்றால் கார்த்திகா (நாயகன் சாருமதி), அவரும் புகழ் இருக்கையிலேயே நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கியவர்.