இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கைகொடுத்த தெய்வம் (1964 )படத்தில் வரும் சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடல் தமிழ் சினிமாவில் இசையும் காட்சியும் இழைந்து நன்றாகப் பொருந்தி பெயரெடுத்த பாடல்,ஐம்பத்தைந்து வருடங்களைக் கடந்தும் மிளிர்கிறது.
இப்படத்தில் சிவாஜி பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் சென்று வேலை செய்கிறார்,
தமிழரான தன் நண்பன் SSR க்கு தங்களுடன் வேலை செய்யும் Half Tamil Half Marathi பெண்ணான கே.ஆர்.விஜயாவை மணமுடித்து மணப்பெண்ணுக்கு அண்ணனாகவே மாறுகிறார்,
மணப்பெண்ணின் அப்பா நாகையா , இவர் எல்லாம் ஒரே வீட்டில் வசிக்கையில் இவருக்கு தன் தேசம் கொண்டிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தனித்தன்மையின் மீது புளங்காகிதம் ஏற்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பாரதியார் கவிதைகளை எடுத்து வாசிக்கையில் அங்கே பாரதியாராகவே மாறி கவிதை புனைகிறார்,
சிவாஜி தமிழ் சினிமாவில் நடிப்பிற்கான ஆதி அகராதி என்றால் சற்றும் மிகையில்லை, இது இத்தனைக்கும் ஒரு ஜனரஞ்சக ட்ராமா வகைப்படம், சுதந்திரப் போராட்டப் படம் கூட கிடையாது, ஆனால் கனவுப்பாடலான இதில் மொத்த குழுவும் அத்தனை உழைப்பை ஈந்து இந்த vision statement பாடலை மெருகேற்றியிருந்தனர்,
சிவாஜி இப்பாடலில் பாரதியாக வருகிறார்,
பஞ்சாப் கோதுமை விவசாயியாக வருகிறார்.
காவிரி வெற்றிலைக்கூடை ஏந்திய விவசாயியாக வருகிறார்,
மராட்டியக் கவிஞனாக வருகிறார்,
சேரநாட்டின் தந்தம் விற்கும் வணிகனாக வருகிறார்.
சிவாஜி முழுக்க இந்த பாரதியார் இயற்றிய இப்பாடலை ஆக்கிரமித்தார், சிவாஜியையும் பாரதியையும் பிரிக்க முடியாதபடி மனதில் நிறைந்தார்.
இப்பாடலின் நடுவே வரும் சுந்தரத் தெலுங்கு வரிகளான "மனசுகிநீ கோசம்" வரிகளை தெலுங்கு கவிஞர் ஜே.வி.ராகவலு எழுதி அவரே பாடினார், டி.எம்.எஸ் அவர்களின் மிக முக்கியமான பாடல் இது, நெகிழ்ந்து உருகி மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும், மனசுகி நீ கோசம் தெலுங்கு பெண் பாடல்வரிகளைப் பாடியது எல்.ஆர்.ஈஸ்வரி, இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள்.
இந்த தெலுங்கு வரிகளுக்கு காயலில் செல்லும் மூவர்ணக் கொடி கட்டிய படகில் களித்திருக்கும் மலையாள நாட்டு காதலர்களாக நடிகர்கள் ப்ரேம்நசீர் போன்ற தோற்றம் கொண்ட பிரேமானந்த் என்ற நடிகரும் , லதா சின்ஹாவும் தோன்ற ஒலிப்பதோ சுந்தரத் தெலுங்கு வரிகள்,
இப்பாடலின் முடிவில் பாரதியார் கனவான வங்கத்தில் பாயும் கங்கை நதி மிகை நீரை மத்திய பிரதேசம் மற்றும் கீழை மாநிலங்களுக்குத் திருப்பி முப்போகம் விளையச் செய்வதை காட்சிப் படுத்தியிருப்பார்கள்.
அப்படியே சிங்களத் தீவை இணைக்கும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றி ஒரு ரயில் பாலமும் ஒரு சாலைப் பாலமும் நிர்மானித்திருப்பார் கலை இயக்குனர் கங்கா, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கர்ணன்.
அற்புதமான தேசபக்திப் பாடலாக பல முறை நாம் கண்டும் கேட்டும் ரசித்தும் அலுக்காத பாடல் இது.