Ghaf Trees இவை பாலைவனத்தில் சுயம்புவாக வளரும் மரங்கள்,இதன் அறிவியல் பெயர் Prosopis Cyneraria மணல் புயல் ஏற்படுகையில் ஒரு சல்லடை போல மணல் துகள்களை தன் நெருக்கமான இலைகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன, மணல் புயலின் போது மணல் அரிப்பு ஏற்பட்டு சாலை மணலால் மூடுவதையும் இம்மரங்கள் தடுக்கின்றது,
தொலைவில் இருந்து பார்த்தால் சடை சடையாக தொங்கும் இலைகள், நெருங்கிச் சென்று பார்க்க நம் புளிய மரத்தின் இலைகள் , தொட்டாச் சிணுங்கி இலைகள் போன்ற இலைகளைக் கொண்டுள்ளது,
இது அமீரகத்தின் தேசிய மரமாகும், பனைமரம், வேப்ப மரம் , உரிஞ்சும் நீரை விட 350 மடங்கு குறைவாக நீர் உரிஞ்சுமாம், இது மணலில் வேர் பிடித்து ஆழமாகச் சென்று 50 மீட்டர் விட்டம் வரை வளரும், அமீரகத்தின் பெரிய Ghaf மரம் ஷார்ஜாவில் வனவிலங்கியல் பூங்காவில் உள்ளது.
இதன் இலைகள் அத்தனை லேசில் உதிர்வதில்லை, இந்த மரம் துபாயின் ஷேக் ஸாயேத் ரோட்டின் அருகே ஸத்வா பகுதியில் இருக்கும் அல் கஸான் (Al Khazzan ) பூங்காவில் உள்ளது, வயது சுமார் 100 வருடங்கள்,
இவற்றில் உங்கள், காதலி பெயர் , பரீட்சை எண் எழுதி சேதப்படுத்தினால் 1000 திர்காம் வரை அபராதம், இவ்வகை புராதான மரத்தை கிளையை ஒடித்தாலோ மரத்தையே வெட்டினாலோ 50000 திர்காம் அபராதம் மற்றும் சிறைவாசம்,
நாம் வீடு கட்ட உள்ள காலி இடத்தில் இவ்வகை Ghaf tree இருந்தால் முறையாக அதை படம் வரைந்து அனுமதி வாங்கி அரசு சொல்லும் இடத்தில் மாற்றி நட வேண்டி வரும்.படத்தில் உள்ள மரத்திற்கு லைசன்ஸ் எண் உள்ளதைப் பாருங்கள்.
இம்மரத்தின் குளிர்ச்சியில் அப்படியே உறங்கிப் போகலாம், நமக்கு எப்படி வேப்பமரக் காற்றோ அப்படி அரபிகளுக்கு Ghaf மரம் , இதன் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்கா.
இதன் பட்டையில் இருந்து கோடைகாலத் துவக்கமான மே ஜூன் மாதங்களில் பிசின் வடியும், அதைக் கொண்டு தொழுநோய்க்கு மருந்து தயாரிக்கின்றனர், மரத்தின் பட்டை, இலை என எல்லாமே வயிற்றுப்போக்கு, வாதம் , கபம் , சளி , இருமல்,ஆஸ்துமா, தோல் வியாதிகள், தசைப் பிடிப்பு போன்ற வியாதிகளுக்கு நிவாரணி, இதன் இலையைப் புகை போட்டு கண் சம்மந்தமான வியாதிகளை பண்டைய அரபி மருத்துவத்தில் குணப்படுத்தி வந்துள்ளனர்.
அடுத்த முறை இந்த மரங்களை நீங்கள் அமீரக மண்ணில் எங்கேனும் பாரத்தால் நின்று அதனடியில் இளைப்பாறிச் செல்லுங்கள், இதன் அருமை பெருமைகளை நண்பர்களுக்குச் சொல்லுங்கள்.
Ghaf Trees #