மன்னவன் வந்தானடி என்ற 1975 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பார்த்தேன்,
இப்படம் துவக்கத்தில் திருநெல்வேலி மாஞ்சோலை என்ற மலைவாசல் தலத்தில் அமைந்திருக்கும் பாம்பே - பர்மா ட்ரேடிங் நிறுவனத்துக்கு அதன் தேயிலை ஆலை மற்றும் தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்ததற்காக நன்றி கார்ட் வந்தது,
இந்த செய்கை மிகவும் surreal ஆக இருந்தது, குற்றவாளி தன் குற்றத்தை சினிமா படமாக எடுக்க தன் குற்றம் இழைக்கும் இடத்தையே படப்பிடிப்பு குழுவினருக்கு தருவது போல இருந்தது.
காரணம் படத்தின் தலையான பிரச்சனை தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, அதை சிவாஜி போராடி தீர்த்து வைக்கும் கதை இது,புரட்சி மசாலா, மாஞ்சோலை தொழிற்சாலை எஸ்டேட் எப்படி இருக்கும் தொழிலாளர் அவதிகள் மையமாக எப்படி எல்லாம் இருந்தது என படம் பார்த்து உணரலாம்
நிஜத்தில் நடந்தது மகா கோரம்.
இந்த தேயிலை நிறுவனம் 1863 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்க முடியாத பிரச்சனை இந்த சம்பள பிரச்சனை , (பரதேசி திரைப்படத்தின் கதையை நினைவு கொள்ளவும்),
ஜூலை 23, 1999 ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அப்போது தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.53 ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஊதியத்தை ரூ.100 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மகப்பேறு விடுப்பு, 8 மணி நேர பணியின் போது பெண்களுக்கு அவ்வப்போது இடைவேளை என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொழிலாளர்களை மோசமான வசதிகள் கொண்ட கொட்டகைகளில் தங்க வைக்கும் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதற்கு அல்லது தோட்டம் வளர்க்கும் உரிமையை மறுக்கும் தோட்ட உரிமையாளர்களின் முடிவையும் அவர்கள் எதிர்த்தனர்.
ஆனால் போராட்டத்தில் புல்லுருவிகள் ஊடுருவி கல்லெறியத் துவங்கினர்,
லத்தியும் துப்பாக்கியும் ஏந்திய பெருமளவிலான போலீசார் போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கி ஆற்றை நோக்கி ஓட வைத்தனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு துரத்தியதால், பலர் அந்த ஆற்றில் இறங்கி பாலத்தில் குதித்து குழந்தைகளை தூக்கி எறிந்து நீரில் மூழ்கினர்.
கூட்டத்தைக் கலைக்க தடியடிப் பிரயோகம் செய்தும், கண்ணீர்ப் புகை வீசியும் விரட்டியடிக்கத் தொடங்கினர் போலீஸார். இருபுறமும் சூழப்பட்ட மக்கள், வேறு வழியின்றி, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடத் தொடங்கினர்.
ஆறடி நீள சவுக்கு கம்புடன் அவர்களைத் துரத்திய போலீசார், அவர்களைத் தண்ணீருக்குள் தள்ளினர். வெளியே வர முயன்றவர்களைக் கம்பால் தாக்கி மீண்டும் உள்ளே தள்ளினர். ஒன்றரை வயதுக் குழந்தை விக்னேஷை இடுப்பில் வைத்தபடி ஓடிய ரத்தினமேரிக்கும் தலையில் அடி விழுந்தது. ஆற்றில் விழும் முன்பு, கையில் இருந்த குழந்தையை நழுவவிட்டார். குழந்தையும் மூச்சு முட்டி இறந்தது. குழந்தையின் மரணம், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கொந்தளிக்க வைத்துவிடும் என்று கருதிய போலீஸார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸ் வேனின் பின் சீட்டில் வைத்து மறைக்கப் பார்த்தனர். இதைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதைப் படமெடுக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் கேமராக்களைப் பிடுங்கி, பிலிம் ரோலை உருவி எறிந்தனர்.ஆற்றில் நீச்சலடித்து மறுகரை ஏறியவர்களையும் போலீஸாரின் சவுக்குக் கம்புகள் பதம் பார்த்தன. மீறி வெளியே வந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பாலம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஈரத் துணியோடு கரையேறிய பெண்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து களேபரம் முடிவுக்கு வந்ததுபோல் இருந்தது. நெல்லை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவே தோன்றியது.
மறுநாள், காலையில் நான்கு பிணங்கள் கரை ஒதுங்கின. அடுத்த நாள் ஆறு பிணங்கள். அதற்கடுத்து மூன்று என எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, விபரீதத்தை மக்கள் உணரத் தொடங்கினர்.
மறு நாள் துவங்கி இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இறந்து போன 17 பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்றரை வயது விக்னேஷ் என்ற குழந்தையும் அடக்கம். மீதி 14 பேர் ஆண்கள்.இன்றைக்கு மாஞ்சோலைத் தோட்டத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தோட்டத் தொழிலாளர்கள் 1500 பேர் இருக்கிறார்கள். சுமார் 300 கேரள மாநிலக் குடும்பங்களும் அங்கே உள்ளன. 200 பேர் மட்டுமே தமிழர்கள். இன்றைய தேதிக்கு ரூ. 252 கூலி எனப் படித்தேன், அன்று ஆட்சியில் இருந்த திமுக அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயராக இந்த எதேச்சாதிகார அடக்குமுறை துயரசம்பவம் அமைந்தது.
விருமாண்டி திரைப்படத்தில் கிணற்றுக்குள் குழந்தையை வீசி எறிகிற உக்கிரமான காட்சி உண்டு,வன்முறைக்கு இரையாவதில் குழந்தைகளும் விதிவிலக்கல்ல என்பதை கொண்ட்ராசுவின் குழந்தையை போலீஸார் கிணற்றில் இருந்து எடுத்து மண்ணில் கிடத்தி போர்த்தியிருக்கும் அந்த காட்சி உணர்த்தும், குழந்தையை பறிகொடுத்த தாய்க்கு குழந்தையை கிணற்றில் எறிந்த நொடியில் அதிர்ச்சியில் சித்தம் கலங்கிவிடும்,
இதே போலவே அன்பே சிவம் திரைப்படத்தில் தன் தொழிலாளர்களுக்கு வெறும் 910₹ (30.33₹ நாள் ஒன்றுக்கு) நக்காபிச்சை சம்பளம் தரும் எதேச்சாதிகார முதலாளியை நாயகன் எதிர்த்து இறுதியில் நல்ல சம்பளம் வாங்கித் தருவதாக காட்டியிருப்பார்.
தன் படைப்புகளில் சமூகம் மீதான அறக்கோபத்தை உண்மையாக வாய்ப்பு கிடைக்கையில் பதிவு செய்திருந்தார் கமல்ஹாசன்.