தமிழன் என்றோர் இனமுண்டு
(நாமக்கல் கவி வெ . இராமலிங்கம்)
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்
கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்
சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கே சொல்
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்