இயக்குனர் கரண் பாலி 2013 ஆம் ஆண்டு இயக்கிய தரமிகு ஆவணப்படம் An American in Madras , 1மணி 20 நிமிடம் நீளுகிற இந்த அழுத்தமான ஆவணப்படம் youtube ல் காணக்கிடைக்கிறது,
அமெரிக்காவில் பிறந்த திரைப்பட இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்கள் இந்தியாவில் இருந்த 15 அர்த்தமுள்ள ஆண்டுகளைக் பதிவு செய்கிறது இந்த ஆவணப்படம்.
சினிமா ஆர்வலர்கள் ,சினிமா துறை முனைவர்கள் பேராசிரியர்கள், டங்கனுடன் அவர் படங்களில் பங்காற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அவர் படைப்புகளை விளக்க,உடனே அந்த வியத்தகு காட்சி விரிகிறது,அத்தனை வியப்பை தருகிறது.
1909 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒஹியோ, பார்டனில் பிறந்த டங்கன், USC (University of Southern California ) என்ற பெருமை மிகு கல்லூரியில் புகைப்படக்கலை பயின்றார், பிப்ரவரி 25, 1935 ஆம் ஆண்டு மதராஸுக்கு புதிய ஸ்டுடியோ துவக்கும் பணிக்கு வெறும் 6 மாதங்கள் தங்கி பணியாற்றலாம் என்று எண்ணி இங்கு வந்தார்,
ஆனால் மதராஸும் அதன் மனிதர்களும் அவரின் அடுத்தடுத்த அர்த்தமிகு படைப்புகளும் 15 ஆண்டுகள் டங்கன் அவர்களை இங்கு தங்க வைத்தன.
தமிழ் மொழியில் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத டங்கன் அவர்கள் 1935 முதல் 1950ஆம் ஆண்டு வரை வளர்ந்து வந்த தமிழ் திரைப்படத் துறையில் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்தார்,
தமிழ் திரைப்படத் தயாரிப்பில் நேர்த்தியான தொழில்முறையை நளினத்தை உலகளாவிய தரத்தை புகுத்தினார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் முதல் திரைப்படமான சதி லீலாவதியையும், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மிகவும் பிரபலமான திரைப்படங்களான சகுந்தலை , மீரா ஆகிய இரு திரைப்படங்களை டங்கன் இயக்கியுள்ளார்,டங்கன் அறிமுகம் செய்த இந்த இருவரும் நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர டி.எஸ்.பாலையா, காளி என்.ரத்னம் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பல பிரபலமான தமிழ்த் திரைப்பட நடிகர்களின் அறிமுகப் படங்களை டங்கன் அவர்கள் இயக்கினார்.
1962 ஆம் ஆண்டு வரையிலான இயக்குனர் டங்கனின் இந்திய சினிமாவுடனான தொடர்பை இந்த ஆவணப்படம் சுவைபடக் கண்டறிந்துள்ளது,
இயக்குனர் டங்கன் இந்தியாவை விட்டு வெளியேறி 43 ஆண்டுகள் கழிந்த பிறகு,தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய நேர்மையான பங்களிப்பிற்காக, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அவரின் தனிப்பட்ட அலுவலின் போதான இந்தியப் பயணத்தின் போது, தமிழ்த் திரைப்படத் துறை கூடி ஒன்று திரண்டு அவரை சென்னையில் விழா எடுத்து பாராட்டியது இந்த ஆவணப்படத்தின் இறுதிப்பகுதியில் வருகிறது.
நிகழ்ச்சியின் முடிவில் நனையாத கண்கள் அரங்கிலில்லை என்ற உணர்ச்சிகரமான சூழல் நிலவிய அந்த பொன்னான தருணத்தையும் ஆவணப்படம் காட்சிப்படுத்துகிறது.
விழா நிறைவுறுகையில் டங்கன் அவர்கள் நெஞ்சம் நிறைந்து சொன்ன வார்த்தைகள் இவை.
"Madras is the only place I know where a man can come back after 43 years and be welcomed wholeheartedly."
An American in Madras மிகவும் தரமான ஆவணப்படம் ஒரு சேர நமக்கு தொழிற்நுட்ப அறிவையும் இந்திய சினிமா வரலாற்று அறிவையும் தலைசிறந்த மனிதம் பற்றிய அறிவையும் , டங்கன் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு வழங்கியவற்றிற்கு அளவு கடந்த அன்பையும்,அவருக்கு அளவு கடந்த நன்றியையும் நெகிழ்ச்சியாக அவர் உயிரோடு இருக்கையிலேயே உரைத்த தருணத்தை அத்தனை அழகாக விவரிக்கிறது,
மூன்று இந்திய ஆவணத் தயாரிப்பாளர் சங்கங்களின் (IDPA) விருதுகளை வென்றுள்ளது ,
இந்த ஆவணப்படத்தை அத்தனை சினிமா ஆர்வலர்களும் பாருங்கள், உங்கள் வீட்டில் வயதான பாகவதர் விசிறிகள், எம்ஜியார் விசிறிகள், கலைஞர் விசிறிகள் , M.S. அம்மா விசிறிகள் என யார் இருந்தாலும் இதை பார்க்க வையுங்கள், இதன் மூலம் நீங்கள் அவர்களின் அன்றைய நாளையே அர்த்தமுள்ளதாக்குகிறீர்கள் எனக் கொள்க,
ஆண்பாவம் திரைப்படத்தில் இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான் பாடலில் இசைஞானி தமிழ் சினிமாவின் வரலாற்றை ஒரு பாமரனுக்கும் புரியும் படி கடத்தினார், அப்படி நிறைவாக இந்த தரமிகு ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் கரண் பாலி .
இயக்குனர் டங்கன் குறித்து நிறைய கட்டுரைகள் எழுத இந்த ஆவணப்படம் உத்வேகமளிக்கிறது.