ராஜா ரவிவர்மாவின் சகுந்தலை துஷ்யந்தன் ஓவியங்கள் 1890 ஆம் ஆண்டு துவங்கி சுமார் 18 ஆண்டுகள் வரையப்பட்டவை, மகாகவி காளிதாசரின் அபிஞானசகுந்தலத்தின் பின்னணியில் சுமார் பனிரெண்டு ஓவியங்களாக அவர் வரைந்திருக்கிறார்.
சகுந்தலை மேனகைக்கும் விசுவாமித்திரருக்கும் பிறந்தவள், பெற்றோர் கைவிட்ட நிலையில் கன்வ மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்தவள்,ஒரு சமயம் கன்வ மகரிஷி மற்ற பெரியோர்கள் யாத்திரைக்கு சென்றிருந்தபோது, ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் காட்டில் வேட்டையாட வருகிறான். அவன் சகுந்தலை அழகில் மயங்கி, அரச பாணியில் அவளை அரவணைத்து, கந்தர்வ விவாஹ முறையில் மணந்து கொள்கிறான்.
அதன்பின் தலைநகரில் உள்ள விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அவர் புறப்படுகிறான். துஷ்யந்தன் சகுந்தலைக்கு ஒரு முத்திரை மோதிரம் அணிவிக்கிறான், அவள் அவனது அரண்மனைக்கு பெற்றோருடன் நேரில் வருகையில் அதை காட்டினால் உள்ளே அனுமதிப்பார்கள் என்று பிரிகிறான்.
சகுந்தலை பசலை படர்ந்து துஷ்யந்தன் நினைவாகவே இருக்கிறாள், சுற்றம் மறந்திருக்கிறாள், அன்று துர்வாச முனிவர் துறவு இல்லத்திற்கு வருகை தருகிறார்,வரவேற்க யாருமில்லை, சாதாரணர்களுக்கே உரிய வரவேற்பில்லை என்றால் எத்தனை கோபம் வரும், அவர் துர்வாசர், சகுந்தலா தனது கற்பனைகளில் மூழ்கி துர்வாச முனியின் இருப்பையே மறந்திருக்கிறாள்.
ஞானதிருஷ்டியில் இவர்களின் கந்தர்வ விவாகத்தை அறிந்த துஷ்யந்தன் சகுந்தலாவை மறந்துவிடுவான் என்று துர்வாசன் அவளை சபிக்கிறார்.
தன்னிலை உணர்ந்த சகுந்தலை துர்வாசரிடம் மன்றாடி அவர் சாபத்தின் வீர்யத்தை குறைக்கிறாள். சகுந்தலாவுக்கு வழங்கப்பட்ட முத்திரை மோதிரத்தைப் பார்த்தால், துஷ்யந்தனுக்கு சகுந்தலாவின் நினைவு திரும்பும் என்று துர்வாசர் கூறுகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, சகுந்தலா கங்கையில் படகில் செல்கையில் நீரை அலைகையில் அவள் முத்திரை மோதிரத்தை மீன் விழுங்கி விடுகிறது.
அரண்மனையில் சகுந்தலை, அவளை மறந்த நிலைக்கு தள்ளப்பட்ட துஷ்யந்தனை சந்திக்கிறாள், துஷ்யந்தனால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறாள்.
அதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த சகுந்தலையின் மனதைத் தேற்றவேண்டி அவளை தோளோடு தோளாக ஏந்திக் கொண்டு தேவலோகத்திற்கு பறந்து செல்லும் தாய் மேனகை ஓவியம் பாருங்கள் இது 1890 ஆம் ஆண்டு வரைந்த ஓவியம்.
முத்திரை மோதிரத்தை விழுங்கிய மீனை மீனவன் பிடிக்கிறான், அதன் வயிற்றில் இருந்த முத்திரை மோதிரத்தை மன்னனின் கொண்டு தருகிறான் மீனவன், முத்திரை மோதிரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னனுக்கு சகுந்தலை நினைவு வருகிறது, பின்னர் சுபம்.
சகுந்தலா மற்றும் துஷ்யந்தா மீண்டும் இணைவதை சித்தரிக்கும் ராஜா ரவி வர்மாவின் ஓவியம் உண்டு.
பழைய காதலர்கள் அணைத்துக்கொள்கிறார்கள், துஷ்யந்தன் கையில் முத்திரை மோதிரத்தை வைத்திருப்பதை பாருங்கள்.
சகுந்தலை மற்றும் அவள் தோழிகள் இருவர் அனசுயா மற்றும் ப்ரியம்வதா , இவர்களையும் ராஜா ரவிவர்மா ஓவியத்தில் வரைந்திருக்கிறார்,சகுந்தலை தன் கந்தர்வ கணவனுக்கு தாமரை இலையில் காதல் கடிதம் எழுதுவதை மட்டும் நான்கு ஓவியங்களாக வரைந்திருக்கிறார் ராஜா ரவிவர்மா.
சகுந்தலையின் காலில் முள் குத்தும் ஓவியத்தைப் பாருங்கள், அவளது சைகை , தலையசைவில் அங்க அசைவில் எத்தனை நளினம் பாருங்கள்,காணும் பார்வையாளரை எத்தனை அழகாக இந்த கதைக்குள் சுண்டி இழுக்கிறது,
ராஜா ரவிவர்மாவின் ஓவியத்தை பிரதி எடுத்து நிறைய நிறுவனங்கள் தமது விளம்பரத்தை அமைத்ததை இணைப்பில் பாருங்கள், அதில் textile labels பிரசித்தமானவை, தீப்பெட்டி படங்களைப் போலவே அவை பெரிய அளவில் கவர்ச்சியானவை, நிறைய வாடிக்கையாளர்கள் அந்த ஜவுளி லேபிளை சேகரிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர், இந்த ஓவியங்களை வைத்து அன்றைய நாட்களில் பட்டுப் புடவை கூட நுணுக்கமாக நெய்ததைப் பாருங்கள் .