1950 ஆம் ஆண்டு வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்திற்குள் அழகிய ஓலை கூரைக்குள் இயங்கிய நேர்த்தியான ஒழுங்குடனான நிர்வாக அலுவலகங்கள் இவை,குடில்கள் ஒவ்வொன்றின் வாசலிலும் தீ என்று எழுதிய சிகப்பு மணல் வாளிகள் மூன்று உள்ளதைப் பாருங்கள், இக்குடில்கள் பின்னாளில் தனித்தனி warehouse பாணி படப்பிடிப்புத் தளங்கள் ஆயின.
1945 முதல் 1948 ஆம் ஆண்டு வரை காரைக்குடியில் இயங்கியது ஏவிஎம் ஸ்டுடியோ, அங்கிருந்து முழுமையாக எதுவும் வீணாகாமல் பிரித்தெடுக்கப்பட்டு இங்கு மாறியது வரலாறு, படத்தில் காணும் ஓலையால் வேயப்பட்ட அழகிய கம்பீரமான குடிசைகள் சென்னையின் கோடைவெயிலுக்கு இதமாக நிறுவனர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்களால் முன்யோசனையுடன் வடிவமைக்கப்பட்டு நிர்மானிக்கப்பட்டன,
அதன் உள்ளே இருந்த அலுவலக பொருட்களும் காரைக்குடியிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்டன,ஒரு குண்டூசி கூட வீணடிக்கப்படவில்லை, இக்குடிசைகள் பின்னாளில் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டன, எனவே, ஒரே சமயத்தில் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் படமாக்கும் வண்ணம் தளங்களாக வடிவம் பெற்றன,மக்கள் நெரிசலில் இருந்து முற்றிலும் தடுத்து பாதுகாக்கப்பட்ட வளாகம், உயரமான மதில் சுவர்கள், முற்றிலும் மூடப்பட்ட மற்றும் நெருக்கமான அமைப்பு காரணமாக,சாலையின் இரைச்சல் உள்ளே வராமல் தடுக்கப்பட்டது.
இந்த வளாகத்தில் இருந்து தான் பராசக்தி நாயகன் குணசேகரன் கா கா கா பாடினார், ஓடினேன் ஓடினேன் என்ற சரித்திரப்புகழ் பெற்ற வசனம் பேசினார், அபலை கல்யாணி தனது அவலநிலையை பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடினார்.