சென்னை பள்ளிகளில் மெட்ராஸ் ஐ பரவி வருகிறது, இரண்டு நாள் விடுமுறை விட்டாலும் கூட தேவலை எனத் தோன்றுகிறது, என் மகன் வகுப்பில் ஒரு மாணவனுக்கு மெட்ராஸ் ஐ என்று மகன் வந்து சொன்னதும் கிலி பிடித்தது,
இரு தினம் முன்பு தம்பி ஒருவரின் பள்ளி சென்று திரும்பிய மகளுக்கு மெட்ராஸ் ஐ வந்துவிட்டது, அச்சிறுமியின் கைக்குழந்தையான தங்கைக்கு தொற்றியது, நேற்று அந்த தம்பி அவர் மனைவி என ஒரு குடும்பத்தில் முழு சுற்று வந்துவிட்டது மெட்ராஸ் ஐ, எனவே அனைவரும் கவனமாக இருக்கவும்.
மெட்ராஸ் ஐ தொற்றியவர்கள் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவவும். சானிடைசரை வைத்து கைகளை சுத்தம் செய்யவும், சானிடைசரை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
உங்கள் விரல்களால் அல்லது கைக்குட்டை போன்ற எந்தப் பொருளாலும் உங்கள் கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும், எக்காரணம் கொண்டும் உங்கள் செல்போனை அடுத்தவரிடம் தராதீர்கள், அடுத்தவர் செல்போனை தொடாதீர்கள்,உங்களுக்கு call என்றால் வாங்கி பேசாதீர்கள்.
உபயோகித்து முடித்த கண் மருந்துகளை அடுத்தவருக்கு பகிர வேண்டாம்,சொட்டு மருந்து விடும் முன், கண்களை அடிக்கடி சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவவும் டிஸ்போசபிள் டிஷ்யூ வைத்து ஒத்தி ஒத்தி துடைக்கவும். உடனடியாக கைகளை கிருமி நீக்கம் செய்யுங்கள். டிஸ்போசபிள் டிஷ்யூவை பாதுகாப்பாக பாலித்தீன் பையில் அடைத்து சுருக்கிட்டு வெளியேற்றவும்.
நீங்கள் முழுமையாக குணமடையும் வரை உங்கள் வேலை செய்யும் இடம் செல்வதை தவிருங்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவும்.
துண்டுகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் போன்ற நீங்கள் பயன்படுத்தும் எந்த போர்வையும் வெந்நீர் மற்றும் டெட்டால் கொண்டு துவைக்கப்பட்ட பின்னர் தான் மறுபடி உபயோகிக்கப்பட வேண்டும்
கான்டாக்ட் லென்ஸ் அல்லது கண் அல்லது முக ஒப்பனை எதுவும் ஒரு வாரம் அணிய வேண்டாம்.
நீச்சல் குளத்திற்குச் செல்வதை ஜிம் அல்லது நடைபயிற்சி செய்ய செல்வதை தவிர்க்கவும்.
நீங்கள் மெட்ராஸ் ஐயில் இருந்து மீண்டவுடன் உபயோகித்த கருப்பு கணரணாடிகள், கண் கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள்,ஹெல்மெட் ஆகியவற்றை கிருமி நீக்கம் செய்யுங்கள்
ஒரு கண் மட்டும் பாதிக்கப்பட்டால், மற்றொரு கண்ணைத் தொடாதீர்கள்,கண்ணாடி பார்க்காதீர்கள்,குழந்தைகளை தொட்டு தூக்கி கொஞ்சாதீர்கள்.
பாதிக்கப்பட்ட கண்ணை ஆற்றுவதற்கு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் சுத்தமான துண்டை முக்கி எடுத்து ஒத்தடம் கொடுங்கள், ஐஸ்பேக் வையுங்கள், அதன் பிறகு கைகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்,தனிமைப்படுத்துதலும் நல்ல ஓய்வும் மெட்ராஸ் ஐயில் இருந்து துரிதமாக குணம் பெற ஒரே வழி.