இந்தியாவில் ஆடம்பரமான அழகிய கல்லறைகள் பார்த்திருப்போம், ஆனால் இது போல கல்லறைகளுக்கு இரும்புத்திரையிட்டு பார்த்திருக்க மாட்டோம்.
இந்த கல்லறைகள் இங்கிலாந்து , அயர்லாந்து ,மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள பழமையான கல்லறைகளில் சமாதிகள் மீது காணலாம், இந்த இரும்புத்திரையை mortsafe என்கின்றனர்.
ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகள் தழைக்கத் துவங்கிய முந்தைய 1800 கள் அது, உடல் தானம் என்ற விழிப்புணர்வு இல்லாத காலம், மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக பொதுமக்கள் கல்லறைகள் உடைக்கப்பட்டு சவங்கள் இரவோடு இரவாக திருடப்பட்டு, பயிற்சி செய்யும் மருத்துவர்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்பட்டனர்.
கவுண்டமணி நீ என் பிணம் என்று கழுத்தில் துண்டு போடுவாரே அது போல புதைக்கப்பட்ட சமாதிகளைச் சுற்றி வல்லூறாக வட்டமிட்டனர் சமாதி கொளளையர்கள்,இவர்கள் தங்களை resurrectionists என்ற புரட்சி பெயர் இட்டு அழைத்து வந்துள்ளனர்.
ஆங்கில மருத்துவம் தழைக்க வேண்டிய தேவை இருந்ததால் அரசும் இந்த சமாதி கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் லேசான தடவித்தரும் நடவடிக்கைகளுடன் விடுவித்தது, எனவே உற்றார் உறவினரை சமாதியில் இறங்கும் மக்கள் தேனிரும்பு கிராதி கூண்டு செய்து சமாதியை இப்படி போர்த்தி மூடினர், சிலர் கெட்டி இரும்பில் காற்றுபுகா வண்ணம் பெட்டியாக செய்து புதைத்து பூட்டினர்.
சமாதி கொள்ளையர்கள்,சவத்துக்கு விலை பேசுகையில் பயிற்சி மருத்துவர் தருவதை விட சவத்தை பறிகொடுத்த வீட்டார் அதிக விலை தருகையில் அவர்களிடமே சவத்தை மீண்டும் முகம் காட்டாமல் ஒப்படைத்த கதைகளும் நிரம்ப உண்டு, சவத்துக்கு ஒரு விலைபேசல் என்ற இயக்குனர் பி. பத்மராஜனின் தூவானத்தூம்பிகள் திரைப்படத்தில் ஒரு அழகிய வசனம் உண்டு , அது உடன் நினைவுக்கு வந்தது.
Mortsafe 1816 ஆம் ஆண்டு முதலில் துவக்கப்பட்டது . இவை பல்வேறு வடிவமைப்புகளில் அதிக எடை கொண்ட இரும்பு அல்லது இரும்பு மற்றும் கல் சாதனங்களைக்கூட கொண்டிருந்தன. பெரும்பாலும் அவை stems மற்றும் தகடுகளின் நெருக்கமான கனமான இரும்புக் கிராதிகளாக இருந்தன, பல சமாதிகள் மீது ஒன்றாக நெருக்கியும் போர்த்தி பூட்டப்பட்டன,அனைத்து ஸ்காட்டிஷ் மருத்துவப் கல்லூரி அருகில் அமைந்த கல்லறைகளிலும் இன்றும் இந்த இரும்பு கிராதிகள் உள்ளன.
சவப்பெட்டியின் மீது ஒரு தடித்த இரும்புத் தட்டு வைக்கப்பட்டு, அதில் உள்ள துளைகள் வழியாக தலைகள் கொண்ட கம்பிகள் நெருக்கமாக revit செய்யப்படன. இந்த stems மிகக் கடுமையான பாதுகாப்பை உருவாக்கின, உடைக்க அத்தனை பகீரத பிரயத்தனப்பட வேண்டிருந்தது,
முதல் இரும்புத் தட்டுக்கு மேல் இரண்டாவது கூண்டு அமைத்து நல்ல தரமான பூட்டால் பூட்டி வைக்கப்பட்டன. அதை திறந்து பராமரிக்கையில் கல்லறை ஊழியர்கள் சாவி கொண்டு இரண்டு பேர் சேர்ந்து அகற்றுவார்கள்.
சில நடுத்தர குடும்பங்களுக்கு நிரந்தர இரும்புத்திரை அமைக்க போதுமான வசதி இல்லை என்ற நிலையில் உடல் நன்கு சிதைய வேண்டிய எட்டு முதல் பத்து வாரங்களுக்கு இந்த இரும்புத் திரையை வாடகைக்கு விட்ட கதைகளும் உண்டு.
Aberdeen ல் உள்ள Marischal அருங்காட்சியகத்தில் இந்த வகை Mortsafe மாதிரி கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
அன்று தேவாலயங்கள் கல்லறைகளுக்கு தகுதியான பாதுகாவலர்களை நியமித்தது, மக்களிடம் வீட்டாரின் சமாதி பாதுகாப்புக்கு ஆண்டு உறுப்பினர் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன,
சமாதி உடைப்பு சவத்திருட்டை கட்டுப்படுத்துவதற்கு சங்கங்களும் உருவாக்கப்பட்டன.புதிதாக இறந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளைப் பாதுகாக்க மக்கள் தாமே முன்வந்து ஒன்று விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் பாதுகாத்ததும் அன்று நடந்தது.
பணக்காரர்கள் சமாதிகள் இணைப்பு படத்தில் உள்ளது போல எளிதில் அகற்றி தூக்க முடியாத கனமான காங்கிரீட் மூடி கல்லறைகளாக இரும்புக் கிராதிகளின் மீது கூடுதல் பாதுகாப்பிற்கு அமைந்தன,
பெட்டகங்கள், கல்லறைகள் மற்றும் கல்லறைகளைச் சுற்றி இரும்புக் கூண்டுகளை அமைப்பது தேவையாகிப் போனது.
ஏழைகள் கல்லறைகளில் வேற்று மனிதர் நடமாட்டத்தை கண்காணிக்க கல்லறைகளில் பூக்கள் மற்றும் கூழாங்கற்களை பதித்து வைக்கத் தொடங்கினர்.
சிதைவை மிகவும் கடினமாக்குவதற்கு குளுமையான வேப்பமரம் கூட சமாதி மீது நட்டு கிளைபரப்பி வேர்விட்டு மூடுமாறு அமைத்தனர்.
பெரிய கற்கள், சவப்பெட்டி வடிவில் அமைந்தவை திருச்சபைக்கு பெரிய செல்வந்தர்கள் தானமாக நூற்றுக்கணக்கில் தர, அவை புதிய கல்லறைகளுக்கு மேல் பாதுகாப்புக்கு வேண்டி வைக்கப்பட்டன.
நண்பர்களும் உறவினர்களும் மாறி மாறி இருள் சூழ்ந்த நேரத்தில் கல்லறைகளைப் பார்க்க ஆட்களை வேலைக்கு அமர்த்தினார்கள்.
கண்காணிப்பாளர்கள் தங்குவதற்கு கண்காணிப்பு இல்லங்கள் கல்லறையில் அமைக்கப்பட்டன.
Edinburgh வில் கல்லறை ஒன்றில் உள்ள ஒரு கண்காணிப்பு கோபுரம் panaromic கண்காணிப்பு ஜன்னல்கள் கொண்ட மூன்று மாடி கட்டிடம் , இன்றும் வரலாற்று சாட்சியாக உண்டு .
கல்லறை கண்காணிப்புச் சங்கங்கள் நகரங்களில் உள்ள பெரிய கல்லறைகளில் உருவாக்கப்பட்டன, கிளாஸ்கோவில் ஒரு கல்லறை 2,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்துள்ளது.
இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் கல்லறைகள் கொள்ளை அடிக்கப்பட்டன,நம் ஆங்கில மருத்துவம் தழைப்பதற்கு வேண்டி எத்தனையோ லட்சகணக்கானோர் தம் உற்றார் உறவினர் சவங்களைப் பறிகொடுத்தது வரலாறு, இந்தியாவில் பிரிட்டிஷாரின் சமாதி இருந்தால் கூட அவர்கள் பயந்திருக்க மாட்டார்கள், ஆனால் இங்கிலாந்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அப்படி பயந்தனர்.
அறுவைசிகிச்சை நிபுணர்களும் மாணவர்களும் மருத்துவ அறிவை மேம்படுத்துவதற்காக உழைத்ததால் பிரிட்டிஷ் அதிகாரிகள் கல்லறை சவத்திருட்டுகளை கண்மூடி வேடிக்கை பார்த்தனர், என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணராமல் இருக்க கல்லறை திருட்டு குற்றத் செய்திகளை அதிகம் வெளியிடவுமில்லை.
சமாதியை உடைத்து தகர்த்து உடல்களைத் திருடுவதற்கும், அவற்றை இடத்திலிருந்து இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், கடல் கடந்து கூட, மருத்துவப் பள்ளிகளுக்கு விற்பனை செய்வதற்கும் கூட ஆண்கள் பணியமர்த்தப்பட்டனர். இது பொதுமக்களின் சீற்றத்திற்கு வழிவகுத்தது, குறிப்பாக ஸ்காட்லாந்தில், இறந்தவர்களுக்கு மிகுந்த மரியாதை மற்றும் உயிர்த்தெழுதலில் நேரடி நம்பிக்கை இருந்தது.
இறந்தவர்கள் உடல்கள் பூரணமாக மரியாதையுடன் சமாதியில் துயில் கொள்ளாத நிலையில் உயிர்த்தெழ முடியாது என்றும் நம்பப்பட்டது.
அரசு கொதித்தெழுந்த மக்களை சமாதானப்படுத்த தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளின் சடலங்களை மருத்துவக்கல்லூரி உடற்கூராய்வு பயிற்சிக்கு தரத் துவங்கியதும் நடந்தது.
ஒரு வழியாக 1900 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த சமாதி கொள்ளை சம்பவங்கள் நகரங்களில் கலவரங்கள் உண்டாக்கின ,கலவரம் முற்றி பொது சொத்துகள் சேதம் , மரணத் தாக்குதல்களையும் உண்டாக்கின,
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், புதிய பள்ளிகள் , கல்லூரிகள், தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன, புதிய மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் எழுச்சி கண்டன, இந்த கல்வி பரவலாக்கல் கல்லறைக் கொள்ளையர்களை புதிதாக உருவாகாமல் செய்தது , இலக்கியத்தில் இந்த சமாதி திருட்டு ஆவணப்படுத்தப்பட்டது, சிறார் படிக்கும் காமிக்ஸ் படக்கதையில் கூட சமாதி கொள்ளையர் கதாபாத்திரங்கள் இடம்பெற்றனர்.