இன்று 20 ஆம் சென்னை திரைப்பட திருவிழாவில் பார்த்த திரைப்படம் Parsley மிகவும் அற்புதமான படைப்பு,
1937 ஆம் ஆண்டு டொமீனிக்கன் குடியரசு நாட்டில் ஹைத்தியர்கள் சுமார் முப்பதாயிரம் புதிதாக பதவி ஏற்ற சர்வாதிகாரியால் நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் தேடித்தேடி இன அழிப்பு செய்யப்பட்ட கோர நிகழ்வை ரத்தமும் சதையுமாக பேசும் படைப்பு இது.
1937 ஆம் ஆண்டு ஹைத்திக்கும் டொமினிகன் குடியரசுக்கும் இடையிலான எல்லையில், நவீன அடிமைத்தனமான பணிச்சூழலில் கிராமப்புறங்களில் பணிபுரிந்த சுமார் 30,000 ஹைத்தியர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
டொமினிகன் சர்வாதிகாரி
Raphael L. By Trujillo ஆணையால் நிகழ்ந்த இந்த ஹைத்திய இனப்படுகொலை Parsley Massacre என்று அழைக்கப்படுகிறது. ,
இந்த வார்த்தை Parsley ஐ வோக்கோசு என்று ஒலிக்குமாறு ஹைத்தி என்று ஐயப்பட்டு விசாரிக்கப்படுபவர் சரியாக உச்சரிக்க வேண்டும், இது ஒரு பரிசோதனையின் அங்கமாகவே ராணுவத்தினரால் கடைபிடிக்கப்பட்டது,
ஹைத்தியர்களில் பலர் Creole ஐ தங்கள் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர், எனவே 'பார்ஸ்லி' என்ற வார்த்தையின் பிழையான உச்சரிப்பு அவர்களை கோர மரணத்திற்கு உடனே இட்டுச் சென்றது.
அப்படி சரியாக உச்சரிக்காதவர்கள் உடனே வெட்டிக் கொல்லப்பட்டனர், சுட்டுப் கொல்லப்பட்டனர் , கொன்ற எண்ணிக்கைக்காக
காதறுக்கப்பட்டனர்,
கர்ப்பிணிகள் கூட ராணுவத்தினரால் வன்புணரப்பட்டனர், குழந்தைகள் கூட சுட்டுக்கொல்லப்பட்டனர், கூட்டு சவ அடக்கம் கூட அவர்களுக்கு அதிகம் என்று நாய் நரி தின்ன வேண்டி அப்படியே காடுகளில் அழுக விடப்பட்டனர், Massacre என்ற பெயரைக் கொண்ட ரத்தசரித்திம் கொண்ட எல்லை ஆற்றில் அழுகிய சவங்கள் வெள்ளத்தில் அப்படி அடித்துச் செல்ல கொட்டப்பட்டன .
ஒன்பது மாத கர்ப்பிணியான மேரி ஹைத்தி இனத்தவள், அவள் காதல் கணவன் ஃபிராங்க் டொமினிகன் இனத்தவன்,கடும் உழைப்பாளிகள்,
சர்வாதிகாரி Trujillo அன்று இரவு ஏவி விட்ட ராணுவ வன்முறையால் அந்த இரவு மேரியின் குடும்பம் சிதைந்து சீரழிந்து போகும் வலியின் தருணங்களை இப்படம் தத்ரூபமாக பேசுகிறது,
அன்று இரவு நிலவொளியில்ல கணவனும் மனைவியும் குளித்து கொஞ்சிவிட்டு உறங்குகையில் வேட்டை நாய்கள் போன்ற டொமினிகன் இராணுவம் இவர்கள் குடியிருப்பில் நுழைகிறது, அதன் பின்னான கொலைவெறித் தாக்குதலில் கணவனை இழக்கிறாள் மேரி,
ஃப்ராங்க் தன்னை டொமினிக்கன் என்று சொன்னாலும் அவனின் விசுவாசத்தை சார்பு நிலையை நிரூபிக்க அவன் கையால் ஹைத்தி இன ஆண் ஒருவனை வெட்டிக்கொல்லும்படி நிர்பந்திக்கப்படுகிறான்,
அவன் வெட்டிக் கொன்று விட்டு கதறி அழுகையில் மீண்டும் ஒரு ஹைத்தி இன சிறுவனை வெட்டிக் கொல்ல நிர்பந்திக்கப்படுகிறான், ஃப்ராங்க் மறுக்கவே உடனே சுட்டுக்கொல்லப்படுகிறான்,
நிறைமாத கர்ப்பிணி மேரி, குவியலில் பிணம் தின்ன வந்த நாய்களை தீவெட்டி கொண்டு விரட்டுகிறாள், பிணக்குவியலில் கணவனுக்கு பிரார்த்தனை செய்து நெஞ்சில் ஜெபமாலை வைத்து கொள்ளி இட்டு விட்டு தப்புகிறாள்,
பிரசவ வலி எடுக்கவே இங்கு பிரசவிக்க கூடாது என உறுதி பூண்டவள் வனத்தில் பலகாதம் நடக்கிறாள், தன் மகனை எல்லையில் அகதிகுழுவுடன் விட்டு வந்த நிலையில் கணவனை தேடி வந்தவளுக்கு என்ன என்னவோ நேர்ந்திருக்கிறது,
ஒரு தெரிந்த டொமீனிக்க அதிகாரி ஹைத்தி இன அனுதாபி அவர் வீட்டில் நுழைந்து அடைக்கலம் கேட்கிறாள் மேரி,
அந்த குடும்பம் கடும் தர்மசங்கடத்தில் உழல்கிறது, வரப்போகும் ஆபத்தை அறிந்தும் கூட மேரிக்கு அங்கே தனி அறையில் அடைக்கலம் தருகின்றனர், மேரியின் காயங்களுக்கு மருந்திடுகிறாள் ஹைத்தி இனப் பணிப்பெண், அவளுக்கு குளியல் தொட்டியில் இதமான வெந்நீரில் இறக்கி குளித்து விடுகிறாள், விதி வலியது, இந்த வீட்டிலும் ராணுவம் வந்துவிடுகிறது, இங்கு பணியில் இருந்த ஹைத்தியர்கள் ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்று கணக்காய்வுக்கு இடது காதை அறுத்து சவங்களை மாட்டு வண்டியில் ஏற்றுகிறது,
இவளை கொல்ல வந்த ராணுவ சிப்பாய் ஜெர்மன், மேரியின் கணவன் ஃப்ராங்கின் பால்ய தோழன், ஆதலால் மேரியின் இடது காதை மட்டும் கணக்கு காட்ட வேண்டி அறுத்து எடுத்துக் கொள்கிறான்,மேரி பல்லை வைத்து கத்தியின் மரப்பிடியை கடித்து காதறுக்க காட்டித் தருகிறாள், கர்ப்பிணி சவம் அதிக கனம் என்பதால் வண்டியில் ஏற்றவில்லை என்கிறான் ஜெர்மன்,
மேரி காட்டுக்குள் தப்பி ஓடுகிறாள், அவளுக்கு பனிக்குடம் உடைந்து பனிநீர் பிசின் கால்களில் வழிகிறது, மானமுள்ள மேரி மிகுந்த இடர்பாடுகளை தாங்கி பாறைகள் இடறும் ஆற்றில் இறங்கி நடந்து ஹைத்தி கரையில் ஆற்று நீரில் இறங்கி ஆண் சிசுவை பிரசவிக்கிறாள்,
சிசுவுக்கு தாய்ப்பால் புகட்டியபடியே தாய் இறந்தும் விட்டிருப்பதை மறுநாள் அவளின் மகன் குழந்தை அழுகுரல் அழைக்க தேடி வந்தவன் பார்க்கிறான்,
காதறுக்கப்பட்ட தாயைப் பார்க்கிறான் மகன், அவனுக்கு தாயை சவமடக்க எல்லாம் நேரமில்லை, இரு உயிர்களின் மரணப் போராட்டம் துவங்குகிறது,வீறிடும் கைக்குழந்தை இன்னும் தொப்புள் கொடியுடன் இருக்கும் தம்பியை கைகளில் ஏந்தி பிற அகதிகளுடன் இணைய வேண்டி ஆற்றின் பாறைகளூடே நடப்பதுடன் இப்படம் நிறைகிறது.
இப்படம் நிறைமாத கர்ப்பிணி மேரி தன் வயிற்று சிசுவை பிரசவிக்க காட்டுக்குள் அலைந்து திரிந்து அல்லாடும் ஜீவ மரணப்போராட்டத்தையும் உடன் அன்பின் தியாகத்தின் வலிமையையும் படம் அத்தனை தத்ரூபமாக விவரிக்கிறது.
வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் தேடிப் பாருங்கள்.