நேற்று இந்த திரைப்படம் பார்த்ததில் இருந்து பல கேள்விகள் தொக்கி நின்றன, இளம் பெண் இயக்குனர் லாரா சமானியின் ஊரான ஃப்ரியூலி வெனிசியா-கியுலியாவில் ஒரு அற்புதங்கள் நிகழ்த்தும் கத்தோலிக்க தேவாலயம் இருப்பதைப் பற்றி அறிந்தவர் , அதன் வரலாற்றைத் தேடிப் படிக்கிறார்.
அங்கு 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, குறிப்பிட்ட அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் நம்பப்பட்டது,
இறந்த குழந்தைகள் குடும்பத்தின் சாபத்தை குறிக்கிறது என்ற ஆழ்ந்த நம்பிக்கையை மக்கள் அங்கே கொண்டிருந்தனர்.
இறந்து பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் செய்து பெயரிடும் சிறிய தருணம் வரை உயிர் தரும் அதிசயங்கள் கூட நடந்திருக்கிறது,
பெயர் வைத்தபின் அவர்கள் குழந்தைகள் அடக்கம் செய்ததற்கு வரலாற்றுத் தரவுகளை ஆய்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
இது போல பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலை பிராந்தியத்தில் மட்டும் கிட்டத்தட்ட 200 தேவாலயங்கள், Limbo என்று அழைக்கப்படும் மழலையர் கல்லறைகள் இருப்பதை இயக்குனர் லாரா சமானி கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
இதனால் இயக்குனர் பல இரவுகள் இதெல்லாம் ஏன் என்று விடை கிடைக்காமலும் தூங்காமலும் தவித்திருக்கிறார்,
நான் மனம் நொந்தும் போயிருக்கிறார்.
லாரா சமானியை மிகவும் கவர்ந்த விஷயம் அந்நாட்களில் குழந்தையின் பூத உடலுடனான கடினமான பயணம். பொதுவாகவே கடும் பயணம் மேற்கொள்வது ஆண்களே.
அதனால் மாற்றி யோசித்த இயக்குனர் தாய்மார்கள் அந்நாட்களில் குழந்தையை ஈன்று,புத்திர சோகத்துக்கு ஆட்பட்டு குழந்தையின் பூத உடலுடன் இந்த அற்புதங்கள் நிகழ்த்தும் தேவாலயத்துக்கு சென்று அடக்கம் செய்து திரும்பும் வரை வீட்டில் பெண்கள் என்ன செய்தார்கள்?
அவர்களின் மனநிலை எத்தகையதாக இருந்திருக்கும்? ஒரு அன்று ஒரு தாய் ,பச்சை உடம்புக்காரி இப்படி கடல் காடு ஆறு மலை பனி ஏரி என ஒரு கடும் பயணம் மேற்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயற்சித்ததன் விளைவே இப்படம் என்று பேட்டியில் விளக்கியிருந்தார்.
1900 ஆண்டின் துவக்கத்தில் ஒரு நெய்தல் நிலத்தில் ஒரு மீனவ கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணியின் வளைகாப்பில் துவங்கும் இப்படம் காடு ஆறு மலை பனி ஏரி என பயணித்து பிரமிப்பூட்டுகிறது,hand held camera கொண்டு படமாக்கப்பட்ட சுயாதீனப் படைப்பு இது,
தமிழ் சினிமா டூயட் லொக்கேஷனுக்கு தேடுபவர்கள் கூட இந்த படம் பார்க்கலாம்,மனித பாதம் படாத பல குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை நிலங்களின் பிரம்மாண்டம் பிரமிப்பூட்டுகின்றன.
உலக சினிமா ரசிகர்கள் மாணவர்கள் அனைவரும் இப்படம் பாருங்கள் ,
#உலகசினிமா,#இத்தாலி