இது தேனாம்பேட்டை செனோடாப் சாலையில் நேற்று எடுத்தபடம், இங்கு இடதுபுறம் இன்று சிகப்பு நிறமுள்ள கருமுத்து மாளிகை உள்ளது, வலப்புறம் அடையாருக்கு செல்லும் செனோடாப் சாலை, பல முக்கிய பிரமுகர்கள் இந்த செனோடாப் சாலை மற்றும் அதன் கிளைச்சாலைகளில் வசிக்கின்றனர், ஜப்பான் தூதரகம் செனடாப் முதல் சாலையில் உள்ளது, பல நிறுவனங்களின் தலைமை அலுவலகம் இங்கே செனோடாப் சாலைகளில் அமைந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சித்தரஞ்சன் சாலையில் (செனோடாப் 2ஆம் தெரு) வசிக்கிறார், செனோடாப் சாலை எனக்கு முதல் தெருவில் 1998 முதல் 2000 வரை ஒரு ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் பணியாற்றுகையில் பரீட்சயமானது , இந்த செனோடாப் சாலைகள் அதன் சுற்றத்தில் பாதசாரியாக அத்தனை அலைந்திருக்கிறேன்,
செனோடாப் என்றால் நினைவுச் சின்னம் என்பதை நான் அறிந்ததால் இதை தேடுகையில் இங்கிருந்த செனோடாப் அப்போது சென்னை துறைமுகம் கட்டப்படும் முன்னர் அங்கு வீற்றிருந்த Bentinck's கட்டிட வளாகத்தில் வலது கோடி முகப்பில் மாற்றப்பட்டதை தெரிந்து கொண்டேன்.
வில்லியம் பென்டிங்க் பிரபு இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் ஆவார் அவர் பெயரில் அமைந்த இந்த மாளிகை ப்ரிட்டீஷ் இந்தியாவில் சுப்ரீம் கோர்டாகவும் கூட செயல்பட்ட வரலாறு உண்டு ,இந்த கட்டிடத்தின் காலம் 1783-1983.
மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்றமில்லாதது, இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு உதாரணமாக இந்த செனோடாப் மற்றும் அதில் இருந்த சார்லஷ் கார்ன்வாலிஸ் பிரபுவின் பளிங்குச் சிலையை சொல்லலாம்.
சார்லஸ் கார்ன்வாலிஸ் பிரபு செய்த வியத்தகு வீரதீர சாதனைகள் ஆட்சித்துறை சாதனைகள், வரிவருவாய் சாதனைகள் சரித்திரப் புகழ்பெற்றவை ஆகும்,அவர் திப்பு சுல்தானை மைசூர் போரில் வெற்றி கொண்டதற்கு கௌரவிக்கும் விதமாக 1799 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எட்டு ionic பாணி தூண்கள் கொண்ட ஒரு Cupola நிறுவி அதன் உள்ளே சார்லஸ் கார்ன்வாலிஸ் பிரபு சிலையை நிறுவினர்.
சார்லஸ் கார்ன்வாலிஸ் பிரபு கல்கத்தாவின் காஸிபூரில் ஆட்சிப்பணியில் இருக்கையில் அக்டோபர் 5 1805 ஆம் ஆண்டு மஞ்சள்காமாலை ஜுரத்தால் மரணித்தார், காசி கங்கைக்கரையில் மிகுந்த கௌரவத்துடன் அடக்கம் செய்யப்பட்டார், அவர் ப்ரிட்டீஷ் இந்தியாவுக்கு ஆற்றிய சேவைகளுக்காக அவருக்கு பல மாகாணங்களில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது,அப்படி 1809 ஆம் ஆண்டு கட்டுமானம் செய்த நினைவுச்சின்னம் தான் இந்த தேனாம்பேட்டை Cenotaph ஆகும்.
சார்லஸ் கார்ன்வாலிஸ் பிரபுவுக்கு இங்கிலாந்தில் இருந்து பிரத்யேகமாக உருவாகி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை எட்டு தூண்கள் கொண்ட cupola உள்ளாக இருந்த 14 அடி உயர பளிங்குச் சிலையை பெயர்த்து கொண்டு வந்து இந்த தேனாம்பேட்டை நினைவுச் சின்னத்தின் உள்ளே நிறுவ இருந்தனர்.
ஆனால் நிறுவமுடியவில்லை,
இன்று அந்த பளிங்குச்சிலை பல பல பல உள்ளே வெளியே அலைக்கழிப்புகளுக்குப் பின்னர் சீந்துவாரின்றி கன்னிமரா நூலகத்தின் அகண்ட மாடிப்படிகள் அருகே தஞ்சம் அடைந்து ஒண்டிக்கிடப்பதைப் பார்க்கலாம்.
1814 ஆம் ஆண்டு சர்வே செய்யப்பட்ட சென்னை வரைபடத்தில் இந்த Cornwallis cenotaph குறிக்கப்பட்டிருப்பதை பாருங்கள், அன்று இந்த cenotaph தான் சென்னை நகரின் எல்லை ஆரம்பத்தையும் எல்லை முடிவையும் குறித்துள்ளது.
இங்கிருந்த long tank என்ற பெரிய ஏரிக்கரையில் காற்று வாங்க ஆங்கிலேய யுவன் யுவதிகள் கோட்டையின் உள்ளே இருந்து தினம் மாலை இங்கு வந்து பொழுது போக்கிவிட்டு திரும்ப சென்றுள்ளதை அறிய முடிகிறது.
இன்று காதலர்களுக்கு எப்படி மெரினா கடற்கரையும் பெசண்ட் நகர் கடற்கரையும் விளங்குகுறதோ? அப்படி இங்கே அன்றைய காதலர்கள் இந்த நினைவுச்சின்னத்தின் உள்ளேயும் வெளியேயும் அப்படி உபயோகித்துள்ளனர்,அதனாலும் கூட இந்த செனோடாப் இங்கிருந்து கௌரவமான இடமான Bentinck's கட்டிட வளாகத்திற்கு மாற்றப்பட்டதை அறிகிறோம்.
இங்கு இந்த வித்தியாசமான கலவையான கட்டிடபாணியில் அமைந்த செனோடாப் பாருங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலையையும் பர்மிய புத்த மடாலய கட்டிடக்கலையின் அம்சமான குவிமாடத்தையும் அதன் உயரே தேவாலய கோபுர தூணையும் அதன் மேலே ( urn )அஸ்திகலசம் வடிவ சொம்பையும் பாருங்கள்.
1809 ஆம் ஆண்டு இது கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் இங்கிலாந்தில் இருந்து அந்த வெற்றிவீரர் கார்ன்வாலீஸ் சிலை வரவில்லை, அதனால் இந்த செனொடாப் முழுக்க பிரிக்கப்பட்டு கப்பலில் இருந்து வரப்போகும் பளிங்குச் சிலையை இறக்கி நிர்மாணிக்க வசதியாக துறைமுகத்தில் நேர் எதிரே அமைந்த Bentinck's கட்டிட வளாகத்தின் வலது நடுப்புறத்தில் பகீரத பிரயத்தனப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது,
இந்த செனோடாப் பல்லாவரம் மலையில் இருந்து தகர்த்தெடுத்து செய்த கருங்கல்லால் ஆனது, சென்னை துறைமுகத்தின் berth களின் அஸ்திவாரம் கூட பல்லாவரம் மலையில் இருந்து தகர்த்தெடுத்து செய்த கருங்கல்லால் ஆனது தான்.
இந்த cenotaph இங்கே பிரித்தெடுத்து கொண்டு வருகையில் வேடிக்கையாக வடிவமைக்கப்பட்டிருந்த புத்த மடாலய குவிமாடம் , அதன் மீதான கோபுரம், கலசம் எல்லாம் ரசனையுடன் நீக்கப்பட்டு
நிர்மாணிக்கப்பட்டது , இன்று Bentinck's கட்டிட வளாகத்தை இடித்து 1984-85 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சிங்காரவேலர் மாளிகையில் janitor room (துப்புறவு சாதன அறை) ஆக பயன்பாட்டில் உள்ளதை அறிய முடிகிறது,
கூகுள் மேப் அம்புக்குறி பார்க்கவும்.
இந்த வடிவமைப்பு மாற்றப்பட்ட cenotaph உள்ளே அன்று கப்பலில் வந்த பளிங்குசிலை நிர்மாணிக்கப்பட்டது, அந்த சிலையின் பீடம் சொல்லும் செய்திக்குறிப்பு மிகுந்த குரூரதையானது, பிள்ளைக்கறி தின்பதற்கு ஒப்பான சித்தரிப்பை கொண்டிருந்தது அந்த புடைப்பு சிற்பம்.அதாவது திப்பு சுல்தானை வெற்றி கொண்ட கார்ன்வாலீஸ் பீடத்தின் மீது போர் வீரன் கவச உடையில்.,
பீடத்தில் திப்பு சுல்தான் தன் இரு மகன்களை கார்ன்வாலீஸிடம் பணயக்கைதிகளாக தான் போர் இழப்பீட்டு தொகையை தரும் வரை ஒப்பு தந்த தருணத்தை சொல்லும் புடைப்பு சிற்பம்,
இங்கு சிலகாலம் நிறுவியிருந்த வெண்பளிங்கு சிலை கடற்காற்றில் உப்பு இறங்கி கருமஞ்சள் நிறமாக மாறத்துவங்கி விட அந்த சிலையை புனித ஜார்ஜ் கோட்டை வளாக முகப்பில் அமைத்த cuppola விற்கு மீண்டும் மாற்றியுள்ளனர்.
பிரிட்டீஷார் இங்கிருந்து கிளம்பியவுடன் waste wealth ஆகி அத்தனை அலைக்கழிக்கப்பட்ட சிலை என்றால் இந்த பளிங்குச்சிலை தான்,பல பல முறை கடப்பாறை வைத்து நெம்பப்பட்டுள்ளது.
இந்த சிலையை இணைப்பு படங்களில் பாருங்கள்.இந்த சிலை முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்களால் 1946 ஆம் ஆண்டு அவர் பதவி ஏற்கையில் இருமுறை புறக்கணிக்கப்பட்டு சீந்துவாரின்றி எழும்பூர் விக்டோரியா நினைவக வளாகத்தில் உள்ள கன்னிமரா நூலகத்தின் ஓரத்தில் இடப்பட்டது சுவையான வரலாற்று நிகழ்வு.
இன்று நாம் காணும் சிங்காரவேலர் மாளிகை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக விளங்குகிறது,
1984 -85 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்து, அந்த இடத்தில் 200 ஆண்டுகள் வீற்றிருந்த Bentinck's மாளிகை 1983 ஆம் ஆண்டு முதல்வர் எம்ஜியார் ஆட்சியில் ,பிரதமர் இந்திரா காந்தி வேண்டுகோளைக் கூட நிராகரித்து இடிக்கப்பட்ட வரலாறும் உண்டு, அன்று சரித்திர ஆர்வலர்கள் எத்தனை போராடியும் அந்த வரலாற்று கட்டிடத்தை காப்பாற்ற முடியவில்லை.
இணைப்பு படங்களை பாருங்கள், இது குறித்து மேலும் தேடிப் படியுங்கள்,நாம் வாழும் நகரின் வரலாற்றை அறிவோம், நகரை நேசிப்போம்.