பெருவழியம்பலம் (நெடுஞ்சாலை உறைவிடம்)(1979 )பப்பேட்டா என்ற பி.பத்மராஜனின்வின் முதல் படம்,1978 ஆம் ஆண்டு வெளியான தன் பெருவழிஅம்பலம் நாவலையே எந்த சமரசமுமின்றி படமாக்கினார், இப்படத்திற்கு அவ்வாண்டிற்கான சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வென்றார்.
தன் படங்களுக்கு படப்படிப்பு செய்கையில் அதை ஒரு சுற்றுலா போலவே கருதுவார் பப்பேட்டா, சக நடிகர் ,தொழிற்நுட்ப கலைஞர்களிடம் ரசமாக உரையாடி வேலை வாங்குபவர் அவர்.
இப்படத்தில் நடிகர் அசோகனை அறிமுகம் செய்தார், அசோகன் சிறு வயது என்பதால் இத்தனை கனமான கதாபாத்திரம் அவரை செய்ய வைக்க மிகவும் தன்மையாக கனிவுடன் நடந்து கொண்டு இக்காட்சிகளுக்கான ஆக்ரோஷத்தை அவரிடம் கொண்டுவந்து பதுக்க படமாக்கினாராம்,
மலையாள நடிகர் அசோகனுக்கு தன் நடிப்பு வாழ்க்கை முழுவதற்குமான கதாபாத்திரம் செந்கிறோம் என அப்போது தெரிந்திருக்கவில்லை.
படத்தின் கதை:
தன் மற்றும் தன் தமக்கைகளின் தற்காப்புக்காக சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆகியிருக்கிறான் ராமன் ,
இவன் அவ்வூரின் எண்ணெய் செக்கு வாணிய குடும்பத்தின் ஒரே மகன், 15 வயது சிறுவன்,பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டிருக்க, இவனது மூத்த அக்காள் அவ்வூரின் ஒரே வஸ்தாதான பிரபாகரன் பிள்ளையால் வன்புணர்வு செய்யப்படுகிறாள்,
அதன் பின்னர் அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். ஊரில் இதை தட்டிக்கேட்க ஒற்றை ஆண் இல்லை, பிரபாகரன் பிள்ளையின் பராக்கிரமத்தை ஊரார் பெருக்கி வளர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதையே பொழுது போக்காக வைத்துள்ளனர்.
பிரபாகரன் பிள்ளைக்கு வன்புணர்வு என்பது ஒரு பதிவான பரிவாடி, ஒவ்வொரு முறையும் சிறைக்குச் சென்று குற்றம் ருசுவாகாமல் சொற்பகாலத்தில் வெளிவரும் கட்ஷி இவன்,
இம்முறையும் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நேராக தனக்கு எதிராக சாட்சியம் உரைத்த படகோட்டியை சென்று பார்த்து,ஊரார் முன்னிலையில் ஒரே மிதியில் கொன்று வீழ்த்துகிறான்,இது தான் படத்தில் முதல் காட்சியாக வருகிறது.
ஊருக்குள் வந்து தன்னை எதிர்த்து பராதி கொடுத்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அன்று இவளை மறைவாக வன்புணர்ந்தேன்,இன்று ஊரார் முன்பாக இவளை வன்புணரட்டுமா? பார்க்கிறாயா? என அவன் தந்தையிடம் கெக்கலிக்கிறான்.
மறுநாள் ராமன் வீட்டிற்கு வெளியே நின்று ஒன்றுமே நடக்காதது போல நின்று எஞ்சியிருக்கும் தமக்கைகளிடம் குசலம் விசாரிக்கிறான் பிரபாகரன் பிள்ளை.
அங்கே வீறு கொண்டு எழுகிறான் ராமன், ஊரார் இருவரையும் பிடித்து விலக்க, பிரபாகரன் பிள்ளை ராமனை நோக்கி ஊர்திருவிழா முழுதாய் காணமாட்டாய்?அதற்கு முன் உன்னை முடிப்பேன் என சூளுரைக்கிறான்.
தன் தமக்கைகளை தனியே வெளியே விடாமல் இரவு முழுக்க நடக்கும் ஊர் கோயில் திருவிழா இசை கச்சேரிக்கு பொத்தி பாதுகாத்து கூட்டிச் செல்கிறான் ராமன்.
பெற்றொரும் அக்காளையும் பறிகொடுத்தபின் எஞ்சியிருக்கும் இரு தமக்கைகளை பொத்திப் பொத்தி தூங்காமல் விழித்திருந்து காவல் காக்கிறான் ராமன்,
அப்படியும் ஓநாய் குணமுள்ள பிரபாகரன் பிள்ளை ராமனை தனிமையில் வருவது கண்டு மடக்கி ,பின்னால் சென்று வாயைப் பொத்தி ,காயலில் கட்டிய படகுக்கு தூக்கிச் சென்று கொல்ல ஆயத்தமாகிறான்.
ராமன் அங்கே சுதாரித்துக் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த சிறிய கட்டாரியால் பிரபாகரன் பிள்ளையின் வயிறு குடல் என சரமாரியாக குத்தி சிதைக்கிறான்,ஆனாலும் பிரபாகரன் பிள்ளையின் மரண அடி தாங்காமல் காயல் நீரில் விழுந்து கரை ஒதுங்கி மயங்கிக் கிடக்கிறான் ராமன்.
மறுநாள் விடியலில் அவனைக் காப்பாற்றிய பிரபாகரன் பிள்ளையை வெறுக்கும் ஒரு உள்ளூர்காரரான பரமுநாயர் (ஜோஸ்பிரகாஷ்), ராமனைத் தன் வீட்டுக்கு தூக்கி வந்து சில தினங்கள் சிகிச்சை அளித்துத் தேற்றுகிறார்,
ஆனால் இந்த கொலைகாரனைப் போற்றி சிருஷை செய்வதை அவர் மனைவி சுகுமாரி மிகவும் வெறுக்க, அவர் ராமனை அவ்வூரில் டீக்கடை நடத்தும் விஸ்வாம்பரன் ( பரத் கோபி) வசம் ஒப்படைக்கிறார்,
விஸ்வாம்பரனுக்கும் பிரபாகரன் பிள்ளை ( கேபிஏஸி.ரஷீத் )மீது மிகுந்த பயம், அவனையே கத்தியால் 17முறைக்கும் மேல் குத்தி சாய்த்த இந்த எலி போல இருக்கும் பாலகனை போஷிக்க எண்ணி தன் வீட்டிற்குக் கூட்டிச் செல்கிறார்,
அவனை ஆதூரமாக நடத்துகிறார், இதனால் அவருக்கு டீக்கடையை கவனிக்க முடியாதபடி பல சிக்கல்கள் வருகிறது,
ஊராரும் போலீசாரும் மேலும் ஐயமுறாதிருக்க, தனக்கு பிடித்தமான பக்கத்து ஊரின் விலைமங்கையான தேவயானியிடம் (கே.பி.ஏ.ஸி.லலிதா ) ராமனைக் கொண்டு போய் சேர்க்கிறார் விஸ்வாம்பரன்,
தேவயானியிடம் அவர், ராமன் அவ்வூரில் ஒரு சிறு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகி இங்கே வந்துள்ளான் என அபாண்டமான புழுகை அவிழ்த்துவிட இந்தப் பழியை சுமந்து நடக்கும் ராமனுக்கு மிகவும் அருவருப்பாக இருக்கிறது.
சில தினங்களில் தேவயானியின் நிஷ்களங்கமில்லாத அன்பில் கட்டுண்டவன் அவளிடம் தான் ஒரு கொலையாளி என ஒப்புக் கொள்கிறான்,
இருந்தும் அவள் ராமனைக் கைவிடுவதில்லை,தனக்கு கிடைத்த அனாதை ரட்சகனாகவே நினைக்கிறாள், ரட்சிக்கிறாள்.
அவளின் குடிலுக்கு வரும் ஒரு கள்ள மூதாட்டி , அந்நியன் இவனுக்கு முதல் பார்வையிலேயே தோப்பில் கவர்ந்த ருசியான மாம்பழம் ஒன்றைத் தருகிறாள், அவனிடம் அவள் எதுவும் எதிர்பார்ப்பதில்லை, அடுத்த முறை அவனுக்கு என்ன பிடிக்கும் எனச் சொன்னால் அதை கொண்டு வந்து தருவதாகச் சொல்கிறாள்.இப்படி அடுத்தடுத்து அந்நியர் அன்பினால் திக்குமுக்காடுகிறான் ராமன்.
அங்கே தேவயானியிடம் வரும் ஒரு வாடிக்கையாளர் ராமனை அடையாளம் கண்டு தனிமையில் கண்டு,என் முன் வந்தது போல யார் முன்னும் போய் நிற்காதே பையா !!! இங்கிருந்து வேறு இடம் விரைந்து செல், தேவயானியையும் உன்னால் சிக்கலில் மாட்டி வைக்காதே என அறிவுறை சொல்ல அன்றிரவே அங்கிருந்து அகல்கிறான் ராமன்.
ஊரே தன்னை மகிழ்ந்து கொண்டாடும் அந்த கொலைபாதகத்துக்குப் பின்னான நீண்ட தலைமறைவுக்குப் பின்னர் எதையும் நேர்கொள்ள பிரயத்தனப்பட்டு தன் சொந்த ஊருக்குள் வருகிறான் ராமன்,
படத்தின் கடைசிக் காட்சியின் படங்கள் இவை, பப்பேட்டா எத்தனை அருமையாக இதை உருவாக்கியுள்ளார் பாருங்கள், படத்தின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு கண்ணன் நாராயணன்.
முதலில் தன்னைப் பயத்துடன் பார்க்கும் ஊராரை ஏறிடுகிறான் ராமன், பின்னர் வீட்டுக்குச் சென்றவன், இனி என்ன ஆவானோ? சகோதரன் என்று விக்கித்திருக்கும் மூத்த, இளைய தமக்கைகளை கண்ணுறுகிறான்.எதுவும் பேசுவதில்லை.
பின்னர் ஆத்மவிசாரத்தின் உந்துதலால் தள்ளப்பட்டு அவன் குத்திக் கொன்ற அவ்வூரின் பெரிய வஸ்தாது பிரபாகரன் பிள்ளை வீட்டு வேலிப்படலுக்குள்ளேயே நுழைந்தவன் , அங்கே இளநீர் படையல் வைக்கப்பட்ட சமாதியைக் கண்ணுறுகிறான்.
முகத்தில் எந்தச் சலனமுமின்றி அவன் மனைவியை நேர்கொண்டு பேசியவன்,வெளியேறி நின்றவன் சன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் பிரபாகரன் பிள்ளையின் குழந்தைகளைப் பார்க்கிறான்,
அச்சிறாரின் கண்களில் தந்தையின் இழப்பின் வலியை காண சகிக்க முடியாத ராமன் தன்னையும் அறியாது தாரை தாரையாக கண்ணீர் வடிப்பதாக படம் முடிகிறது.
இதே படம் பின்னாளில் பல உன்னதமான திரைக்கதைகளை தோற்றுவித்தது,அதில் ஒன்று கிரீடம் ,செங்கோல் படங்களின் சேதுமாதவன் கதாபாத்திரம்,
ரஷீத் செய்த பிரபாகரன் பிள்ளை கதாபாத்திரம் போன்றே மோகன்ராஜ் செய்த கீரிக்காடன் ஜோஸ் கதாபாத்திரமும் நிலைத்து நிற்கிறது.
Peruvazhiambalam=Master Craft
படத்தில் பாடல்கள் இல்லை, படத்தின் பின்னணி இசை எம்.ஜி.ராதாகிருஷ்ணன், படம் யூட்யூபில் கிடைக்கிறது,அவசியம் பாருங்கள்.