1936 ஆம் ஆண்டு வெளிவந்த குரோம் கோ தொழிற்சாலையின் விளம்பரம், இத்தொழிற்சாலை 1913 ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் துவங்கப்பட்டது, 18 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்திருந்தது,
இந்நிறுவனம் அமைந்த பின்னர் தான் பல்லாவரம் என அழைக்கப்பட்ட இப்பகுதிக்கு குரோம்பேட்டை எனப் பெயர் வந்தது, இங்கு 11 மே 1931 ஆம் ஆண்டு ரயில் நிலையம் அமைக்கப்பட்டு மின்சார ரயில் சேவை துவக்கப்பட்டது.
இங்கு முதல் உலகப்போரில் ஈடுபட்டிருந்த போர்வீரர்களுக்கு ஷூ,பெல்ட்,முதுகில் மாட்டும் பை,பர்ஸ்,கைப்பை,சூட்கேஸ், எந்திரங்கள் கார்களுக்கு வரும் தோல் வாஷர்கள், விலை உயர்ந்த கார்களுக்கு தோல் சீட் கவர் என தயாரிக்கப்பட்டு உலகின் எல்லா பகுதிகளுக்கும் ஏற்றுமதியானது.
இன்றைய CLC works சாலையில் இந்த பெரிய நிறுவனம் 1913 ஆம் ஆண்டு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் சேம்பர்ஸ் என்ற இளம் ஆங்கிலேய தொழில் முனைவோரால் துவங்கப்பட்டது, மற்ற தொழிற்சாலைகளைப் போல இதற்கு உயரமான எல்லைச் சுவர்கள் setbacks கிடையாது , நேராக தொழிற்சாலையின் எல்லைச்சுவர் CLC works சாலையில் அமைந்திருக்கும் ,பெரிய பெரிய நீல நிற victorian பாணி சன்னல்கள் தெற்கு நோக்கி சாலையைப் பார்த்தபடி அமைத்திருக்கும், நான் சிறுவனாக இருக்கையில் இந்த பெரிய தொழிற்சாலை கட்டிடத்தை வேடிக்கை பார்த்தபடி நடந்து போவேன்.
இத்தொழிற்சாலையில் சுமார் 1600 தொழிலாளர்கள் பணியாற்றினர். இதன் அருகாமையான நாகல்கேணியில் புற்றீசல் போல துவங்கப்பட்ட போட்டி தோல் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் உள்ளிருப்பு தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களால் நொடித்துப் போயிருந்த இந்த தொழிற்சாலையை 1965 ஆம் ஆண்டு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் சேம்பர்ஸ் குடும்பத்தினரிடமிருந்து தொழிலதிபர் திரு.நாகப்பா செட்டியார் விலைக்கு வாங்கி நடத்தினார்,
1972 முதல் 1981 வரை இந்நிறுவனம் மத்திய மாநில அரசின் ஏற்றுமதி தடைகள்,கெடுபிடிகள், பல தொழிலாளர் போராட்டங்கள் வழக்குகளையும் தாண்டி காற்றில் ஊசலாடும் தீபமாக இயங்கி வந்தது 1993 ஆம் வருடம் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது, இன்று இந்த நிறுவனம் இருந்த இடத்தில் Rela ஐந்து நட்சத்திர மருத்துவமனை, பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,தாகூர் கலைக் கல்லூரி ,ஹில்டன் நீச்சல் குளம் , நாகப்பா நகர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன,
இப்புகைப்படத்தில் இந்நிறுவனம் , குரோம்பேட்டை லட்சுமிபுரம் ஏரி,அதை அடுத்த மந்திரகிரி என்ற பச்சைமலை, mepz மலை, தெரிகின்றன,தூரத்தில் கிஷ்கிந்தா தீம்பார்க் அமைந்துள்ள தர்காஸ் மலைப்பகுதி தெரிகிறது. அதன் அடுத்து மண்ணிவாக்கம் மலைப்பட்டு மலை தெரிகிறது.