சென்னை மெட்ரோவில் பயணிப்பதில் ஒரே சௌகர்யம் அது போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்கிறது, 25 நிமிடத்தில் அது விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் செல்கிறது, 30 நிமிடத்தில் அண்ணாநகர் டவர் நிலையத்துக்கு செல்கிறது.
ஆனால் நீங்கள் விமான நிலைய மெட்ரோவிற்குள் சென்று டிக்கட் எடுத்து உங்களை ஸ்கான் செய்து உங்கள் பைகளை ஸ்கான் செய்து பளாட்ஃபார்மிற்குள் சென்று சேர 10 நிமிடம் ஆகிவிடும்.
சிறிய பைகள் என்றால் தேவலை, பெரிய 55" சூட்கேஸ்களை எல்லாம் நீங்கள் ஸ்கேன் செய்து சென்ட்ரலுக்கு ரயில் பிடிக்க மெட்ரோ ஏறினால் வாழ்க்கையை வெறுத்து விடுவீர்கள்.
விமான நிலையத்தில் மெட்ரோவில் செல்ல உங்கள் இருசக்கர வாகனம் நிறுத்த 25 ரூபாய் கட்டணம்.சில சிறிய மெட்ரோ நிலையங்களில் இரு சக்கர வாகனம் நிறுத்த 10 ரூபாய்.இதுபோல பல முரண்பாடுகள் உள்ளன.
டிக்கட் கட்டணம் விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் வரை செல்ல 36 ரூபாய், இதே தூரத்துக்கு துபாயில் 60 ரூபாய்.
இங்கே சென்னை மெட்ரோவில் சலுகை உள்ள சீசன் டிக்கட் இல்லை,ஐந்து வருடம் டாப்அப் செய்து பயன்படுத்தக் கூடிய கட்டண அட்டை விலை 50 ரூபாய், இதில் நீங்கள் 1000 ,2000 என மதிப்பு க்ரெடிட் கார்டு தந்து கவுண்டரில் ஏற்றிக் கொள்ளலாம்,எத்தனை மதிப்பிற்கு டாப்அப் செய்தாலும் ஒரு சோப்பு டப்பா கூட பரிசு இல்லை.
இங்கே துபாயில் ஸ்கானிங் செய்யும் சல்லியம் இல்லை, குறைந்தது ஐந்து நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ, இங்கு சென்னையில் பீக் ஹவரில் சராசரி 4.5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ, மற்ற நேரத்தில் 15 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ , இங்கே துபாய் மெட்ரோவுக்கு ஓட்டுனர் கிடையாது,
இது வரை தொழிற்நுட்பக் கோளாறு என சேவை ரத்து செய்தது கிடையாது, காலை 5-30 முதல் நள்ளிரவு 12 வரை மெட்ரோ இயங்கும், பராமரிப்பு பணிகளுக்கு வேண்டி வெள்ளி மட்டும் 1-00 மணி முதல் நள்ளிரவு 12 வரை மெட்ரோ இயங்கும்.
ஆனால் சென்னை மெட்ரோ சில நிலையங்களில் மட்டும் 6-00 மணிக்குத் துவங்கி இரவு 10 மணிக்கே நடையை சாற்றி விடுகின்றனர்.
சென்னை மெட்ரோவில் பிடிக்காதது அதன் சீட் அமைப்பு, நீல வண்ண கெட்டி ப்ளாஸ்டிக்கில் நீளவாக்கில் அமைத்துள்ளனர,
நம் புறநகர் மின்சார ரயிலில் வெண்டர்ஸ் பெட்டியில் சீட்கள் சன்னலை எதிர் நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அதே போல இரக்கமோ? தார்மீக அறமோ இன்றி அமைத்துள்ளனர்,நீங்கள் வேடிக்கை பார்க்க கழுத்தை திருப்பி பார்க்க வேண்டும் எனவே கழுத்து சுளுக்கும்.
அல்லது உடம்பை பக்க வாட்டில் திருப்பி அமரவேண்டும், எனவே இடுப்பும் முதுகும் சுளுக்கும், சரி காலை சப்பளம் போட்டு அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்றால் ,பிரகஸ்பதிகள் தரையில் இருந்து சீட் உயரத்தை 450 மிமீக்கும் அதிகமாக வைத்துள்ளனர். கண்ணறாவி டிசைன், அதீத பேராசையின் வெளிப்பாடு மெட்ரோ இருக்கைகள்,
சில ரயில்களில் கண்ணாடி சன்னல் ,கண்ணாடி கதவு முழுக்க எல்ஐசி போன்ற ராடசத விளம்பரங்கள், உள்ளேயிருந்து பார்க்கையில் உங்களுக்கு புள்ளி புள்ளியாக தான் எல்லா நகர்வலக் காட்சிகளும் தெரியும்.
எல்லாவற்றையும் விட கூத்து ரயில் பாதாளத்துக்குள் நுழைகையில் விளக்கு ஒரு கனம் அணைந்து எரிகிறது, இது எதற்கு ? யாராவது சங்கிலி மோஷ்டிப்பதற்கா?
மக்கள் உபயோகம் இல்லாததால் பல நிலையங்களில் எஸ்கலேட்டர்களை,டிக்கட் மெஷின்களை நிறுத்தி வைத்துள்ளனர். படிகளை தான் அங்கே உபயோகிக்க வேண்டும்.தவிர நீண்ட தூரம் சுற்றி தான் ஸ்கானிங் பகுதிக்கு செல்ல முடியும்.அது பெரிய சிக்கலாக உள்ளது.பல நிலையங்களில் ஆளில்லா சப்வேயில் நடப்பது போல உள்ளது, எனவே கடைகள் அலுவலகங்கள் திறந்து உள்வாடகை விட்டு கூட்டம் வரவழைக்கலாம்.சமூக விரோதிகள் வராமல் காக்கலாம்.
விமான நிலையம் ஆலந்தூர் உள்ளிட்ட டெர்மினஸ்களில் மட்டும் கழிப்பறை இலவசம், அதிசயமாக நன்றாக பராமரிக்கப்படுகிறது, கைகழுவ லைஃப்பாய் லிக்விட், கை துடைக்க பேப்பர் எல்லாம் உள்ளது.
மற்ற மெட்ரோ நிலையங்களில் கட்டண கழிப்பறை என பலகை பார்த்தேன். சென்னை மெட்ரோவை இன்னும் எளிமையாக்கி நிறைய பேர் அதில் பயணிக்க வழிசெய்ய வேண்டும்.இந்த சென்னை மெட்ரோ திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் அதுதான் என் அவா.இந்த பயண அட்டையை பலநோக்கு பயண அட்டையாக மாற்றி,அதிலேயே வாகன நிறுத்தம், மின்சார ரயில் உபயோகம், ஃபீடர் பேருந்து ,ஷேர் ஆட்டோ என எல்லா மாரக்கத்திலும் உபயோகிக்கும் முறை கொண்டு வர வேண்டும்.மெட்ரோவை பத்து வருடம் கட்டினீர்கள், ஆனால் இந்த நல்ல மாற்றங்களை விரைவில் புகுத்துங்கள், மற்ற மாநில மெட்ரோவுக்கு முன்னோடியாக மாறுங்கள், பொதிகை போல பறக்கும் ரயில் போல தோல்வியாக முடியாதீர்கள்.