வசந்தா அக்கா என்ற நாகமணி மகாதேவன் ,ஹேராம் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்தார், சினிமாவில் இவர் பெயரைத் தெரியாதவர்கள் இருப்பார்கள் ஆனால் வசந்தா அக்கா என்ற அந்த கதாபாத்திரத்தைத் தெரியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
படத்தில் இவருக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டிருக்கும்,படம் நடிக்கையிலேயே இவருக்கு 80 வயது தாராளமாக இருக்கும், தன் வாழ்நாள் சாதனையாக இந்த வசந்தா மாமி கதாபாத்திரத்தை செய்திருப்பார்,
இவர் கணவர் K.J.மஹாதேவன் பழம்பெரும் தமிழ் இந்தி படங்களில் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர் ,சந்திரலேகா,ஆயிரத்தில் ஒருவன், தியாகபூமி,ராஜ்திலக்,ஷத்ரஞ் போன்ற படங்களில் பணியாற்றியவர், இவரைப்பற்றி மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை
நாகமணி மகாதேவனின் இந்த தெனாவெட்டை, ஆத்துக்கு மூத்தவளின் கம்பீரத்தை , இளையோர் மீது இவர் காட்டும் வாஞ்சையை, சிலேடையை, தேசபக்தியை , பிடிவாதத்தை, அக்குறும்புகளை எங்கே வைத்துப் பார்த்தாரோ? கமல் அப்படி இவருக்கு சிறப்பு வசனங்கள், தனி ஷாட்கள், காம்பினேஷன் ஷாட்கள் என வைத்து இழைத்திருப்பார் இயக்குனர் கமல்ஹாசன்.
மைதிலியைப் பெண் பார்க்கப் போகையில் வாலி இவரை எழுப்பி, பெருமாள் ஏழறார்கா,சேவி எனச் சொல்ல,"நன்னார்டாப்பா " என மாதவப்பெருமாளையே ஆசிர்வதிப்பார், அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே அப்படி attitude காண்பிக்கும் வாய்ப்பு எந்த நடிகைக்குமே அமைந்ததில்லை,
வையாபுரியை முறைத்து இவன் என்ன உங்களுக்கு உறவா? என்ற வசனமாகட்டும்
காரில் வைத்து நல்ல காரியத்துக்குப் போகும் போது பேசற பேச்சாடா? என்ன எழவுடா? ஆகட்டும்
ஒண்ணுகெடக்க ஒண்ணு நடந்து மைதிலி கர்ப்பமாயிட்டா என்ன பண்றது? என அத்தைப்பாட்டி சவுகார் ஜானகிக்கு கவுண்டர் தருவது ஆகட்டும்
அது கேஸ்ட்ரபிளாக இருக்கும் என டாக்டரான ஒய்ஜியை கலாய்ப்பதாகட்டும்.
இட்லி மிளகாய்பொடி நல்லெண்ணெய் சம்புடத்தில் கட்டுச்சாதத்தில் வைத்திருப்பதை சம்மந்தி மாமி ஹேமமாலினிக்கும் மருமகளுக்கும் சைகையில் விளக்குவதாகட்டும்
தன் இறந்து போன தங்கை மகன் சாகேத்ராமை பாம்பு பாம்பின் காலை அறிவது போல அறிந்த மிதப்பில் ஆகட்டும்
தன் மகனைப் போன்ற சாகேத் ராம் சித்தபிரமை தெளிந்து மனைவியுடன் தேன்நிலவு கிளம்புகையில் அகமகிழ்ந்து சல்யூட் அடிப்பதாகட்டும்.
சாகேத்ராம் காசிக்கு சந்நியாசம் வாங்கச் செல்கையில் இவரது காலை கண்ணில் ஒற்றிக் கொள்ளும் காட்சி,தான் விதவையானதை அறியாமல் தூங்கும் இவரின் கால்களின் மெட்டிகளுக்கு close up shot என இயக்குனர் கமல் அசத்தியிருப்பார்.
சாகேத் ராம் எழுதிய சந்நியாச கடிதம் கண்டு வெடித்து நார்மடியில் உயிர் விடுவதாகட்டும். ஒரு ஐநூறு படம் நடித்த நடிகைக்கு சவால் விட்டிருப்பார் வசந்தாக்கா என்ற நாகமணி மகாதேவன்
PS: படத்தில் சாகேத்ராமுக்கு இவர் பெரியம்மா, அதாவது அம்மாவின் மூத்த சகோதரி,பிறந்து மூன்று மாதத்தில் இருந்தே சாகேத்ராமை வளர்த்தவர், சாகேத்ராமின் மறைந்த அப்பா சேஷாத்ரிக்கு படத்தில் காட்சி கிடையாது,அவரின் திருமணம் செய்து கொள்ளாத மைத்துனர் பாஷ்யமாக வாலி,அவர் தன் அக்காவை " அக்கா" என்று அழைக்க கமலும் பெரியம்மாவை அக்கா என்றே அழைப்பார்.
#ஹேராம்,#நாகமணிமகாதேவன்,#கமல்ஹாசன்,#kjமகாதேவன்,#வசந்தாக்கா