மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவ நாயர் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான படம் நிர்மால்யம்.இது போல ஒரு படம் வந்ததுமில்லை வரப்போவதுமில்லை என்பது போன்ற படைப்பு இது, இயக்குனர் இங்க்மார் பெர்க்மானின் வின்டர் லைட் படத்தில் உத்வேகம் பெற்று அதற்கு இந்திய சினிமாவில் ட்ரிப்யூட் செய்திருந்தேன் என ஒரு பேட்டியில் எம்டிவி அவர்கள் சொல்லியிருந்தார்.இதை பள்ளிவாளும் கால்சிலம்பும் என்ற சிறு கதையாக முதலில் மாத்ருபூமி இதழில் எழுதினார்.
இது இந்திய சினிமாவில் மிகவும் அண்டர்ரேட்டட் படைப்பு,இப்படத்தில் வெளிச்சப்பாடு கதாபாத்திரத்தில் தோன்றிய பி.ஜே.ஆண்டனி மிகவும் அண்டர்ரேட்டட் நடிகர்.இந்த வெளிச்சப்பாடு(சாமியாடி) கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் சங்கராடியைத் தான் நடிக்க வைக்க எண்ணினாராம் எம்டிவி, ஆனால் சங்கராடி எனக்கு இத்தனை கடினமான கதாபாத்திரம் செய்யும் சக்தி கிடையாது. என்று பி.ஜே.ஆண்டனியைக் கை காட்டினாராம்.இயக்குனருக்கு பேர் உவகை அளித்த ஒரு காஸ்டிங் என்னும்படியான கதாபாத்திரமாக உருக்கொண்டார் பி.ஜே.ஆண்டனி.
நம் தமிழ் சினிமாவிலும் அம்பாள் என்றைக்கடா பேசினாள் ? என ஏகடியம் பேசியிருக்கிறோம், இதில் சற்றும் ஏகடியமில்லாத பல தலைமுறைகள் தெய்வ சிருஷை செய்தும் பலனில்லா விரக்தி வேதனை கழிவிரக்கம்,சுய பச்சாதாபம் என எல்லாம் கூடி நான் இத்தனை பாவமாகிப் போனேனா? என தெய்வத்தின் முகத்தில் காறி உமிழ்கிறார் வெளிச்சப்பாடு,இதை மதத்தின் மீதான பரிகாசமாகவோ தாக்குதலாகவோ பார்க்காமல் படைப்பை பூரணமாக உள்வாங்கிய விருது கமிட்டி, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பி.ஜே.ஆண்டனிக்கும் அளித்தது.
பலநாள் பட்டினிக்காரரான வெளிச்சப்பாடுக்கு எச்சிலுடன் புண்ணான வயிற்றில் இருந்து ரத்தமும் காறியாக வெளியேறுகிறது , பின்னர் அதே வைராக்கியத்துடன் அம்பிகையின் பதிலை எதிர்பார்க்காத வெளிச்சப்பாடு தன் மூன்றடி அடி உயர பள்ளி வாளால் தன் தலையை துண்டித்து அம்பிகைக்கு முன் வீசி எறிகிறார் வெளிச்சப்பாடு.என்ன ஒரு கம்பீரமான படம்? !!!
இந்திய சினிமாவில் ஏழ்மையை நயமான நுட்பமான டீடெய்ல்களால் பேரிலக்கியமாக்கிய படைப்புகளில் நிர்மால்யம் முக்கியமான படைப்பு, இதை கமல்ஹாசன் மரிக்கும் முன் காணவேண்டிய படங்களில் முதல் பத்து படங்களுக்குள் குறிப்பிட்டுள்ளார்.
எத்தனையோ ஆர்ட்ஹவுஸ் படங்களில் தன் பங்கை திறம்பட ஆற்றி ஒளிப்பதிவு செய்த ராமசந்திரபாபு அவர்கள் இப்படத்துக்கும் ஒளிப்பதிவு, படத்தின் பட்ஜெட் மிகச் சொற்பம், ஆனால் எதிர்பார்க்கும் முடிவு உலகத்தரம், நேச்சுரல் லைட்டிங்கில் கிடைத்த உபகரணங்களை வைத்து கிடைத்த உள்ளூர் மக்களை வைத்து இப்படத்தை செதுக்கியுள்ளனர்.
நடிகை சுமித்ராவை எந்த படத்திலும் இத்தனை அழகாகக் காட்டியதில்லை, வெளிச்சப்பாடின் பதின்ம மகள் அம்மணியாக மிக அருமையாக நடித்திருந்தார்,இத்தனை வெகுளியாக விட்டில் பூச்சி போன்ற ஒரு கதாபாத்திரத்தை சுமித்ரா மிக அழகாக செய்தார்.
கருப்பு வெள்ளையில் இப்படி ஒரு குடத்தினுள் இட்ட விளக்கு போல ஒரு படைப்பு.வெறும் புத்திஜீவிகள் மட்டும் கொண்டாடிய படைப்பாகிப் போனது.
படத்தின் தயாரிப்பும் எம்டிவி அவர்கள் தான், படத்திற்கு வேண்டி செட் எதுவும் அமைக்கக் கூடாது என பிடிவாசி கொண்டவருக்கு, தன் கதையில் வரும் ஊர் போல, புழையோரத்தில் அமைந்த பாழடைந்த கோவில் லொக்கேஷன் பார்க்க அலைகையில் திருமிட்டக்கோடு என்ற கிராமத்தில் கிடைக்க, படப்பிடிப்பை பெட்டன ஒரே ஷெட்யூலில் படமாக்கி முடித்தனர்.
இதில் பி.ஜே.ஆண்டனி அஹிந்து ஆகிப்போனதால் அவருக்கு ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டிருந்தது, இது படத்துக்கு பெரிய சவாலாக அமைந்தது, அவர் தொடர்பான காட்சிகள் இரவில் கோவிலுக்கு வெளியே ,ஊரடங்கிய பின் ஹைவோல்டேஜ் திரும்பியவுடன் படமாக்கப்பட்டனவாம்,
அம்பாளின் முகத்தில் உமிழும் அந்த உக்கிர காட்சிக்கு சிலை செட் அமைக்கப்பட்டு தனியே படமாக்கப்பட்டது என ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரபாபு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இது ராமசந்திரபாபு புனே இன்ஸ்ட்டிட்யூட்டில் படிப்பை முடித்த பின் ஒளிப்பதிவு செய்த முதல் படம்.மாணவராக இருக்கையில் எம்டிவி அங்கே விசிட்டிங் லெக்சரராக வந்தவர் இவரை தன் முதல் படத்தின். ஒளிப்பதிவாளராக்கினாராம்.
இத்தனை பிரயத்தனப்பட்டு ரியாலிச திரைப்படமாக இப்படத்தைக் கொண்டு வந்தனர்.
படத்தில் கவியூர் பொன்னம்மா வெளிச்சப்பாடின் மனைவி,பல மாதங்களாக வருமானமேயில்லாத வெளிச்சப்பாடு,ஊரில் யாரும் காற்றுக்கருப்புக்கு ஊதச் சொல்லி வந்தாலும் கூட கடன் சொல்லுகின்றனர், இவரும் அதிர்ந்து பேசி பணம் கேட்கத் தெரியாதவர்.கோவில் மேல்சாந்திக்கே வருமானமில்லை, எனக்கெங்கே காசு என்ற நியாயஸ்த கணவனிடம் வீட்டு கஷ்டங்கள் எதுவும் சொல்லி புத்திமுட்டிக்காத ஒரு நல்ல பிறவி, வீட்டார் வயிறு காயாதிருக்க தன் மானம் போனால் தவறில்லை என அவ்வூர் வட்டிக்காரன் மைமூன்னியிடம் முந்தி விரித்து வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் மாமனார் துவங்கி கடைசி மகள் வரை ஆறு வயிறுகளைப் போற்றுகிறாள்.
வெளிச்சப்பாடின் வேலையில்லாத பட்டதாரி மகனாக சுகுமாறன்(பிரித்விராஜின் தந்தை )சோஷலிச கேரளத்தில் வேலை தேடி தோற்ற இளைஞன், சதா வேலைக்கு மனுப்போட தந்தையிடம் காசு கேட்கும் வியக்தி, ஒரு முறை வெளியூருக்கு போட்டித் தேர்வுக்கு போக வேண்டி வெளிச்சப்பாட்டின் பரம்பரை சொத்தான பள்ளிவாளை வட்டிக்காரன் மைதீப் உன்னியுடம் விற்க விழைகிறான், அவனை சினம் கொண்டு அடித்த வெளிச்சப்பாடு வீட்டை விட்டும் விரட்டுகிறார்.
திரும்பிய நோக்கில் எல்லாம் சரமாரி அடி, பசி பஞ்சம் பட்டினி, போதாததற்கு ஊரில் அம்மைநோய் வேறு தாக்க, ஊராருக்கு அம்மனின் மீது பக்தி திரும்புகிறது,
திருவிழா காசு மொத்தமும் தன் கையில் இருந்தாலும் அதிலிருந்து ஒரு டீ குடிக்கக் கூட காசு எடுப்பதில்லை என்னும் அளவுக்கு மானஸ்தர் வெளிச்சப்பாட்டின் தலைமையில் பலவருடங்களாக நின்று போன திருவிழாவை நடத்தி அம்மனை குளிர்விக்க சகல ஏற்பாடுகளும் நடக்கிறது.பெரும் பணிச்சுமைக்கு நடுவே வீட்டிற்கு குளிக்க வந்தவர் மனைவியிடம் மைதீன் உன்னி கலவி கொண்டு விட்டு எழுந்து போவதைப் பார்த்து விடுகிறார்.அதில் நொறுங்கிப் போகிறார் வெளிச்சப்பாடு.
சங்கராடி கால் ஊனமுற்ற கோவிலகத்து எடுபிடியாக வருகிறார், கதகளி மோகினியாட்ட உடைகளை மராமத்து செய்து உய்க்கும் எடுபிடி, எல்லோர் பார்வையிலும் செல்லாக்காசு, கிடைக்கும் ஒருவேளை உணவை உண்டு கோவிலகத்திலேயே தங்கிக் கொள்ளும் வியக்தி, அவரை வலிய தம்புரான் சொடக்கு போடும் நேரத்தில் வேலையைவிட்டு அனுப்புகையில் நம்மை கலங்கடித்துவிடுவார்.
கோவிலின் ஃப்யூடல் தெம்மாடி வலிய தம்புரானாக கொட்டாரக்கரை ஸ்ரீதரன் நாயர் ,புதிதாக அமைந்த சோஷியலிச கேரளத்தில் நிலங்களை இழந்த ஒரு பூர்ஷ்வா,எனவே காசை எண்ணி எண்ணி செலவழிப்பவர்,ஆதாயமின்றி எந்த செலவும் செய்யாதவர்.தன் பட்டத்து யானையின் சர்க்கரை நோய்க்கு தினம் 100 ரூபாய்க்கு நெய்க்கும் மருந்துக்கும் செலவு செய்யும் தம்புரானுக்கு, கோயில் ஊழியர்களின் சொற்ப சம்பளத்தைத் தர மனம் வருவதில்லை.
இந்த பாழடைந்து கொண்டிருக்கும் கோவிலுக்கு மேல்சாந்தியாக வந்து சேரும் ரவிமேனன் , சரியான சந்தர்ப்பவாதி கதாபாத்திரம், தான் நம்பூதிரி சாதியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதியான வெளிச்சப்பாட்டின் மகள் அம்மினியின் பருவ வயது ஆசையைத் தூண்டி மோசம் செய்து அரசு வேலை கிடைத்துவிட்டது கிளம்புகிறேன் என கூசாமல் கைகழுவிய கதாபாத்திரம்.
இப்படத்தில் தான் சுகுமாறனும் , சுமித்ராவும் அறிமுகம்.
படத்தின் இசை எம்.பி.சீனிவாசன் அவர்கள்,படத்தின் பாடல்கள் எடசேரி எழுதியவை, ஸ்ரீமகாதேவண்டே என்ற உருக்கமான வழிபாட்டுப் பாடல் மறைந்த மலையாள சினிமா பாடகர் கே.பி. பிரம்மானந்தன் ,பத்மினி பாடியது.
படத்தின் ஸ்படிகம் போன்ற பிரதி யூட்யூபில் உள்ளது.அவசியம் இந்த க்ளாஸிக்கை பாருங்கள்.
https://youtu.be/J2FYIQhwep0